அந்தமான் பிரதேசத்திற்கு சட்டசபை அமைக்கவேண்டும் - எம்.பி. கோரிக்கை

Image Unavailable

போர்ட்பிளேர், நவ.- 23 - அந்தமான் நிக்கோபர் தீவுகள் அடங்கிய யூனியன் பிரதேசத்திற்கு சட்டசபை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை பாராளுமன்றத்தில் முன் வைக்கப்போவதாக அந்த பிரதேசத்தின் எம்.பி. பிஷ்னு படா ராய் கூறியுள்ளார். போர்ட்பிளேர் நகரில் நடந்த பத்திரிகையாளர் கூட்டம் ஒன்றில்  அந்தமான் நிக்கோபார் தீவுக்கான பா.ஜ.க. எம்.பி  பிஷ்னுபடா ராய்  பேசினார். அப்போது அவர் கூறுகையில், அந்தமான் நிக்கோபார் தீவு யூனியன் பிரதேசத்திற்கு சட்டசபை அமைத்து கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக இருந்து வருகிறது என்றார். தற்போது நடைபெற்று வரும் பாராளுமன்ற குளிர் கால கூட்டத்தொடரில் இந்த கோரிக்கையை தான் முன்வைக்க இருப்பதாகவும் அவர் கூறினார். இது தொடர்பான அனைத்து ஆவணங்களையும் தான் டெல்லிக்கு எடுத்துச் செல்ல இருப்பதாகவும் அவர் கூறினார். தற்போது அந்தமான் நிக்கோபார் தீவு யூனியன் பிரதேசம், ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட துணை நிலை ஆளுனர்  தலைமையில்  ஆளுமை செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த யூனியன் பிரதேசத்திற்கு ஒரு மினி சட்டசபையோ அல்லது  பிரதேச கவுன்சிலோ அமைக்க வேண்டும் என்று இந்த பகுதியை சேர்ந்த பல்வேறு கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன.  இந்த தீவுகளில் வாழும் மக்கள் தங்களுக்கென்று ஒரு ஜனநாயக மன்றம் வேண்டும் என்று கோரி வருகிறார்கள்.  அதன் அடிப்படையில் தான் இந்த கோரிக்கையை பாராளுமன்றத்தில் முன் வைக்க இருப்பதாகவும் அவர் கூறினார்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ