முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஸ்பெக்ட்ரம் விசாரணை திகார் சிறைச்சாலைக்கு மாற்றம் ஆ.ராசா எதிர்ப்பு

செவ்வாய்க்கிழமை, 22 நவம்பர் 2011      ஊழல்
Image Unavailable

புதுடெல்லி, நவ.- 23 - 2 ஜி.ஸ்பெக்ட்ரம் இமாலய ஊழல் தொடர்பான வழக்கு விசாரணை தற்போது நடைபெற்றுவரும் பாட்டியாலா ஹவுஸ் கோர்ட் வளாகத்தில் இருந்து டெல்லி திஹார் சிறைச்சாலை கோர்ட்டு வளாகத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த தகவலை சி.பி.ஐ. சிறப்பு நீதிபதி ஓ.பி.ஷைனி அறிவித்தார். டெல்லி ஐகோர்ட்டு உத்தரவுப்படி இந்த இடமாற்றம் செய்யப்படுவதாகவும் அதுதொடர்பான கோர்ட்டின் அறிவிப்பு தமக்கு கிடைக்கப்பெற்றிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். இதுதொடர்பாக டெல்லி ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவையும் அவர் வாசித்துக்காட்டினார். சட்டப்படி இவ்வாறு இடமாற்றம் செய்யப்படுவதாகவும் ஓ.பி.ஷைனி தெரிவித்தார். இருப்பினும் இன்றைய விசாரணை மட்டும் பாட்டியாலா ஹவுஸ் கோர்ட்டு வளாகத்திலேயே நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு 2 ஜி.ஸ்பெக்ட்ரம் வழக்கு விசாரணை டெல்லி திஹார் சிறைச்சாலை கோர்ட்டு வளாகத்திற்கு மாற்றப்படும். முன்னதாக நேற்று இந்த ஊழல் வழக்கில் குறுக்கு விசாரணைகள் நடைபெற்றன. சர்க்கார் தரப்பு முக்கிய சாட்சிகள் அப்போது விசாரிக்கப்பட்டன. குறிப்பாக எச்.டி.எப்.சி. வங்கியின் மும்பையைச் சேர்ந்த துணைத் தலைவர் உதய்சகஸ்ர புத்தேவிடம் நேற்று குறுக்கு விசாரணை நடைபெற்றது. ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பான விசாரணை திஹார் சிறைக்கு மாற்றப்பட்டதை இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர்  ஆ.ராசா கடுமையாக எதிர்த்துள்ளார். இந்த நாட்டில் என்ன நடக்கிறது என்றே எனக்கு தெரியவில்லை என்று அவர் கோபத்துடன் கூறினார். இதேபோல் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு அதே சிறையில் அடைக்கப்பட்டுள்ள கனிமொழியும் எதிர்ப்பு தெரிவித்தார். இதுகுறித்து வழக்கறிஞர் ஒருவர் கூறுகையில், இந்த வழக்கு விசாரணை திஹார் சிறைக்கு மாற்றப்பட்டால் அதனால் பல அசெளகரியங்கள் ஏற்படும். ஒவ்வொருவரும் திஹார் சிறைக்குள் நுழைவு பாஸ் வாங்க வேண்டும். இப்படி பல பிரச்சனைகள் உள்ளன என்று புலம்பித் தீர்த்தார். இந்த அறிவிப்பை எதிர்த்து மனு செய்யப்போவதாகவும் சில வழக்கறிஞர்கள் கூறினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்