முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இ.கம்யூனிஸ்ட் 12 - வ.கம்யூனிஸ்ட் 10 தொகுதிகள் ஒதுக்கீடு

திங்கட்கிழமை, 14 மார்ச் 2011      அரசியல்
Image Unavailable

சென்னை,மார்ச்.15 - அ.தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் பிரதான கட்சிகளான இடது கம்யூனிஸ்ட் மற்றும் வலது கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளுக்கான இடங்கள் நேற்று ஒதுக்கீடு செய்யப்பட்டன. இடது கம்யூனிஸ்ட் கட்சிக்கு 12 தொகுதிகளும் வலது கம்யூனிஸ்ட் கட்சிக்கு 10 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. தொகுதிகளை பெற்ற இடதுசாரி கட்சிகளின் தலைவர்கள் அ.தி.மு.க. கூட்டணியின் அமோக வெற்றிக்கு பாடுபடுவோம் என்று உறுதி அளித்தனர். 

தமிழக சட்டசபை தேர்தல் அடுத்தமாதம் 13-ம் தேதி நடக்கிறது. இதையொட்டி தமிழக அரசியல் கட்சிகள் தேர்தல் கூட்டணி அமைத்து தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தன. அ.தி.மு.க. தலைமையில் ஒரு அணியும் தி.மு.க. தலைமையில் ஒரு அணியும் இந்த தேர்தலை சந்திக்கினறன. அ.தி.மு.க. அணியில் விஜயகாந்த் தலைமையிலான தே.மு.தி.க., வைகோ தலைமையிலான ம.தி.மு.க.  இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள், கிருஷ்ணசாமி தலைமையிலான புதிய தமிழகம், மற்றும் இந்திய குடியரசு கட்சி, அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகம், சரத்குமார் தலைமையிலான அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி, கொங்கு இளஞர் பேரவை, மனிதநேய மக்கள் கட்சி ஆகிய கட்சிகள் அங்கம் வகிக்கின்றன. இந்த கட்சிகளில் ம.தி.மு.க. மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் தவர, மற்ற அனைத்து கட்சிகளுக்கும் ஏற்கனவே தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுவிட்டன. ம.தி.மு.க.வுடனும் கம்யூனிஸ்ட் கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடந்து வந்தது.

இந்தநிலையில் பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்து நேற்று கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுவிட்டன. முன்னதாக நேற்று பிற்பகல் 3 மணி அளவில் வலது கம்யூனிஸ்ட் தலைவர்களான நல்லகண்ணு, தா.பாண்டியன், மகேந்திரன், பழனிசாமி ஆகியோர் போயஸ்கார்டன் சென்றனர். அவர்களை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா அன்புடன் வரவேற்றார். இருதரப்பினரும் ஒருவருக்கொருவர் வணக்கம் தெரிவித்துக்கொண்டனர். வலது கம்யூனிஸ்ட் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்படுவதாக இந்த சந்திப்பின்போது முடிவானது. அதற்கான ஒப்பந்தத்தில் ஜெயலலிதாவும் தா.பாண்டியனும் கையெழுத்திட்டனர். பின்னர் வெளியே வந்து நிருபர்களுக்கு பேட்டி அளித்த தா.பாண்டியன் கூறுகையில் மத்திய மாநில அரசின் தவறான கொள்கைகளுக்கு எதிராக இந்த கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணியை முறியடித்து அ.தி.மு.க. கூட்டணி அமோக வெற்றிபெறும். எங்களுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. தோழமை கட்சிகளின் வெற்றிக்கும் நாங்கள் பாடுபடுவோம் என்று கூறினார். 

ஜனநாயகத்தை மீட்கவும் சட்டம் ஒழுங்கை நிலைநிறுத்தவும் சுறுக்கமாக சொன்னால் தமிழ்நாட்டை மீட்கும் போராட்டமாக எங்கள் கூட்டணியின் போராட்டம் அமையும் என்றும் வலது கம்யூனிஸ்ட் மாநில பொதுச்செயலாளர் தா.பாண்டியன் கூறினார். 10 தொகுதிகள் என்னென்ன என்று கேட்டபோது ஜெயலலிதா நாளை (இன்று) அறிவிப்பார் என்று கூறிய தா.பாண்டியன், 10 தொகுதிகளை ஒதுக்கீடு செய்ததில் தங்களுக்கு திருப்தியே என்றும் தெரிவித்தார்.

 

இடது கம்யூனிஸ்டுக்கு 12 தொகுதிகள்

 

அதன் பிறகு இடதுகம்யூனிஸ்டு கட்சியின் மாநில தலைவர் ஜி.ராமகிருஷ்ணன் பிற்பகல் 3.30 மணி அளவில் போயஸ் கார்டன் வந்தார். அவருடன் மத்திய கமிட்டி உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் மற்றும் பாலகிருஷ்ணன் ஆகியோரும் உடன் இருந்தனர். ஜெயலலிதாவின் வீட்டிற்குள் சென்ற ராமகிருஷ்ணன்,அவருக்கு பொன்னாடை போர்த்தி கெளரவித்தார். இந்த சந்திப்பின்போது இடது கம்யூனிஸ்டு கட்சிக்கு 12 தொகுதிகள் ஒதுக்கீடு செய்வதாக முடிவானது. அதற்கான ஒப்பந்தத்தில் ஜெயலலிதாவும் ராமகிருஷ்ணனும்ம் கையெழுத்திட்டனர். பின்னர் வெளியே வந்து நிருபர்களுக்கு பேட்டி அளித்த ராமகிருஷ்ணன், அ.தி.மு.க. கூட்டணியில் தங்கள் கட்சிக்கு 12 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்தார். 234 சட்டமன்ற தொகுதிகளிலும் தி.மு.க. காங்கிரஸை எதிர்த்து தங்கள் கட்சி கடுமையாக தேர்தல் களத்தை சந்திக்கும் என்றும் ராமகிருஷ்ணன் கூறினார். இந்த கூட்டணி ஒரு மகத்தான கூட்டணி என்று கம்யூனிஸ்டு தலைவர்கள் பூரிப்போடு தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்