ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயிலில் பயங்கர தீ 2 குழந்தைகள் 7 பயணிகள் உடல் கருகி பலி

Image Unavailable

ராஞ்சி, நவ.- 23 - ஹவுரா - டேராடூன் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில்  சிக்கி 7 பயணிகள் உடல் கருகி பரிதாபமாக பலியானார்கள். மேற்கு வங்க மாநிலம் ஹவுராவில் இருந்து  டேராடூனுக்கு  ஒரு எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டிருந்தது. இந்த ரயில் ஜார்க்கண்ட் மாநிலம்  நிமியாகார் - பரஸ்நாத் ரயில் நிலையங்களுக்கு இடையே  சென்று கொண்டிருந்தபோது அந்த ரயிலின் குளு குளு வசதி கொண்ட ஏ.சி. பெட்டி எண் பி. 1-ல் திடீர் என்று தீ பிடித்தது. பிறகு அந்த தீ பக்கத்து பெட்டியான ஏ.சி பெட்டி எண் பி. 2-விற்கும் பரவியது. இந்த தீவிபத்தில் இரண்டு குழந்தைகள் உள்பட 7 பயணிகள்  அதே இடத்தில் உடல் கருகி பலியானார்கள். இவர்களில் 4 பேரின் சடலங்கள் அடையாளம் கண்டறியப்பட்டுள்ளன. 3 பேரின் சடலங்கள் அடையாளம்  காண முடியவில்லை. இந்த ஏ.சி கோச்சுகளில் ஒன்றில் ஒரு கேஸ் சிலிண்டர் வெடித்து இந்த தீ விபத்து நடந்ததாக கூறப்படுகிறது. ஆனால் யாரோ ஏ.சி. ஸ்விட்சை ஆப் செய்து விட்ட நிலையில் மற்றவர்கள் யாரோ சிலர் ஏ.சி.யை ஆன் செய்தபோது இந்த  தீவிபத்து நேர்ந்ததாகவும் கூறப்படுகிறது.  இது குறித்து ரயில்வே அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ரயிலில் தீ பிடித்தது குறித்து அந்த ரயிலின் டி.டி.க்கு தகவல் கொடுத்தும் கூட  உடனடியாக நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என்றும் அதனால்தான் இந்த உயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளது என்றும் அந்த ரயிலில் பயணம் செய்தவர்கள் கூறினர். இந்த தீவிபத்தில் ஏ.சி. ரயில் பெட்டிகள் இரண்டும் உருக்குலைந்து விட்டன. இந்த விபத்தினால் அந்த ரயில் வழித்தடத்தில் ரயில் போக்குவரத்து  பாதிக்கப்பட்டது. சில ரயில்கள் மாற்று வழிகளில் திருப்பி விடப்பட்டுள்ளன. இந்த விபத்து நேற்று அதிகாலை 2.30 மணிக்கு நடந்ததாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இரு ஏ.சி. பெட்டிகளில் பிடித்த தீ மள மளவென்று பரவியதை அடுத்து 7 பெட்டிகள் வரை கொளுந்து விட்டு எரிந்ததை காண முடிந்தது. ரயில் பயணிகள் ஐயோ அம்மா என்று அலறும் ஓலத்தையும் கேட்க முடிந்ததாக அப்பகுதியினர் தெரிவித்தனர். சம்பவம் பற்றிய தகவல் கிடைத்ததும் தீ அணைக்கும் படையினர் பல மணி நேரம் போராடி  தீயை அணைத்தனர். இந்த சம்பவம் குறித்து பாராளுமன்றத்தில் தாமாக முன்வந்து விளக்கம் அளிக்க மத்திய ரயில்வே அமைச்சர் முயன்றார். ஆனால் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவரை பேசவே அனுமதிக்கவில்லை. இந்த  ரயில் தீவிபத்தில் பலியானவர்களுக்கு அனைத்துக் கட்சி  தலைவர்களும் தங்களது இரங்கலை தெரிவித்துக்கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ