முக்கிய செய்திகள்

பாகிஸ்தான் உளவு அமைப்பிற்கு அமெரிக்கா எச்சரிக்கை

வியாழக்கிழமை, 22 செப்டம்பர் 2011      உலகம்
Image Unavailable

 

வாஷிங்டன், செப்.22 - தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு வைத்துக்கொள்வதை நிறுத்திக்கொள்ள வேண்டும். இல்லையேல் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.க்கு அமெரிக்கா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.  ஆப்கானிஸ்தானில் முன்னாள் அதிபர் ரப்பானி காபூல் நகரில் தீவிரவாதிகளால் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இதற்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதிகள்தான் இதுபோன்ற தாக்குதலை நடத்தி இருக்கிறார்கள் என்று அமெரிக்கா கருதுகிறது. தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. உடந்தையாக செயல்பட்டு வருவதாக அமெரிக்கா சந்தேகிக்கிறது. எனவே தீவிரவாத அமைப்புகளுடன் ஐ.எஸ்.ஐ.தனது உறவை முறித்துக்கொள்ள வேண்டும். இல்லையேல் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. 

ஆப்கானிஸ்தான் எல்லையோரம் உள்ள பாகிஸ்தான் பகுதிக்குள் தங்கியுள்ள தீவிரவாதிகளை ஒடுக்க வேண்டும் என்று பாகிஸ்தான் அரசுக்கும் அமெரிக்கா வேண்டுகோள் விடுத்துள்ளது. பாகிஸ்தானில் இருக்கும் தீவிரவாதிகள் ஆப்கானிஸ்தானில் நுழைந்து தாக்குதல்களை நடத்திவருவதாகவும் இதற்கு ஐ.எஸ்.ஐ. உளவு அமைப்பு உடந்தையாக செயல்பட்டு வருவதாகவும் அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. இந்த எச்சரிக்கையை அமெரிக்க முப்படைகளின் தலைவர் மைக் முல்லன் விடுத்துள்ளார். ரப்பானியை கொலை செய்ததன் மூலம் ஆப்கானிஸ்தானின் அமைதியை சீர்குலைத்துவிட முடியாது என்று உலக தலைவர்கள் கூறியுள்ளனர். வாஷிங்டனில் உள்ள அமெரிக்க ராணுவ தலைமையகத்தில் ராணுவ அமைச்சர் லியோல் பேலட்டாவுடன் முல்லன் ஆலோசனை நடத்தினார். அதன்பிறகு அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது மேற்கண்ட தகவல்களை அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: