முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காதலியை மணந்தார் பி.வாசு மகன் - ரஜினி வாழ்த்து

செவ்வாய்க்கிழமை, 1 நவம்பர் 2011      சினிமா
Image Unavailable

 

பிரபல இயக்குனர் பி. வாசுவின் மகன் ஷக்தி தன் நீண்ட நாள் காதலியான ஸ்மிருதியை இன்று மணந்தார். சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள மேயர் ராமநாதன் திருமண மண்டபத்தில் நடந்த திருமண நிகழ்ச்சியில் திரையுலக பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர். இயக்குனர் பி. வாசுவின் மகன் பிரஷாந்த் (எ) ஷக்தி. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான அவர் தற்போது ஹீரோவாக வலம் வருகிறார். தொட்டால் பூ மலரும், மகேஷ் சரண்யா மற்றும் பலர், நினைத்தாலே இனிக்கும், ஆட்ட நாயகன் ஆகிய படங்களில் நடித்துள்ளார். அரபு நாடே அசந்துபோகும் அழகியா நீ என்ற அவருடைய பாடல் மிகவும் பிரபலமாகும்.

 

ஷக்தி சென்னை மாம்பாக்கத்தைச் சேர்ந்த முரளி-துஷிதா தம்பதியின் மகளான ஸ்மிருதியை காதலித்து வந்தார். இவர்கள் காதல் இருவீட்டாருக்கும் தெரிய வந்தது. வழக்கமான பெற்றோர்கள் போன்று விண்ணுக்கும், மண்ணுக்கும் குதிக்காமல் வாசுவும், முரளியும் இவர்கள் காதலுக்கு பச்சைக் கொடிகாட்டிவிட்டனர். முரளி பி. வாசுவின் நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து நிச்சயதார்த்தம் நடந்தது. இதையடுத்து இன்று காலை இவர்கள் திருமணம் சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள மேயர் ராமநாதன் செட்டியார் மண்டபத்தில் நடந்தது.  தேமுதிக தலைவர் விஜயகாந்த், நடிகர்கள் பிரபு, ராதாரவி, சத்யராஜ், பரத், நரேன், கன்னட நடிகர் உபேந்திரா, நடிகை குஷ்பு, கவிஞர் வாலி, நா. முத்துக்குமார், இயக்குனர் ஆர்.கே.செல்வமணி, ரோஜா, தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன், சந்தானபாரதி, பி.வி.ராஜேந்திரன் உள்ளிட்டவர்கள் மணமக்களை நேரில் வாழ்த்தினர்.

 

முன்னதாக நேற்று மாலை நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில் திமுக தலைவர் கருணாநிதி, மு.க. ஸ்டாலின், ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், சூர்யா, கார்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.  ரஜினிகாந்த்துக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு சரியாகிய பின்னர் அவரும், கமல்ஹாசனும் கலந்து கொண்ட முதல் நிகழ்ச்சி இது என்பது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony