குஜராத் முதல்வர் நரேந்திரமோடி போர்பந்தரில் உண்ணாவிரதம்

Image Unavailable

 

போர்பந்தர், நவ.- 21 - தேசப்பிதா அண்ணல் மகாத்மா காந்தி பிறந்த இடமான போர்பந்தரில், சோப்பாத்தி  மைதானத்தில் குஜராத் முதல்வர் நரேந்திரமோடி நேற்று தனது ஒரு நாள் சத்பவன உண்ணாவிரதத்தை தொடங்கினார்.  அதேநேரம் காங்கிரசாரும் போட்டி உண்ணாவிரதத்தை தொடங்கினார்கள். இந்த உண்ணாவிரதத்தில் போர்பந்தர் காங்கிரஸ் எம்.பி. மற்றும் விவசாயிகள் தலைவர் வித்தல் ராடாடியா, குஜராத் காங்கிரஸ் கமிட்டி தலைவர் அர்ஜுன் ஆகியோர் பங்கேற்றனர். இந்த போட்டி உண்ணாவிரதத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. முன்னதாக உண்ணாவிரத இடத்திற்கு வரும் முன்பாக குஜராத் முதல்வர் மோடி மகாத்மா காந்தி பிறந்த இடமான கீர்த்தி மந்திருக்கு சென்று அங்கு தேசத்தந்தைக்கு மலரஞ்சலி செலுத்தினார். இதேபோல் காங்கிரஸ் தலைவர்களும் கீர்த்தி மந்திர் சென்று தேசப்பிதாவிற்கு அஞ்சலி செலுத்தினார்கள். இருப்பினும் இரண்டு உண்ணாவிரதங்களும் வெவ்வேறு இடங்களில் நடைபெற்றது. தனது ஒரு நாள் உண்ணாவிரதத்தை மாலை 4.30 மணியளவில் முடித்துக்கொண்ட மோடி அங்கு கூடியிருந்தவர்கள் மத்தியில் உரையாற்றினார். இதேபோல் காங்கிரஸ் தலைவர்களும் தங்கள் பகுதியில் உரையாற்றினார்கள். அப்போது அவர்கள் மோடியை கடுமையாக தாக்கிப் பேசினார்கள். கடந்த பல ஆண்டுகளாக விவசாயிகளுக்கு மின் இணைப்பு தராதவர் மோடி என்று அவர்கள் குற்றம் சாட்டினார்கள். அரசு எந்திரத்தையும், அரசு பஸ்களையும் மக்கள் பணத்தையும் மோடி தவறாக பயன்படுத்துவதாகவும் அவர்கள் குற்றம் சாட்டினர். இந்த உண்ணாவிரதங்களால் போர்பந்தர் பகுதி ஒரு போர்க்களமாகவே காட்சிதந்தது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ