முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகிஸ்தானுடன் போரிடத் தயார்: ஹசாரே ஆவேசம்

வியாழக்கிழமை, 20 அக்டோபர் 2011      ஊழல்
Image Unavailable

மும்பை, அக். 20 - இப்போது போர் வந்தால் கூட நான் பாகிஸ்தானுக்கு எதிராக களத்தில் இறங்கி போரிட தயார் என்று அன்னா ஹசாரே ஆவேசமாக கூறியுள்ளார். காஷ்மீர் குறித்து ஹசாரே குழுவை சேர்ந்த பிரசாந்த் பூஷன் தெரிவித்த கருத்துக்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளன. இதையடுத்து டெல்லியில் உள்ள அவரது அலுவலகத்தில் வைத்தே பூஷன் தாக்கப்பட்டார். அதே போல அரவிந்த் கெஜ்ரிவாலும் தாக்கப்பட்டார். இந்த நிலையில் அன்னா ஹசாரே காஷ்மீர் குறித்த தனது கருத்தை தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். அதில் உண்மை நிலவரம் தெரியாமலேயே காஷ்மீர் குறித்த பொருத்தமில்லாத கருத்துக்களை சிலர் பேசி வருகிறார்கள். நான் இந்திய ராணுவத்தில் இருந்தவன் என்பதை அவர்கள் மறந்து விட்டார்கள். இந்தியா, பாகிஸ்தான் யுத்தத்தில் நான் ஒரு சாதாரணமான வீரனாக இருந்து செயல்பட்டவன் என்பதை மறந்து விட்டார்கள். என்னுடன் போரில் ஈடுபட்ட பலர் வீர மரணமடைந்தனர். ஆனால் நான் மட்டும் ஆச்சரியமான வகையில் தப்பினேன். அப்போதுதான் நான் முடிவெடுத்தேன். எனது மீதமுள்ள வாழ்க்கையின் இறுதி வரை நாட்டுக்கு சேவையாற்ற வேண்டும் என்று. பாகிஸ்தானியர் எனக்கு பரிசாக விட்டுச் சென்ற தழும்பு இப்போதும் கூட என் நெற்றியில் பார்க்கலாம். காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி. அது அப்படியேதான் இருக்கும் என்ற ஆழமான கருத்துக்கு இது ஒன்றே சாட்சியாகும். இப்போதும் கூட பாகிஸ்தானுடன் யுத்தம் வந்தால் போரிட நான் தயாராக இருக்கிறேன். ஆனால் சிலர் வெறுமனே பேச மட்டும் செய்கிறார்கள் என்றார் அவர். தனது கடிதத்தில் காஷ்மீர் குறித்து பூஷன் தெரிவித்த கருத்துக்கள் தவறு என்பதை மறைமுகமாக சுட்டிக் காட்டியுள்ளார் ஹசாரே. இதன் மூலம் ஹசாரே குழுவினருக்கும், பூஷனுக்கும் இடையிலான கருத்து வேறுபாடு அதிகரித்திருப்பதாக கருதப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!