முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொள்முதல் விரைவாக நடைபெறுகிறது: லாரிகளில் நெல் எடுத்து செல்வதில் எந்த தாமதமும் இல்லை: அமைச்சர்

சனிக்கிழமை, 1 நவம்பர் 2025      தமிழகம்
Chakkara-Pani 2023-04-27

Source: provided

சென்னை : நெல் கொள்முதல் விரைவாக நடைபெறுகிறது என்றும் லாரிகளில் நெல் எடுத்துச் செல்வதில் எந்த தாமதமும் இல்லை என்றும் அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் சக்கரபாணி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- ஆங்கில நாளேடு ஒன்றில்  (31.10.2025 மற்றும் 1.11.2025) தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் நெல் போக்குவரத்து தொடர்பாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பான விவரங்களைக் கீழ்க்கண்டவாறு தெரிவிக்கிறேன்.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் போக்குவரத்து ஒப்பந்தம் 5 ஆண்டுகளுக்கு (2019-24) அ.தி.மு.க. ஆட்சியில் இறுதி செய்யப்பட்டு, கழக ஆட்சி பொறுப்பேற்ற போது நடைமுறையில் இருந்தது. அந்த ஒப்பந்தப்படி போக்குவரத்துக் கட்டணம் மிகவும் அதிகமாக இருந்ததோடு மத்திய அரசின் உணவு மற்றும் பொது விநியோகத் திட்டத் துறையினால் 6.5.2019 அன்று வெளியிட்ட நிபந்தனைகள் மற்றும் வழிகாட்டுதலின்படி இல்லை. 

மத்திய அரசு வழிமுறைகளின்படி இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை மண்டல வாரியாகப் போக்குவரத்து ஒப்பந்தம் போடப்பட வேண்டும் என்பதற்குப் பதிலாக ஐந்தாண்டுகளுக்கு மாநில அளவில் ஒப்பந்தம் போடப்பட்டதால் போக்குவரத்துக்காக தரவேண்டிய தொகையை மத்திய அரசு விடுவிக்காமலிருந்தது. கழக ஆட்சி பொறுப்பேற்ற போது இருந்த இந்நிலையை மாற்றி, அ.தி.மு.க. ஆட்சியில் மத்திய அரசின் வழிகாட்டு முறைகளுக்கு மாறாகவும் விலை அதிகமாகவும் இருந்த ஒப்பந்தப்புள்ளியை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. பல்வேறு சட்டப் போராட்டங்களுக்குப் பின் அந்தப் போக்குவரத்து ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது.

2020 – 21-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியுடன் ஒப்பிடுகையில் பரவலாக்கப்பட்ட போக்குவரத்து ஒப்பந்தப்புள்ளி முறையில் 2024 – 25 ஆம் ஆண்டில் டன் ஒன்றிற்கான செலவினம் ரூ.890.84 அளவிற்கு குறைந்துள்ளது. இதனால் ஓராண்டிற்கு மட்டும் ரூ.1084.08 கோடி ஒன்றிய மாநில அரசுகளுக்கு மீதமாகியுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தனித்தனியாக ஒப்பந்தப்புள்ளிகள் இறுதி செய்யப்பட்டுப் போக்குவரத்து நடைபெற்று வரும் நிலையில் ஆங்கில நாளேட்டில் தெரிவிக்கப்பட்டது போன்று மாநில அளவிலான மையப்படுத்தப்பட்ட ஒப்பந்தப்புள்ளி முறையில் செயல்படவில்லை என்பதையும் தெளிவுபடுத்துகிறேன்.

தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகள் என் அலுவலகத்தில் கொடுத்த நெல் நகர்வு தொடர்பான மனுவினை உரிய அலுவலர்கள் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தியுள்ளேன். அதே போன்று ஆங்கில நாளிதழில் வெளியான செய்தி குறித்தும் விசாரித்து அறிக்கை அளிக்கக் கோரியுள்ளேன்.

1.9.2025 முதல் 31.10.2025 வரை 12.01 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு மழை மற்றும் பண்டிகை காரணங்களால் ஏற்பட்ட தடங்கல்களையும் மீறி 10.75 லட்சம் டன் நெல் பாதுகாப்பான இடங்களுக்கு நகர்வு செய்யப்பட்டது. இயற்கைச் சீற்றங்களை மீறி லாரிகள் மூலமாகவும் ரெயில்கள் மூலமாகவும் நெல் நகர்வு நடைபெற்று வருகிறது. ஆகவே நெல் நகர்வில் தொய்வு என்பது சரியானதல்ல.

போக்குவரத்து ஒப்பந்த விதிகளில் தூரம் ஐந்து பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அந்த நாளேட்டில் 5 பிரிவுகளில் 0-8 கிமீ வரை என்ற பிரிவை மட்டும் எடுத்துக் கொண்டு செய்தி வெளியிட்டுள்ளார்கள். மற்ற பிரிவுகளை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் ஒரு பிரிவை மட்டும் எடுத்துக் கொண்டு ஒரு நேர்வை மட்டும் வைத்து அதன் உண்மைத் தன்மையை ஆராயாமல் கணக்கிட்டு, செய்தி வெளியிட்டுள்ளார்கள். அதேபோன்று மூன்று ஒப்பந்ததாரர்கள் 19 பேர்களுடன் இணைந்து பங்குதாரர்கள் ஆகத் தான் உள்ளனர் என்றும் அது துணை ஒப்பந்தம்  அல்ல என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். நெல் கொள்முதலும் நகர்வும் துரிதமாக நடைபெற்று வருகிறது என்று தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து