Idhayam Matrimony

20 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி தமிழக பட்ஜெட்டில் புதிய அறிவிப்புகள்

வெள்ளிக்கிழமை, 14 மார்ச் 2025      தமிழகம்
Minister-2025-03-14

சென்னை ராமேசுவரத்தில் புதிய விமான நிலையம், ஒசூர், விருதுநகரில் புதிய டைடல் பூங்கா,  மதுரை, கடலூரில் காலணி தொழிற்பூங்கா,  9 இடங்களில் புதிய சிட்கோ தொழிற்பேட்டைகள், அரசு ஊழியர்களுக்கு பணப்பலன் பெறும் சலுகை, அடுத்த 2 ஆண்டுகளில் 20 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி உள்ளிட்ட பல்வேறு புதிய அறிவிப்புகள் தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

முழு நிதிநிலை அறிக்கை...

தமிழக அரசின் அடுத்த நிதியாண்டுக்கான (2025-26) நிதிநிலை அறிக்கை, சட்டப்பேரவையில் நேற்று (மாா்ச் 14) நிதியமைச்சா் தங்கம் தென்னரசு நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார்.  அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தலை தமிழ்நாடு எதிா்கொள்ளவுள்ள நிலையில், அதற்கு முன்பாக தி.மு.க. தலைமையிலான அரசு தாக்கல் செய்யும் 5-வது மற்றும் கடைசி முழுமையான நிதிநிலை அறிக்கை இதுவாகும். எனவே, பொதுமக்கள், அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் என பல்வேறு தரப்பினரின் கோரிக்கைகள், எதிா்பாா்ப்புகளை நிறைவேற்ற வேண்டிய கட்டாயம் அரசுக்கு ஏற்பட்டிருக்கும் நிலையில், நிதியமைச்சா் தங்கம் தென்னரசு 2-வது ஆண்டாக நிதிநிலை 2025-26 ஆம் நிதியாண்டுக்கான அறிக்கையைத் தாக்கல் செய்தார். இதற்கு முன்னதாக பேரறிஞர் அண்ணா, கலைஞர் நினைவிடத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு மரியாதை செலுத்தினார்.

சென்னைக்கு அருகே....

சென்னைக்கு அருகே 2,000 ஏக்கர் பரப்பளவில் ஒருங்கிணைந்த புதிய நகரம் உருவாக்கப்படும் என்ற அறிவிப்பு முதன்மையானதாகப் பார்க்கப்படுகிறது. இந்த புதிய நகரம், மெட்ரோ வசதி, பேருந்துகள், சாலை வசதிகள் உள்ளிட்டவற்றுடன் உருவாக்கப்படும் என்றும், நகர்ப்புற சதுக்கங்கள், பூங்காக்கள் போன்ற கட்டமைப்பு வசதிகள் புதிய நகரில் அமையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணப்பலன் சலுகை...

கொரோனா காலத்தில் நிதி நெருக்கடியின் காரணமாக ஈட்டிய விடுப்பை சரண் செய்து பணம் பெறும் முறை நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. இந்த திட்டம் மீண்டும் கொண்டுவரப்பட்டுள்ளது. அரசு ஊழியர்களின் கோரிக்கையை ஏற்று, ஈட்டிய விடுப்பை சரண் செய்து பணப்பலன் பெறும் சலுகை மீண்டும் செயலாக்கத்துக்கு கொண்டுவரப்படுகிறது. வரும் ஏப்ரல் 1 முதல் இந்த நடைமுறை அமலுக்கு வருகிறது. ஆண்டுக்கு 15 நாள்கள் வரை சரண் செய்து பணத்தைப் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிப்பு.

வேளச்சேரியில் பாலம்...

சென்னை விமான நிலையம், கிளாம்பாக்கம் இடையே ரூ.9335 கோடியில் மெட்ரோ ரயில் விரிவாக்கப் பணிகள் நடைபெறும். கோயம்பேடு - பட்டாபிராம், பூந்தமல்லி - ஸ்ரீபெரும்புதூர் இடையே மெட்ரோ ரயில் சேவை உருவாக்கப்படும். சென்னை கிண்டியில் மெட்ரோ, பேருந்து, ரயில் போக்குவரத்தை இணைக்க ரு.50 கோடியில் பன்முக மையம். பூந்தமல்லி - போரூர் மெட்ரோ ரயில் தடம் வரும் டிசம்பரில் செயல்பாட்டுக்கு வரும். ரூ.88 கோடியில் சென்னை பெருநகரப் பகுதிகளில் மழைநீர் உறிஞ்சும் 7 பல்லுயிர்ப் பூங்காக்கள். வேளச்சேரியில் புதிய பாலம் கட்டப்படும். ரூ.310 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் இந்த பாலத்தால் 7 இலட்சம் பேர் பயன் பெறுவார்கள்.

மகளிர் உரிமைத் திட்டம்...

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்துக்கு ரூ13,807 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இதுவரை பலன்பெறாதோருக்கு உரிமைத் தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.  ரூ.6,668 கோடியில் 7 மாவட்டங்களில் புதிய கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள் செயல்படுத்தப்படும். இதன் மூலம் 29.74 இலட்சம் மக்கள் பயன்பெறும். நகர்ப் பகுதிகளில் அடிப்படைக் கட்டமைப்பை மேம்படுத்த கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்துக்கு ரூ.2,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் ரூ.3,500 கோடியில் ஊரகப் பகுதிகளில் 1 லட்சம் புதிய வீடுகள் கட்டித்தரப்படும். சீரமைக்க இயலாத வீடுகளுக்குப் பதிலாகப் புதிய வீடுகள் என்ற வகையில் ரூ.600 கோடியில் 25,000 வீடுகள் கட்டித்தரப்படும். ஆண்டுதோறும் உலகத் தமிழ் ஒலிம்பியாட் போட்டி நடத்தப்படும். ரூ.1 கோடி பரிசுத்தொகை வழங்கப்படும்.

கல்வித் துறையில்..

பெற்றோரை இழந்த 50 ஆயிரம் குழந்தைகளுக்கு மாதந்தோறும் ரூ.2,000 உதவித் தொகை வழங்கப்படும். ஐந்து ஆண்டுகளுக்குள் உலக தரவரிசையில் அண்ணா பல்கலைக்கழகத்தை முன்னிலைப்படுத்தவும், ஆசியாவின் தலைசிறந்த கல்வி நிறுவனமாக மாற்றவும் நடவடிக்கை எடுக்கப்படும். அரசுப் பல்கலைக்கழகங்களுக்கு ஒதுக்கப்படும் நிதி ரூ.700 கோடியாக உயர்த்தப்படும். அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மேலும் 15,000 இடங்கள் அமைக்கப்படும். வளர்ந்து வரும் துறைகளில் புதிய பட்டப்படிப்புகள் உருவாக்கப்படும்.

மாணவர்களுக்கு கணினி...

20 லட்சம் கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்படும். கல்லூரி மாணவர்களுக்கு அவரவர் விரும்பும் வகையில் கைக்கணினி அல்லது மடிக்கணினி வழங்கப்படும். பெற்றோர் இழந்து, மிகவும் வறிய நிலையில் உள்ள 50 ஆயிரம் குழந்தைகளுக்கு மாதந்தோறும் ரூ.2,000 உதவித் தொகை வழங்கப்படும். இவர்கள் பள்ளிப் படிப்பை இடைநிற்றல் இன்றி தொடரவும், கல்லூரியில் சேரவும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

புனல் மின் நிலையங்கள்...

ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பங்களில், பெண்கள் பெயரில் அசையா சொத்துகள் வாங்குவதை ஊக்குவிக்கும் வகையில், ரூ.10 லட்சம் வரை பெண்கள் பெயரில் பதிவு செய்யப்படும் அசையா சொத்துகளுக்கு பதிவு கட்டணம் 1 சதவீதம் குறைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வீடு, மனை, விவசாய நிலம் உள்ளிட்ட அனைத்து அசையா சொத்துகளுக்கும் இது பொருந்தும். ரூ.11,721 கோடியில் புதிய புனல் மின் நிலையங்கள் அமைக்கப்படும். இவற்றில் வெள்ளிமலை - 1,100 மெகாவாட் திறன் ஆழியாறு - 1,800 மெகாவாட் திறன் கொண்டதாக இருக்கும்.

அரசு ஊழியர்களுக்கானது....

பல்வேறு அரசுத் துறைகளில் காலியாக உள்ள 40,000 பணியிடங்கள் வரும் நிதியாண்டில் நிரப்பப்படும். 1721 முதுகலை ஆசிரியர்கள், 841 பட்டதாரி ஆசிரியர்கள் விரைவில் நியமனம் செய்யப்படுவார்கள். 150 வகையான அரசு சேவைகளை இணைய வழியில் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அரசு ஊழியர்களுக்கு வங்கிகளில் கடன் பெற சலுகைகள் வழங்கப்படும். அரசு ஊழியர்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஈட்டிய விடுப்பு நாள்களுக்கு பணப்பலன் பெறும் திட்டம் மீண்டும் கொண்டுவரப்படும். தமிழகத்தில் காலியாகவுள்ள 40,000 அரசுப் பணியிடங்கள் நிரப்பப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.

புற்றுநோய் தடுப்பூசி.....

ஒரு நோய்க்கு தடுப்பூசி இருந்தும், அதன் கட்டணம் காரணமாக பலராலும் கருப்பைவாய் புற்றுநோய் தடுப்பூசியை செலுத்திக்கொள்ள இயலவில்லை. இதனால், பரவிவரும் கருப்பைவாய் புற்றுநோயை தடுப்பதற்கான எச்பிவி தடுப்பூசி 14 வயதுடைய அனைத்து பெண் குழந்தைகளுக்கும் படிப்படியாக செலுத்தப்படும். இதற்கான ரூ. 36 கோடி ஒதுக்கப்படுகிறது என்ற அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

தொழில்துறைக்கு...

ஓசூர் மற்றும் விருதுநகரில் புதிய டைடல் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்படும். இதன்மூலம் 6,600 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பெறுவார்கள். மதுரை, கடலூரில் ரூ.250 கோடியில் காலணித் தொழிற்பூங்கா, 9 இடங்களில் ரூ.3,566 கோடியில் புதிய சிட்கோ தொழிற்பேட்டைகள் அமைக்கப்படும். இதன் மூலம் 17,500 பேருக்கு வேலைவாய்ப்பு பெறுவார்கள். பத்து லட்சம் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு மொத்தம் ரூ.2.5 லட்சம் கோடி வங்கிக் கடன் வழங்கப்படும் என்பவை சிறப்பான அறிவிப்புகளாக மக்களால் பார்க்கப்படுகிறது.

புதிய அரசு கல்லூரிகள்....

தமிழ்நாட்டில் மாணவர்களின் உயர்கல்விச் சேர்க்கை தேவையை நிறைவேற்றும் விதமாக, நீலகிரி மாவட்டம் குன்னூர், திண்டுக்கல் மாவட்டம் நத்தம், சென்னை மாவட்டம் ஆலந்தூர், விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி, செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர், சிவகங்கை மாவட்டம் மானாமதுரை, திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை, தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர், பெரம்பலூர் மாவட்டம் பெரம்பலூர் மற்றும் தூத்துக்குடி வட்டம் ஒட்டப்பிடாரம் ஆகிய இடங்களில் புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும்.

அறிவியல் வளர்ச்சி மையம்...

மாணவர்களிடையே அறிவியல் சிந்தனையை வளர்த்திடவும், இளைஞர்களுக்கு புதிய தொழில்நுட்ப வசதிகளை அறிமுகம் செய்திடவும் சிங்கப்பூர் அறிவியல் மையத்துடன் இணைந்து நவீன முறையில் சென்னையில் ரூ.100 கோடி மதிப்பீட்டில் அறிவியல் மையம் உருவாக்கப்படும். இந்த மையத்தில் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதப்புலங்கள், விண்வெளி, வானவியல் துறைகளின் மெய்நிகர் மாதிரிகளும் உடம் பெற்றிருக்கும். மேலும் குழந்தைகளுக்கான அறிவியல் பூங்கா, நவீன வானவியல் தொலைநோக்கு வசதிகள், ஆழ்கடல் உயிரினங்கள் மற்றும் வானவியல் நகர்வுகளை ஆழ்ந்து உணரக்கூடிய டிஜிட்டல் திரை அனுபவ அரங்குகள், அறிவியல் மாநாட்டு கூடங்கள், பார்வையாளர்களுக்கான பசுமை புல்வெளிகள் என அனைத்து வசதிகளும் இடம் பெறும்.

புதிய டைடல் பூங்கா...

ஓசூர் மற்றும் விருதுநகரில் புதிய டைடல் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்படும். இதன்மூலம் 6,600 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பெறுவார்கள். மதுரை, கடலூரில் ரூ.250 கோடியில் காளணித் தொழிற்பூங்கா அமைக்கப்படும். இதன்மூலம் 20,000 பேர் வேலைவாய்ப்பு பெற்று பயன்பெறுவார்கள்.  பத்து லட்சம் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு மொத்தம் ரூ.2.5 லட்சம் கோடி வங்கிக் கடன் வழங்கப்படும். ஊட்டி ரேஸ் கோர்ஸ் பகுதியில் ரூ.70 கோடி மதிப்பில் எழில்மிகு சுற்றுலாப் பூங்கா அமைக்கப்படும்.

புதிய விமான நிலையம்...

மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு விமான நிலையம் முக்கியம் என்பது நன்கு அறிந்த அரசு, கோவை, மதுரை, திருச்சி, தூத்துக்குடி விமான நிலைய விரிவாக்கப் பணிக்கு ரூ. 2,938 கோடி மதிப்பிலான நிலத்தை கையகப்படுத்தி மத்திய அரசுக்கு வழங்கியுள்ளது. சேலம் விமான நிலையத்துக்கான நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருகின்றது. பரந்தூர் விமான நிலையப் பணிகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில், தென் மாநிலங்களுக்கு வருகைதரும் சுற்றுலாப் பயணிகள் அதிகரித்து வரும் சூழலில், ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் பகுதியில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும். மேற்குறிப்பிட்ட அறிவிப்புகள் உள்பட எண்ணற்ற அறிவிப்புகள் தமிழக நிதிநிலை அறிக்கையில் வெளியாயின.

BOX - 1

2 மணி நேரம் 38 நிமிடம் வாசித்த அமைச்சர்

தமிழக சட்டசபையில் நேற்று காலை 9.30 மணிக்கு 2025-26-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. சரியாக, காலை 9.30 மணிக்கு சபாநாயகர் மு.அப்பாவு திருக்குறள் வாசிக்க கூட்டம் தொடங்கியது. தங்கம் தென்னரசு பட்ஜெட் உரையை காலை 9.32 மணிக்கு தொடங்கி மதியம் 12.10 மணிக்கு உரையை நிறைவு செய்தார். பட்ஜெட் உரையை 2 மணி நேரம் 38 நிமிடம் வரை அவர் வாசித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து