முக்கிய செய்திகள்

கடாபி எங்கே? தேடுதல் வேட்டை நடத்துகிறது

புதன்கிழமை, 24 ஆகஸ்ட் 2011      உலகம்
Image Unavailable

 

திரிபோலி,ஆக.24 ​- லிபியாவில் உள்நாட்டு போர் முடிவுக்கு வந்துள்ளது. அங்கு அதிபராக இருந்த கடாபியை புரட்சிப் படையினர் தேடி வருகின்றனர். லிபியாவின் அதிபர் கடாபியின் சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுந்தார்கள். புரட்சிப் படையினர் விதித்த நிபந்தனைகளை கடாபி ஏற்கவில்லை. இதையடுத்து அவரது ஆட்சியை தூக்கியெறிவதற்காக புரட்சிப் படையினர் எதிர்த்து நின்றனர். கடாபி பதவி விலக வேண்டும் என்று அமெரிக்காவும் வலியுறுத்தியது. பல்வேறு நாட்டு தலைவர்களும் வற்புறுத்தினார்கள். ஆனால் அவற்றை எல்லாம் கடாபி கண்டு கொள்ளவில்லை. 

இதனால் புரட்சிப் படையினர் தலைநகர் திரிபோலி உட்பட அனைத்து பகுதிகளையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். திரிபோலியின் பிரதான பகுதியான பசுமை சதுக்கத்தில் கடாபியின் இல்லத்தை தாக்கினார்கள். அந்த இல்லம் தரைமட்டமானது. ஆனால் அங்கு கடாபி இல்லை. அவர் வேறு எங்கேனும் பதுங்கியிருக்கலாம் என்று புரட்சி படையினர் கருதுகின்றனர். இதற்கிடையே கடாபியின் மகன் சையீப் அல் இஸ்லாமை கைது செய்து விட்டதாக புரட்சிப் படையினர் தெரிவித்தனர். அவரை விரைவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப் போவதாகவும் அறிவித்துள்ளனர். கடாபி எங்கே பதுங்கியிருக்கிறார் என புரட்சிப் படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். அவரை ஒழிக்கும் வரை நாங்கள் ஓயப்போவதில்லை என புரட்சிப் படையினர் சூளுரைத்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்: