காங். தலைவர் சோனியா காந்திக்கு அறுவை சிகிச்சை

Image Unavailable

 

புது டெல்லி,ஆக.6 - காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்திக்கு அமெரிக்காவில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக செய்தி வெளியாகி உள்ளது. ஆனால் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு ஏதும் வெளியிடப்படவில்லை. 

அவருக்கு வெளிநாட்டில் அறுவை சிகிச்சை அளிக்கப்பட இருப்பதால் கட்சி பொறுப்பை கவனிப்பதற்கு ராகுல் காந்தி தலைமையில் நால்வர் குழு அமைக்கப்பட்டுள்ளது என காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜனார்த்தனன் திரிவேதி தெரிவித்தார். சிகிச்சை பெற்று அவர் இந்தியா திரும்ப ஒரு மாத காலமாகலாம். ராகுல் காந்தியை தவிர இக்குழுவில் பாதுகாப்பு துறை அமைச்சர் ஏ.கே. அந்தோணி சோனியாவின் அரசியல் செயலர் அகமது பட்டேல் மற்றும் ஜனார்தனன் திரிவேதி ஆகியோர் உள்ளனர். 

ஜனார்த்தனன் திரிவேதி நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசும் போது, மருத்துவ சிகிச்சைக்காக சோனியா வெளிநாடு சென்றுள்ளார். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு இன்னும் ஓரிரண்டு நாட்களில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படவுள்ளது என்று கூறினார். 

காங்கிரஸ் கட்சி திடீரென்று வெளியிட்ட செய்தி பலருக்கு ஆச்சரியத்தை தந்துள்ளது. சோனியா வெளிநாடு சென்றுள்ளார் என்பதே எவரும் அறியாததாக இருந்தது. 64 வயதாகும் சோனியா காந்திவுக்கு என்ன உடல்நலக் குறைவு என்பது தெரிவிக்கப்படவில்லை. அவர் தனது மகன் ராகுலுடன் எந்த நாட்டுக்கு சென்றுள்ளார் என்பதையும் கட்சியினர் அதிகாரபூர்வமாக கூற மறுத்து விட்டாலும் அவர் அமெரிக்காவுக்கு சென்றுள்ளார் என்பது மட்டும் தெரியவந்துள்ளது. 

அங்கு நியுயார்க்கில் உள்ள ஸ்லோன் கெட்டரிங் மருத்துவமனையில் நேற்று முன்தினம் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதாக தெரிகிறது. இது புற்று நோய் சிகிச்சைக்கு புகழ் பெற்ற மருத்துவமனையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ