முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தனி தெலுங்கானா விவகாரம்: சிதம்பரம் வேண்டுகோள்

வெள்ளிக்கிழமை, 5 ஆகஸ்ட் 2011      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி, ஆக.6 - தனி தெலுங்கானா விவகாரத்தில் கலந்தாலோசனை நடவடிக்கைகளை அனுமதிக்க வேண்டும் என்றும் இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டுள்ள அனைத்து தரப்பினரையும் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஆந்திர மாநிலத்தை இரண்டாக பிரித்து தனி தெலுங்கானா மாநிலம் அமைக்க வேண்டும் என்று தெலுங்கானா பகுதியைச் சேர்ந்த மக்கள் போராடி வருகின்றனர். 

தனி தெலுங்கானா மாநிலம் அமைக்கப்படும் என்று உறுதி கூறிய மத்திய அரசு, இது குறித்த பரிந்துரைகளை அளிக்க ஸ்ரீ கிருஷ்ணா கமிட்டியை அறிவித்தது. ஆனால் அந்த கமிட்டி  திட்டவட்டமான பரிந்துரைகளை கூறாமல் 6 விதமான வாய்ப்புக்களை பரிந்துரை  செய்தது. இந்த  நிலையில் தனி தெலுங்கானா அமைத்தே ஆக வேண்டும் என்றும் இது தொடர்பாக மத்திய அரசு விரைவில் அறிவிப்பு வெளியிட  வேண்டும் என்றும்  தெலுங்கானா பகுதியை  சேர்ந்த ஆந்திர அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்து போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.

இந்த  நிலையில் பாராளுமன்றத்தின்  லோக் சபையில் நேற்று தனி தெலுங்கானா மாநிலம்  தொடர்பாக கவன ஈர்ப்பு  தீர்மானம் ஒன்று  கொண்டு வரப்பட்டது.

இந்த  கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு  பதில் அளிக்கும் வகையில் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம்  அறிக்கை ஒன்றை  வாசித்தார். தனி தெலுங்கானா மாநிலம் தொடர்பாக தீர்க்கமான முடிவு ஒன்றை எடுக்க ஆந்திர மாநிலத்தை  சேர்ந்த அனைத்து தரப்பு மக்களும்  இது தொடர்பான கலந்தாய்வு  நடவடிக்கைகளை அனுமதிக்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் அவர்  கேட்டுக்கொண்டார்.

தனித் தெலுங்கானா தொடர்பாக அமைக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி கிருஷ்ணா  தலைமையிலான 5 பேர் கொண்ட கமிட்டியின்  அறிக்கையை அனைத்து அரசியல் கட்சிகளும் பரிசீலனை  செய்ய  வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

ஸ்ரீ கிருஷ்ணா பரிந்துரைகளில் கூறப்பட்டுள்ள வாய்ப்புக்களில் ஏதாவது  ஒன்றை  அனைத்து அரசியல் கட்சிகளும் பரிசீலனை  செய்ய  வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

ஆந்திர மாநிலத்தின் அனைத்து  அரசியல் கட்சிகளுடனும் ஆலோசனைகள் தொடர்ந்து  நடத்தப்பட்டு  வருகின்றன. இந்த ஆலோசனைகளுக்கு பிறகு  பொருத்தமான முடிவு  எடுக்கப்படும் என்றும் அவர் உறுதி அளித்தார்.

ஆந்திர பிரதேசத்தில் சட்டம் ஒழுங்கு மற்றும் அரசியல்  சூழ்நிலைகளை மத்திய அரசு உன்னிப்பாக  கவனித்து  வருகிறது என்றும் அவர்  சொன்னார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்