முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

துணை பொதுச்செயலாளர் பதவியிலிருந்து பரிதி ராஜினாமா

ஞாயிற்றுக்கிழமை, 9 அக்டோபர் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, அக்.9 - தி.மு.க.வில் கோஷ்டி பூசல் வெடிக்க துவங்கி உள்ளது. கட்சியில் உள்கட்சி ஜனநாயகம் இல்லை என கருணாநிதிக்கு கடிதம் எழுதியுள்ள தி.மு.க. துணைப்பொதுச்செயலாளர் பரிதி இளம் வழுதி தனது கட்சி பதவியை ராஜினாமா செய்துள்ளார். தி.மு.க.வை பற்றி கருணாநிதி இரும்பு கோட்டை அதை தகர்க்க யாராவது பிறந்து வரவேண்டும் என்று பெருமையாக குறிப்பிடுவார். தற்போது இரும்பு கோட்டை துருப்பிடிக்க துவங்கி உள்ளது. குடும்பத்தாரை விரும்பிய பதவிகளில் வைத்து அழகு பார்த்து கருணாநிதி அதற்கான பலனை கடந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வுக்கு கிடைத்த படுதோல்வி மூலம் பெற்றார்.

சிறையில் கனிமொழி பற்றி கவலைப்படும் கருணாநிதி நில அபகரிப்பு உட்பட பல்வேறு வழக்குகளில் கைதாகும் தி.மு.க.வினர் பற்றி சிறிது கூட கவலைப்படாதது கட்சிக்குள் பலரையும் எரிச்சலுக்கு ஆளாக்கி வருகிறது.

கட்சி தோற்றதற்கு காரணம் குடும்பத்தார் கட்சியில் நடத்தும் ஆதிக்க அரசியல் என்று பலரும் வெளிப்படையாக பேச துவங்கி விட்டனர்.

ஒருபுறம் மு.க.ஸ்டாலின் மறுபுறம் அழகிரி இடையே நடக்கும் சண்டை மேலுக்கு மறைக்கப்பட்டாலும் உள்ளாட்சி தேர்தல் வேட்பாளர் தேர்விலும் எதிரொலித்தது. அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டு தி.மு.க.வில் இணைந்த சேகர்பாபுவுக்கு அளிக்கப்படும் அதிகப்படியான முக்கியத்துவம் வி.எஸ்.பாபுவுக்கும், பரிதி இளம் வழுதிக்கும் கடும் எரிச்சலை ஏற்படுத்தி வந்தது. ஸ்டாலினுக்கும் சேகர்பாபுவுக்கும் உள்ள நெருக்கம் காரணமாக வி.எஸ்.பாபுவின் மாவட்டச் செயலாளர் பதவி பறிக்கப்பட்டது என்று கூறப்பட்டது.

திரைப்பட நடிகர் தியாகு தி.மு.க.வில் ஆரம்பம் முதல் தி.மு.க.வில் பாடுபட்டு வந்தவர் ஆனால் அவருக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படாததால் வருத்தத்துடன் வெளியேறிய அவர் அ.தி.மு.க.வில் இணைந்தார். இதேபோல் பல இரண்டாம் கட்ட தலைவவ்கள் கடும் ஆத்திரத்துடன் உள்ளனர்.

கடந்த சட்டமன்ற தேர்தலில் கடுமையான தோல்வியை தழுவிய கருணாநிதி அதற்கான காரணங்களை ஏற்று கொள்ளாமல் இன்றுவரை காகித அறிக்கை அரசியல் மட்டுமே நடத்தி வருவதும் தன் மகளை வெளியே கொண்டு வருவதை பற்றி மட்டுமே கவலைப்பட்டு அதற்கான வேலைகளில் மட்டும் ஈடுபடுவது தி.மு.க.வினரிடையே பெரும் எரிச்சலை கிளப்பி உள்ளது.

கடந்த சட்டமன்ற தேர்தலில் எப்படியாவது ஜெயித்து விடவேண்டும் என்பதற்காக பல தி.மு.க அமைச்சர்களும் பல்வேறு சித்து வேலைகளை தனது தொகுதியில் செய்தனர். வாக்காளருக்கு பணம் கொடுப்பது உட்பட பல்வேறு வேலைகளை தனது தொகுதிக்குட்பட்ட பொறுப்பாளர்களிடம் ஒப்படைத்தனர். வழக்கம் போல் ஓட்டுக்கு பணம் கொடுத்து ஜெயித்து விடலாம் என்று எண்ணியிருந்தனர்.

இதேபோல் எழும்பூர் தொகுதியில் போட்டியிட்ட பரிதி இளம் வழுதி பணத்தை தண்ணீராக இறைத்தார். தொகுதியில் வேலை செய்ய பலரை பொறுப்பாளராக போட்டிருந்தார். இதில் கட்சிக்காரர்கள் வைத்த உள்ளடி காரணமாகவும் பொதுமக்களின் கடும் எதிர்ப்பு காரணமாகவும் முதல்முறையாக போட்டியிட்ட அ.தி.மு.க கூட்டணியில் உள்ள தே.மு.தி.க. வேட்பாளர் நல்லதம்பியிடம் தோற்றுபோனார்.

தனது தோல்விக்கு எழும்பூர் பகுதியை சேர்ந்த தலைமை கழக பேச்சாளர் கு.வீராசாமி 103-வது வட்ட தி.மு.க. செயலாளர் ஜெ.கிருஷ்ணமூர்த்தி பொதுக்குழு உறுப்பினர் கே.எஸ்.எம்.நாதன் ஆகியோர் காரணம் என்று பரிதி அளித்த புகாரின் பேரில் 3 பேரும் கட்சியை விட்டு தற்காலிகமாக நீக்கப்பட்டனர்.

இதில் எழும்பூர் கு.வீராசாமி பரிதி இளம் வழுதி டவுசர் போட்ட காலத்திலேயே தி.மு.க.வில் பேச்சாளராக இருந்தவர். இவர்கள் 3 பேரும் சேகர்பாபுவை பிடித்து ஸ்டாலினுடன் பேசி சரி செய்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் தற்காலிகமாக கட்சியை விட்டு நீக்கப்பட்ட 3 பேரையும் தொடர்ந்து பணியாற்றிட அனுமதிக்கப்படுவார்கள் என்று பொதுச்செயலாளர் அன்பழகன் அறிவித்திருந்தார்.

இதனால் கடும் வெறுப்படைந்த பரிதி இளம் வழுதி தனது துணைபொதுச் செயலாளர் பதவியை ராஜினாமா செய்து கருணாநிதிக்கு கடிதம் எழுதி அனுப்பினர். தனது விலகல் கடிதத்தில் கட்சியில் உள்கட்சி ஜனநாயகம் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

பரிதி இளம் வழுதி ஸ்டாலினுக்கு மிக நெருக்கமானவர் கருணாநிதிக்கும் நெருக்கமானவர் கருணாநிதியை அப்பா என்று தான் அழைப்பார். அப்படிப்பட்ட பரிதி இளம் வழுதி தி.மு.க. தலைமையை விமர்சித்து விலகல் கடிதம் எழுதி அனுப்பி இருப்பது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony