காஷ்மீரில் பிரிவினைவாத தலைவர்களுக்கு வீட்டுக்காவல்

Image Unavailable

 

ஸ்ரீநகர், ஆக.6 - காஷ்மீர் மாநிலத்தில் குரியத் மாநாட்டு அமைப்பின் இரு பிரிவுகளின் தலைவர்கள் உள்பட ஏராளமான பிரிவினைவாத தலைவர்கள் நேற்று வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். காஷ்மீர் மாநிலத்தில் கடந்த வாரம் போலீஸ் காவலில் இருந்த வாலிபர் ஒருவர் மர்மமான முறையில் மரணம் அடைந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காஷ்மீர் மாநிலத்தின் பல பகுதிகளில் கடந்த ஒரு வார காலமாக வன்முறை சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்த வன்முறை சம்பவங்கள் தற்போது அதிகமாக தலைதூக்கியதை அடுத்து பிரிவினைவாத தலைவர்கள் பலர் ஸ்ரீநகரில் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

குரியத் மாநாட்டு கட்சி என்ற அமைப்பின் இரு பிரிவுகளின் தலைவர்களான சையது அலி ஷா  கிலானி, மீர்வாய்ஸ் உமர் பரூக் ஆகியோர் அவர்களது வீடுகளில் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இதே போல மேலும் பல பிரிவினைவாத தலைவர்களும் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேறக்கூடாது என்று போலீசார் தடை உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

இவர்களது வீடுகளை சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

முன் எச்சரிக்கை நடவடிக்கையாக இவர்கள் வீட்டுக்காவலில் சிறை வைக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

நேற்று வெள்ளிக்கிழமை என்பதால் தொழுகை செய்வதற்காக கூடும் கூட்டங்களின் போது  அசம்பாவிதங்கள் நேராமல் தடுக்கும் நோக்கத்துடனேயே இவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

போலீஸ் காவலில் வாலிபர் மரணம் அடைந்ததற்கு கண்டனம் தெரிவித்து நேற்று கண்டன பேரணி நடத்த கிலானி திட்டமிட்டு இருந்தார் என்றும், அதைத் தடுக்கும் நோக்கத்திலேயே போலீசார் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர் என்றும் பிரிவினைவாத தலைவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ