முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளாக மேலும் 2 பேர் பதவி ஏற்றனர்

செவ்வாய்க்கிழமை, 11 அக்டோபர் 2011      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, அக்.- 11 - சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளாக மேலும் 2 பேர் நேற்று பதவி ஏற்றுக்கொண்டனர். இதை அடுத்து சுப்ரீம் கோர்ட்டு  நீதிபதிகளின் எண்ணிக்கை 28 ஆக அதிகரித்துள்ளது. டெல்லி ஐகோர்ட்டு  தலைமை நீதிபதியாக இருந்த  தீபக்மிஸ்ரா,  கேரள ஐகோர்ட்டு  தலைமை நீதிபதியாக இருந்த ஜஸ்தி செலமேஸ்வர் ஆகியோர் சுப்ரீம் கோர்ட்டு  நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் நேற்று சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளாக முறைப்படி பதவி ஏற்றுக்கொண்டனர். இவர்கள் இருவருக்கும் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியும் இந்திய தலைமை நீதிபதியுமான எஸ்.எச். கபாடியா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். 1953-ம் ஆண்டு  பிறந்த மிஸ்ரா 1977 ல் வக்கீல் படிப்பை முடித்து வக்கீல் ஆனார். சிவில், கிரிமினல், சர்வீஸ் மற்றும் விற்பனை வரி  போன்ற பல்வேறு விஷயங்கள் தொடர்பாக இவர் வக்கீலாக பணியாற்றினார். பிறகு ஒரிஸ்ஸா ஐகோர்ட்டில் நீதிபதியாக பணியாற்றினார். அதன் பிறகு மத்திய பிரதேச ஐகோர்ட்டிலும் இவர் நீதிபதியாக பணியாற்றினார். பல்வேறு பதவி உயர்வுகளை பெற்ற இவர் கடந்த  மே மாதம் டெல்லி ஐகோர்ட்டின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டு இப்போது சுப்ரீம் கோர்ட்டு  நீதிபதியாக பதவி உயர்வு பெற்றுள்ளார். 1953-ம் ஆண்டு பிறந்த செலமேஸ்வர்  1976-ல் ஆந்திர ஐகோர்ட்டில் வக்கீலாக பணியாற்றி வந்தார். சென்ட்ரல் எக்சைஸ், கஸ்டம்ஸ் மற்றும் வருமான வரி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் வக்கீலாக வாதாடி சேவை புரிந்தார்.  அதன் பிறகு  ஐகோர்ட்டு நீதிபதியாக பதவி உயர்வு பெற்ற செலமேஸ்வர்  பல்வேறு பதவி உயர்வுகளைப் பெற்று கடந்த மார்ச் மாதம் கேரள ஐகோர்ட்டு  தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அதன் பிறகு இப்போது சுப்ரீம் கோர்ட்டு  நீதிபதியாக பதவி ஏற்றுக்கொண்டுள்ளார். இவர்கள் இருவரும் சுப்ரீம் கோர்ட்டு  நீதிபதிகளாக பதவி ஏற்றுக்கொண்டதை அடுத்து சுப்ரீம் கோர்ட்டு  நீதிபதிகளின் எண்ணிக்கை  தற்போது 26 லிருந்து  28 ஆக அதிகரித்துள்ளது.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்