முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குடியிருப்பு வீடுகள், உதவித்தொகை உள்ளிட்ட தூய்மை பணியாளர்களுக்குபல்வேறு நலத்திட்டங்கள் : முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சனிக்கிழமை, 15 நவம்பர் 2025      தமிழகம்
CM-1-2025-11-15

Source: provided

சென்னை : தூய்மைப் பணியாளர்களுக்கு குடியிருப்பு வீடுகள் உள்ளிட்ட பல்வேறு புதிய நலத்திட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

சென்னை, கலைவாணர் அரங்கத்தில் சனிக்கிழமை(நவ.15) நடைபெற்ற நிகழ்ச்சியில், பெருநகர சென்னை மாநகராட்சியில் 31,373 தூய்மைப் பணியாளர்கள் பயன்பெறும் வகையில், தூய்மைப் பணியாளர்களுக்கான முதல்வரின் உணவுத் திட்டத்தை தொடங்கி வைத்து, தூய்மைப் பணியாளர்களுக்கு குடியிருப்பு ஒதுக்கீடு வழங்கும் திட்டத்தில் 1000 தூய்மைப் பணியாளர்களுக்கு குடியிருப்புக்கான ஒதுக்கீட்டு ஆணைகள், பணியின்போது உயிரிழந்த 2 தூய்மைப் பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி, தூய்மைப் பணியாளர்களின் குடும்பத்தினர் சுயமாக தொழில் தொடங்குவதற்கு முதல்வரின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான தொழில் முனைவோர் திட்டத்தின் கீழ் 25 பயனாளிகளுக்கு மானியத்துடன் கடனுதவி, தூய்மைப் பணியாளர்களின் குழந்தைகளுக்கு புதிய உயர்கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ், 1,260 மாணவர்களுக்கு அனைத்து விதமான கல்விக் கட்டணம், விடுதி கட்டணம் மற்றும் இதர கட்டணங்களுக்காக ரூ.2.82 கோடிக்கான உதவிகள், தூய்மைப் பணியாளர்களுக்கு தாட்கோ நிறுவனம் மூலம் செயல்படுத்தப்படும் சிறப்பு திட்டங்களின் கீழ், 1,000 பயனாளிகளுக்கு ரூ.35 லட்சம் உதவித் தொகைக்கான நலத்திட்ட உதவிகள் ஆகியவற்றை வழங்கினார்.

தூய்மை பணியாளர் நல வாரியம்:

தூய்மைப் பணியாளர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தோரின் நலன் கருதி முத்தமிழறிஞர் கலைஞர் 2007-ஆம் ஆண்டு “தூய்மை பணியாளர் நல வாரியம்” அமைக்கப்பட்டது. இந்த வாரியத்தில் பதிவு செய்த உறுப்பினர்களுக்கு விபத்து மரண உதவித்தொகை, இயற்கை மரண நிதியுதவி, ஈமச்சடங்கு நிதியுதவி, கல்வி உதவித்தொகை, திருமண நிதியுதவி, மகப்பேறு நிதியுதவி, கண்கண்ணாடி வாங்க நிதியுதவி, முதியோர் ஓய்வூதியம், வீடு வழங்கும் திட்டம் போன்ற பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

முத்தமிழறிஞர் கலைஞர் வழியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு, தூய்மைப் பணியாளர்களின் நலன் காத்திட பல்வேறு திட்டங்களை சீரிய முறையில் செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், தூய்மைப் பணியாளர்களின் வாழ்வாதாரத்தை மேலும் மேம்படுத்திட 14.8.2025 அன்று 6 புதிய சிறப்புத் திட்டங்களை அறிவித்திருந்தார்கள்.

தூய்மைப் பணியாளர்களின் நல்வாழ்விற்காக அறிவிக்கப்பட்ட அந்த புதிய அறிவிப்புகளை செயல்படுத்திடும் வகையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று பெருநகர சென்னை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கு உணவு வழங்கும் தூய்மைப் பணியாளர்களுக்கான முதல்வரின் உணவுத் திட்டம், குடியிருப்புக்கான வீடுகள் மற்றும் புதிய நலத்திட்ட உதவிகளை வழங்கி தொடங்கி வைத்தார்.

முதல்வரின் உணவுத் திட்டம்:

பெருநகர சென்னை மாநகராட்சியில் காலை, மதியம் மற்றும் இரவு என என சுழற்சி முறையில் பணியாற்றும், தூய்மைப் பணியாளர்களுக்கு உணவு வழங்கும் தூய்மைப் பணியாளர்களுக்கான முதலமைச்சரின் உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் விதமாக, முதல்வர் மு.க.ஸ்டாலின், தூய்மைப் பணியாளர்களுக்கு உணவுத் திட்டத்திற்காக உணவு கொண்டு செல்லும் வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்து, தூய்மைப் பணியாளர்களுக்கு உணவினை வழங்கி அவர்களுடன் கலந்துரையாடினார்.

இத்திட்டம் நடைமுறைப்படுத்துவதால், பெருநகர சென்னை மாநகராட்சியில், நிரந்தர மற்றும் சுயஉதவிக்குழு தூய்மைப் பணியாளர்கள், மலேரியா தொழிலாளர்கள், தூய்மைப் பணிக்கான தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்கள், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகளில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்கள், மயான பூமி தூய்மைப் பணியாளர்கள், தனியார் பொது பங்களிப்பில் செயல்படும் கழிப்பறை சுத்தம் செய்யும் பணியாளர்கள், பூங்காக்கள் மற்றும் விளையாட்டு மைதானங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள், மாநகராட்சியில் கள பணிகளில் ஈடுபடும் சாலை பணியாளர்கள், என மொத்தம் 31,373 பணியாளர்களுக்கு நாள்தோறும் வெப்பம் தாங்கும் பைகளில் சிற்றுண்டி தாங்கி பெட்டிகள் மூலம் சுகாதாரமான உணவு வழங்கப்படும்.

குடியிருப்பு ஒதுக்கீடு திட்டம்:

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் வீட்டு கழிவுகளை அகற்றும் பணியில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களுக்கு தகுதியின் அடிப்படையில் முதற்கட்டமாக கார்கில் நகர் திட்டப்பகுதியில் 510 குடியிருப்புகளும், பெரும்பாக்கம் பகுதி-III திட்டப்பகுதியில் 490 குடியிருப்புகளும், என மொத்தம் 1,000 குடியிருப்புகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு,அதற்கான ஆணைகளை முதல்வர் வழங்கினார்.

ரூ.10 லட்சம் நிதியுதவி திட்டம்

இத்திட்டத்தின் கீழ் பெருநகர சென்னை மாநகராட்சியில் பணியின்போது உயிரிழந்த 2 தூய்மைப் பணியாளர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 10 லட்சம் உதவி தொகைக்கான காசோலைகளை வழங்கினார். தூய்மைப் பணியாளர்களின் குடும்பத்தினர், சுயமாக தொழில் தொடங்குவதற்கு ரூ.3.50 லட்சம் வரை மானியம் வழங்கும் திட்டம் தூய்மைப் பணியாளர்களின் குடும்பத்தினர் சுயமாக தொழில் தொடங்கிடும் வகையில், முதலமைச்சரின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான தொழில் முனைவோர் திட்டத்தின் கீழ், 25 பயனாளிகளுக்கு மொத்த திட்ட தொகையான ரூ.46 லட்சத்தில் ரூ.16 லட்சம் மானியத் தொகைக்கான காசோலைகளை வழங்கினார்.

உயர் கல்வி உதவித்தொகை திட்டம்:

தூய்மைப் பணியாளர்களின் குழந்தைகளில் 1,260 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் இதர திட்டங்களின்படி வழங்கப்பட்டு வரும் கல்வி உதவித் தொகையுடன் கூடுதலாக புதிய உயர்கல்வி உதவித் தொகை திட்டத்தின் கீழ், அவர்கள் எந்தப் பள்ளியில் பயின்றாலும் அவர்கள் உயர்கல்வி பயிலும்பொழுது அவர்களுக்கு அனைத்து விதமான கல்விக் கட்டணம், விடுதி கட்டணம் மற்றும் இதர கட்டணங்களுக்காக ரூ.2.82 கோடி நலத்திட்ட உதவிக்கான ஆணைகளை வழங்கினார்.

தாட்கோ நிறுவனம் மூலம் திட்டங்கள்:

தூய்மைப் பணிபுரிவோர் மற்றும் அவர்களைச் சார்ந்த குடும்ப உறுப்பினர்களுக்கு நலத்திட்ட உதவிகளான விபத்து மரண உதவித்தொகை, இயற்கை மரண உதவித் தொகை, ஈமச்சடங்கு உதவித் தொகை, கல்வி உதவித் தொகை, திருமண உதவித் தொகை, மகப்பேறு உதவித் தொகை, கருச்சிதைவு உதவித் தொகை, கண் கண்ணாடி வாங்க உதவித் தொகை மற்றும் முதியோர் ஓய்வூதியம் ஆகிய நலத்திட்ட உதவிகள் வழங்கிடும் வகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று 1,000 பயனாளிகளுக்கு ரூ.35 லட்சம் உதவித் தொகைக்கான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

தூய்மைப் பணியாளர்களின் நல்வாழ்விற்காக புதிய அறிவிப்புகளை வெளியிட்டு, அதனை செயல்படுத்தியதற்காக முதல்வர் ஸ்டாலினுக்கு தூய்மைப் பணியாளர்கள் தங்களது நன்றியினை தெரிவித்துக் கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து