Idhayam Matrimony

பழைய ஓய்வூதிய திட்டத்திற்கு பதில் தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் அறிமுகம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சனிக்கிழமை, 3 ஜனவரி 2026      தமிழகம்
CM-1-2026-01-03

சென்னை, பழைய ஓய்வூதியத் திட்டத்திற்குப் பதிலாக புதிதாக உருவாக்கப்பட்டுள்ள 'தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்ட'த்தை செயல்படுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

பழைய ஓய்வூதியத் திட்டம், காலிப் பணியிடங்களை நிரப்புதல், சம வேலைக்கு சம ஊதியம் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியா்கள் மற்றும் ஆசிரியா்களின் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ, போட்டா-ஜியோ உள்ளிட்ட அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன. இந்நிலையில் நேற்று முன்தினம் (வெள்ளிக்கிழமை) ஜாக்டோ-ஜியோ, போட்டா-ஜியோ சங்கப் பிரதிநிதிகளை தனித்தனியாக அழைத்து அமைச்சா்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு ஆகியோா் தலைமைச் செயலகத்தில் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

அதையடுத்து ஓய்வூதியம் தொடர்பாக முதல்வர் நேற்று (சனிக்கிழமை) முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என்று அமைச்சர்கள் உறுதியளித்ததாக ஜாக்டோ-ஜியோ, போட்டா-ஜியோ சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர். அதன்படி புதியதாக உருவாக்கப்பட்ட 'தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழ்நாடு அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் இருபதாண்டு காலக் கோரிக்கையினை நிறைவேற்றும் வகையில், பழைய ஓய்வூதிய திட்டத்தின் பலன்களை வழங்கக்கூடிய புதிய திட்டமான “தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்திட முதல்வர்  மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

ஆட்சி என்கிற வாகனத்தின் சக்கரங்களாக இருக்கக் கூடியவர்கள் அரசு அலுவலர்கள். அந்தச் சக்கரங்கள், மக்களுக்காக அரசு செயல்படுத்தும் திட்டங்களை கடைக்கோடி மனிதர் வரை கொண்டு சேர்க்கப் பயணிக்கின்றன. அதை உணர்ந்துள்ள அரசுதான் கலைஞர் வழிவந்த திராவிட மாடல் அரசு. அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் நலன் காப்பதில் கலைஞர் வழியில் எப்போதும் அக்கறையுடன் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான இந்த அரசு செயல்பட்டு வருகிறது.

2021-ம் ஆண்டு இந்த அரசு பொறுப்பேற்றது முதல், அனைத்துத் தரப்பு மக்களின் நலன்களையும் காக்கும் வகையில் பல்வேறு திட்டங்கள் தீட்டிச் செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டங்கள் அனைத்தையும் மக்களுக்குக் கொண்டு செல்லும் மகத்தான பணியை மேற்கொண்டு, அரசின் கரங்களாக விளங்கக்கூடிய அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலன்களைக் காத்திடத் தேவையான பல்வேறு நடவடிக்கைகளையும் முதல்வர்  தலைமையிலான இந்த அரசு எடுத்து வருகிறது.

தொடர்ந்து குறைக்கப்படும் மத்திய அரசின் வரிப்பகிர்வு, திட்டங்களுக்கான மத்திய அரசின் நிதி குறைக்கப்படுவது அல்லது முறையாக விடுவிக்கப்படாமல் இருப்பது, தமிழ்நாடு முன்னெப்போதும் கண்டிராத வளர்ச்சியை எட்டியிருப்பினும், மத்திய அரசால் கொண்டு வரப்பட்டுள்ள ஜி.எஸ்.டி. மாற்றங்களால் குறைந்து வரும் மாநிலத்தின் வரி வருவாய், உயர்ந்து வரும் நலத்திட்டச் செலவுகள் போன்றவற்றால் ஏற்படும் நிதிச்சுமைகளையும் தாண்டி,  முதல்வர் , அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலன்களைத் தொடர்ந்து காத்து வருகிறார். 

அந்தவகையில், கோவிட் பெருந்தொற்று காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அகவிலைப்படி உயர்வை 2022ஆம் ஆண்டு முதல் மத்திய அரசிற்கு இணையாக உயர்த்தி வழங்கியதோடு, மத்திய அரசுக்கு இணையாக காலதாமதமின்றி அகவிலைப்படி உயர்வு தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.  அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்று, 01.10.2025 முதல் அரசுப் பணியாளர்கள் தங்களது ஈட்டிய விடுப்பினை ஒப்படைப்பு செய்து பணமாகப் பெற்றுக்கொள்ளும் நடைமுறையை மீண்டும் அரசு செயல்படுத்தியுள்ளது.

நாட்டிலேயே வேறெங்கும் இல்லாத புதிய திட்டமாக அரசுப் பணியாளர்கள், விபத்தில் உயிரிழக்க நேர்ந்தால், 1 கோடி ரூபாயும், இயற்கை மரணமடைந்தால் 10 லட்சம் ரூபாயும், ஆயுள் காப்பீட்டுத் தொகையாக வழங்கப்பட்டு வருகிறது.  பணியிடை மரணமடையும் அரசு அலுவலர்களின் குழந்தைகளுக்கு ரூபாய் ஐந்து லட்சம் முதல்  ரூபாய் 10 லட்சம் வரை திருமணச் செலவிற்கான உதவியாகவும், மேலும், உயர்கல்வி பயில ரூபாய் 10 லட்சம் வரை நிதியுதவியும் வங்கிகள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.  அரசு அலுவலர்களின் குழந்தைகளுக்கான கல்வி முன்பணம் தொழிற்கல்விக்கு ரூபாய் 50 ஆயிரத்திலிருந்து ரூபாய் 1 லட்சமாகவும், கலை மற்றும் அறிவியல் கல்விக்கு ரூபாய் 25 ஆயிரத்திலிருந்து ரூபாய் 50 ஆயிரமாகவும் உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது.

அரசுப் பணியாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த திருமண முன்பணம் 10 ஆயிரம் ரூபாயிலிருந்து 5 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. அனைத்து மாநிலங்களைக் காட்டிலும், அதிகமாக, தமிழ்நாட்டில் பணிபுரியும் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வீடு கட்டுவதற்கான முன்பணம் 40 லட்சம் ரூபாயிலிருந்து 50 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது.    ஒழுங்கு நடவடிக்கைகளால் பணியிலிருந்து ஓய்வு பெறும் நாளன்று தற்காலிகப் பணியிடை நீக்கம் செய்யப்படும் சூழ்நிலையை அகற்றி, அரசுப் பணியாளர்களை ஓய்வு பெற அனுமதித்து ஆணை வழங்கப்பட்டுள்ளது. ஓய்வூதியப் பணிக்கொடை ரூபாய் 20 லட்சத்திலிருந்து 25 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது.

ஓய்வூதியர்களுக்கான மருத்துவக் காப்பீட்டு உதவி 10 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், அவர்களுக்கான பொங்கல் பரிசுத் தொகை ரூபாய் ஐநூறிலிருந்து ஆயிரமாக உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது.  பெண் அரசு அலுவலர்களின் நீண்டகால கோரிக்கையை ஏற்று, மகப்பேறு விடுப்பு 9 மாதங்களிலிருந்து 12 மாதங்களாக உயர்த்தப்பட்டுள்ளது. அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலனில் முழுமையான அக்கறையுடன் முதல்வர்  தலைமையிலான அரசின் சார்பில், பல்வேறு கோரிக்கைகள் பல்லாயிரம் கோடி ரூபாய் செலவில் நிறைவேற்றப்பட்டிருந்தாலும் அரசு அலுவலர்கள் ஓய்வு பெறும் நாளன்று எவ்வளவு ஓய்வூதியம் பெறுவோம் என்று அறியாமல் ஓய்வு பெறும் நிலை கடந்த இருபது ஆண்டுகளாக இருப்பதாகவும், இதனை அகற்றி பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டுமென்றும் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்கள் தொடர்ந்து கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றன.  

அவர்களின் இந்த நீண்டகாலக் கோரிக்கைகள் என்பது ஒவ்வொரு அரசு அலுவலர் மற்றும் ஆசிரியர் குடும்பத்தினரின் வாழ்க்கையுடனும் அவர்களின் எதிர்காலத்துடனும் தொடர்புடையது என்பதை உணர்ந்து, முதல்வர்  தலைமையிலான இந்த அரசு, இவற்றின் மீது முழுக்கவனம் செலுத்தியதுடன், இக்கோரிக்கைகளைப் பரிசீலனை செய்து, அரசு அலுவலர்களுக்கு முறையான ஓய்வூதியத்தை வழங்குவது குறித்து, தகுந்த பரிந்துரைகளை வழங்கிட அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் ககன்தீப்சிங் பேடி, இ.ஆ.ப., தலைமையில் ஒரு குழுவை அரசு அமைத்து, அந்தக் குழுவின் அறிக்கையையும் பெற்றுள்ளது. 

அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலன் காப்பதில் உண்மையான அக்கறை கொண்ட இந்த அரசு, அந்த அறிக்கையை முழுமையாக ஆராய்ந்து, தமிழ்நாடு அரசு தற்போது சந்தித்து வரும் நிதிச் சூழலில், அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவு செய்வதற்கான வழிமுறைகள் குறித்து நிதியமைச்சர், தலைமைச் செயலாளர், நிதித்துறைச் செயலாளர் உள்ளிட்ட உயர் அலுவலர்களிடம் முதல்வர்  ஆலோசனை நடத்தினார். அந்த ஆலோசனையின் போது, பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர், நிதித்துறை அமைச்சர் மற்றும் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ஆகியோரிடம் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் அளித்த முக்கியக் கோரிக்கைகள் பற்றியும் விவாதிக்கப்பட்டது.

அரசு அலுவலர்களின் நலன் மற்றும் எதிர்பார்ப்புகள், மாநிலத்தின் நிதிநிலை, எதிர்காலத்தில் அனைத்து அரசு அலுவலர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு எவ்வித தடைகளுமின்றி முறையாக ஊதியமும், ஓய்வூதியமும் கிடைக்கச் செய்யவேண்டிய பொறுப்பு போன்ற பல அம்சங்களை சீர்தூக்கிப் பார்த்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்குக் கிடைத்து வந்த ஓய்வூதியம் மற்றும் பல்வேறு பலன்களைத் தொடர்ந்து அளிக்கக்கூடிய புதிய திட்டமாக “தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் என்ற புதிய திட்டம் செயல்படுத்தப்படும் என்று முதல்வர்  உத்தரவிட்டுள்ளார்.

இந்த திட்டத்தை அறிமுகப்படுத்துவதால், ஓய்வூதிய நிதியத்திற்கு கூடுதலாக தமிழ்நாடு அரசு 13 ஆயிரம் கோடி ரூபாய் அளிக்க வேண்டும். இது மட்டுமல்லாமல், தமிழ்நாடு அரசு ஆண்டுதோறும் சுமார் 11 ஆயிரம் கோடி ரூபாய் அரசின் பங்களிப்பாக வழங்க வேண்டும்.  இந்தப் பங்களிப்புத் தொகை பணியாளர்களின் ஊதியத்திற்கேற்ப ஒவ்வொரு ஆண்டும் மேலும் உயரும். தற்போது தமிழ்நாடு அரசு சந்தித்து வரும் கடுமையான நிதிச்சூழலிலும், அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலன்களைக் காத்திடும் பொருட்டு, மேற்கூறிய செலவினங்களை தமிழ்நாடு அரசே முழுமையாக ஏற்றிடும்.  

 

அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலனையும் அவர்களின் குடும்பத்தின் எதிர்காலத்தையும் மனதில் கொண்டு, தொலைநோக்குப் பார்வையுடனும் நடைமுறை சாத்தியங்களுடனும் கூடிய வகையில், அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் இருபது ஆண்டு கால கோரிக்கையை நிறைவேற்றி, பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு இணையான ஓய்வூதியத்தையும்,  பணப் பயன்களையும் பெற வழிவகுக்கும் வகையில் செயல்படுத்தப்பட உள்ள இந்த திட்டத்தினை,  அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஒருமனதாக வரவேற்று, அதனைச் செயல்படுத்துவதற்கான முழு ஒத்துழைப்பையும் நல்குமாறு முதல்வர்  மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 7 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 9 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 9 months ago
View all comments

வாசகர் கருத்து