முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மொரானியின் இடைக்கால ஜாமீன் மனு தள்ளுபடி

புதன்கிழமை, 20 ஜூலை 2011      ஊழல்
Image Unavailable

 

புதுடெல்லி,ஜூலை,20 - 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள திரைப்பட தயாரிப்பாளர் கரீம் மொரானியின் இடைக்கால ஜாமீன் மனுவை டெல்லி ஐகோர்ட்டு தள்ளுபடி செய்துவிட்டது. இந்த வழக்கில் உரிய காலத்தில் ஜாமீன் மனுவை தாக்கல் செய்யும்படியும் மொரானிக்கு கோர்ட்டு அறிவுரை கூறியுள்ளது. 

ரூ.1 லட்சத்து 76 ஆயிரம் கோடி 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் சினியுக் நிறுவனரும் திரைப்பட தயாரிப்பாளருமான கரீம் மொரானி கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர், தமக்கு உடல்நிலை சரியில்லை என்றும் டாக்டரிடம் மருத்துவ ஆலோசனை கேட்பதற்காக தமக்கு 4 வாரங்கள் இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டும் என்றும் கோரி டெல்லி ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவில் தமக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டிருக்கிறது. சிறையில் என்னை தொடர்ந்து அடைத்திருந்தால் உடல்நிலை மேலும் மோசமாகிவிடும். எனக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை முறையை அடிப்படையாக வைத்து மன அழுத்தம் இருக்கக்கூடாது என்றும் அப்படி மன அழுத்தம் இருந்தால் உடல்நலம் மேலும் பாதிக்கப்படும் என்றும் டாக்டர்கள் ஆலோசனை கூறியுள்ளனர். மன அழுத்தத்தை தவிர்க்க வேண்டும் என்றும் டாக்டர்கள் கூறியுள்ளனர். அதனால் டாக்டர்களை அணுகி மருத்துவ ஆலோசனை பெறுவதற்காக எனக்கு 4 வாரம் இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டும் என்று அந்த மனுவில் மொரானி கூறியிருந்தார். இந்த மனு நேற்று நீதிபதி அஜித் பரிஹோகே முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மொரானி சார்பாக ஆஜரான வழக்கறிஞரும் இதே வாதத்தை எடுத்துரைத்தார். மொரானிக்கு ஜாமீன் தர சி.பி.ஐ. தரப்பில் எதிர்ப்பு தெரிவித்தது. மொரானியின் உடல் ஆரோக்கியம் குறித்த தற்போதையை அறிக்கையை வைத்து இந்த எதிர்ப்பை சி.பி.ஐ. தெரிவித்தது. மொரானியின் தற்போதைய அறிக்கையில் அவருக்கு ரத்த அழுத்தமும் இருதய துடிப்பும் சரியான முறையில்தான் இருக்கிறது. அவருக்கு இருதய நோய் பிரச்சினை கூட மருத்துவமனையில் சிகிச்சை பெறும் அளவுக்கு இல்லை. அவரது இருதய ரத்த குழாயில் ரத்த ஓட்டம் சீராகத்தான் இருக்கிறது. அதனால் மொரானிக்கு இடைக்கால ஜாமீன் வழங்கக்கூடாது என்று சி.பி.ஐ. தரப்பில் வலியுறுத்தப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்டு மொரானிக்கு இடைக்கால ஜாமீன் வழங்க நீதிபதி அஜித் பரிஹோகே மறுத்துவிட்டார். இந்த வழக்கில் சரியான நேரத்தில் ஜாமீன் மனுவை தாக்கல் செய்யும்படியும் மொரானியை நீதிபதி அஜித் பரிஹோகே தீர்ப்பு வழங்கினார். 

2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேட்டில் ஆதாயம் அடைந்த புரமோட்டர் ஷாஹித் உஸ்மான் பல்வா கம்பெனியில் இருந்து சினியுக் நிறுவனர் மொரானி மூலமாக கலைஞர் டி.வி.க்கு ரூ.214 கோடி கைமாறியிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையொட்டி 53 வயதாகும் மொரானி கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 2 ஜிஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் கருணாநிதி மகள் கனிமொழி உள்பட 13 பேர் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் ஸ்வான் தகவல் தொடர்பு கம்பெனி, யுனிடெக் வயர்லெஸ் (தமிழ்நாடு) லிமிடெட்,ரிலையன்ஸ் தகவல் தொடர்பு கம்பெனி ஆகிய கம்பெனிகளும் ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு குற்றச்சாட்டில் சேர்க்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony