முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆளுநர் தலைமையில் ஜன.25 தேசிய வாக்காளர் தினம்

செவ்வாய்க்கிழமை, 24 ஜனவரி 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜன.24 - தேசிய வாக்காளர் தினம் வரும் 25-ந் தேதி கொண்டாடப்படுகிறது. ஆளுநர் ரோசையா இவ்விழாவில் பங்கேற்கிறார். இது தொடர்பாக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- ராஜ்பவன். இந்திய தேர்தல் ஆணையம் தோற்றுவிக்கப்பட்ட நாள் ஜனவரி 25​ம் தேதி ஆகும்.  ஜனநாயகத் தேர்தல் முறைமைகளில் குடிமக்களின் பங்கேற்பை அதிகப்படுத்தும் ஒரு முயற்சியாக,  2011​ஆம் ஆண்டு ஜனவரி 25​ம் தேதி  தொடங்கி ஒவ்வோராண்டும் ஜனவரி 25​ம் நாளை தேசிய வாக்காளர் தினமாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.  அதன் முக்கிய நோக்கம் வாக்காளர் பதிவை அதிகப்படுத்தி, வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை வாக்காளர்களுக்கு உணர்த்துவதேயாகும். தேர்தல் நடைமுறைகளில் பொதுமக்களை குறிப்பாக இளைஞர்கள் மற்றும் பெண்களை ஈடுபடுத்தி, வாக்காளர்களின் விழிப்புணர்வை அதிகப்படுத்தும் நோக்கத்துடன், இவ்வாண்டு ஜனவரி 25ஆம் நாளை இரண்டாவது தேசிய வாக்காளர் தினமாக பெரிய அளவில் கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தேசிய வாக்காளர் தினக் கொண்டாட்டங்களுக்கு மாநில அளவிலும்,  மாவட்ட அளவிலும் மற்றும் ஒவ்வொரு வாக்குச் சாவடி அமைவிடத்திலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.   மாநில அளவிலான விழா மேதகு தமிழக ஆளுநர் தலைமையில் ராஜ்பவனில் நடைபெறும்.  

அவ்விழாவில் ஆளுநர் தேசிய வாக்காளர் தின உறுதிமொழியினை ஏற்கவைத்து, சிறப்புரையாற்றுவார். புதிதாக பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களுக்கு வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையினையும் அவர் வழங்குவார்.  தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர், டாக்டர். சோ. அய்யர் (ஓய்வு)-ம், தமிழக அரசின் தலைமைச் செயலாளர் தேவேந்திரநாத் சாரங்கியும் வாழ்த்துரை வழங்குவார்கள்.

வலுவான ஜனநாயகத்திற்கு பெருமளவில் பங்கேற்றலின் முக்கியத்துவத்தையும் அதில் இளைஞர்களின் பங்கையும் உணர்த்தும் வகையில் இவ்விழாவில் பள்ளிச் சிறார் மற்றும் மத்திய அரசின் செய்தி மற்றும் ஒளிபரப்பு துறையின் பாடல்கள் மற்றும் நாடகப் பிரிவை சார்ந்த கலைஞர்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெறும்.  சென்னை மாநகராட்சியால் நடத்தப்படும் உயர்நிலைப் பள்ளி மற்றும் மேல்நிலை பள்ளியை சார்ந்த மாணவர்களால் நாட்டுப்புற நடனம், குழுப்பாடல் மற்றும் ஜனநாயகத்தின் முக்கியத்துவம் குறித்து உரை ஆகியவை  நிகழ்த்தப்படும். இதே போல் மாவட்ட அளவில் மாவட்ட ஆட்சியர்கள் தேசிய வாக்காளர் தினத்திற்கான உறுதிமொழியினை வாக்காளர்களை ற்கச் செய்வதோடு புதிதாக பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டைகனை வழங்கிடவும் உள்ளார்கள். அதேபோன்று ஒவ்வொரு வாக்குச்சாவடி அமைவிடத்திலும் வாக்காளர்கள் உறுதிமொழியினை ஏற்பதோடு புதிதாக பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படவும் உள்ளது.  புதிதாக பதிவு செய்யப்பட்ட 33.26 இலட்சம் வாக்காளர்களுக்கு வாக்காளர் அடையாள  அட்டைகள் வழங்கப்படும்.  மேலும், தேசிய வாக்காளர் தினமான ஜனவரி 25, 2012 அன்று கல்லூரி மாணவர்கள் தேசிய வாக்காளர் தின உறுதிமொழியினை ஏற்பதற்கு வழிவகை செய்யுமாறு அரசு பல்கலைகழகங்களின் துணை வேந்தர்கள் கேட்டுக்கொள்ளபட்டுள்ளனர்.

இவை அந்த வாக்குச்சாவடி பகுதியில் உள்ள மற்ற தகுதியுள்ள வாக்காளர்களுக்கு கடமையுணர்வுடன் ஜனநாயகத்தை வலிமையடையச் செய்ய அவர்களின் சிறந்த பங்கேற்பை வழங்கிட உந்து சக்தியாக விளங்கும்.   பல்வேறு சமூக அமைப்புகள்,   அரசு சாரா தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், ஊடகங்கள், பெண்கள் மற்றும் இளைஞர் அமைப்புகள் ஆகியவை தேசிய வாக்காளர் தினத்தினை சிறப்பாக கொண்டாடுவதற்காக முழுமையான ஆதரவினை நல்கிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!