முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமர்சிங்கிடம் விசாரணை நடத்த துணை ஜனாதிபதி அனுமதி

வியாழக்கிழமை, 21 ஜூலை 2011      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி,ஜூலை.21 - பாராளுமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை ஓட்டெடுப்பில் எம்.பி.க்களுக்கு லஞ்சம் கொடுத்ததாக தொடரப்பட்டுள்ள வழக்கில் சமாஜ்வாடி கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளர் அமர்சிங்கிடம் விசாரணை நடத்த பாராளுமன்ற ராஜ்ய சபை தலைவரும் துணை ஜனாதிபதியுமான ஹமீத் அன்சாரி அனுமதி அளித்துள்ளார். 

அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையே கடந்த 2008-ம் ஆண்டு அணுசக்தி ஒப்பந்தம் ஏற்பட்டது. இதனால் அமெரிக்காவின் கைக்கூலியாக இந்தியா மாறிவிடும் என்று கூறி இடதுசாரி கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இந்த எதிர்ப்பையும் மீறி ஒப்பந்தம் கையெழுத்தாகியது. இதனால் ஆத்திரம் அடைந்த இடதுசாரி கட்சிகள் அப்போதும் மத்தியில் இருந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு கொடுத்து வந்த ஆதரவை வாபஸ் பெற்றன. இடதுசாரி கட்சிகளிடத்தில் 70-க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் இருந்ததால் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு அப்போது நம்பிக்கையை இழந்தது. இதனையொட்டி பெரும்பான்மையை நிரூபிப்பதற்காக பாராளுமன்றத்தில் மன்மோகன் சிங் அரசு நம்பிக்கை கோரியது. அதில் மன்மோகன் சிங் வெற்றி பெற்றது. இதற்கு முக்கிய காரணம் முலாயம் சிங் யாதவ் தலைமையிலான சமாஜ்வாடி கட்சிதான் காரணம். நம்பிக்கை ஓட்டெடுப்பு நடைபெற்ற நேரத்தில் அந்த கட்சியின் பொதுச்செயலாளராக அமர்சிங் இருந்தார். நம்பிக்கை ஓட்டெடுப்பில் வெற்றிபெற பாரதிய ஜனதா எம்.பி.க்களுக்கு கோடிக்கணக்கில் லஞ்சம் கொடுத்ததாகவும் அந்த லஞச்ப்பணத்தை அந்த எம்.பி.க்களே பாராளுமன்றத்திற்கு கொண்டு வந்து காட்டினர். இந்த லஞ்சப்பணம் கொடுக்கப்பட்டதற்கு அமர்சிங்தான் முக்கிய பங்கு வகித்துள்ளார் என்று கூறப்படுகிறது. இந்த பிரச்சினையால் பாராளுமன்றத்தில் பெரும் கூச்சல் குழப்பம் ஏற்பட்டதோடு நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக டெல்லி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். ஆனால் விசாரணை மந்தமாக நடைபெற்றுக்கொண்டியிருந்தது. மேலும் இதுதொடர்பாக குற்றவாளிகள் யாரும் கைது செய்யப்படவில்லை. அதனால் டெல்லி போலீசாருக்கு சுப்ரீம்கோர்ட்டு கடும் கண்டனம் தெரிவித்ததோடு விசாரணையை விரைவுபடுத்தவும் உத்தரவிட்டது. இதனால் சுறுசுறுப்படைந்த டெல்லி போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியதோடு கடந்த பல நாட்களுக்கு முன்பு அமர்சிங்கின் உதவியாளர் சஞ்சீவ் சக்சேனா என்பவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் விசாரணை நடத்தியதில் அமர்சிங்குக்கும் இதில் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அவரிடம் விசாரணை நடத்த அனுமதிக்கக்கோரி மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு டெல்லி போலீசார் கடிதம் எழுதினர். அந்த கடிதத்தை மத்திய உள்துறை அமைச்சகமானது ராஜ்யசபை தலைவரும் துணைஜனாதிபதியுமான ஹமீத் அன்சாரிக்கு அனுப்பியது. அந்த கடிதத்தை பரிசீலனை செய்த அன்சாரி, அமர்சிங்கிடம் விசாரணை நடத்த டெல்லி போலீசாருக்கு அனுமதி அளித்துள்ளார். ஒரு எம்.பி.யை விசாரணை நடத்த வேண்டுமென்றால் பாராளுமன்ற சபாநாயகர் அனுமதி அளிக்க வேண்டும் என்பது விதிமுறையாகும். ராஜ்யசபை தலைவராக அன்சாரி இருப்பதால் அவருடை அனுமதி தேவையாக இருந்தது. இதனையொட்டி அமர்சிங்கிடம் விரைவில் விசாரணை நடத்தப்பட்டு அவரை போலீசார் கைது செய்யலாம் என்று தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்