முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழ்நாட்டில் வணிக சிலிண்டர் தட்டுப்பாடு எதிரொலி: உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின் கட்டணத்தில் யூனிட்டிற்கு ரூ.2 சலுகை : முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆலோசனை கூட்டத்தில் முடிவு

சனிக்கிழமை, 14 மார்ச் 2026
CM-1-2026-03-14

வணிக சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக அனைத்து உணவகங்கள், டீக்கடைகளுக்கு  மின் கட்டணத்தில் யூனிட்டிற்கு ரூ.2 சலுகை மின்சார மானியமாக வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அவசர ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும்  இந்த மாதம் பொது விநியோக திட்டத்திற்கு கூடுதலாக 3228 கிலோ லிட்டர் மண்ணெண்ணெய் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்க ஆணையிடப்பட்டுள்ளது.

யூனிட்டிற்கு ரூ.2 சலுகை.... 

சென்னையில் மின்வாரிய தலைவர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசுகையில், “அனைத்து உணவகங்களுக்கும் மின்சார கட்டணத்தில் யூனிட்டிற்கு ரூ.2 சலுகை வழங்கப்படும். வணிக பயன்பாட்டு சிலிண்டர்கள் தட்டுப்பாடு நீங்கும் வரை மின்சார பயன்பாட்டிற்கான சலுகை தொடரும். டீ கடைகள், வீட்டில் உணவு தயாரித்து விற்பவர்களுக்கும் இச்சலுகை பொருந்தும். விறகு எரிப்பதற்கு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் முன்அனுமதி பெறத் தேவையில்லை. விவசாயிகள் உற்பத்தி செய்யும் காய்கறிகள், பழங்களை உழவர் சந்தைகளில் கட்டுப்பாடின்றி விற்கலாம்” என்று அவர் கூறினார்.

முதல்வர் ஆலோசனை...

முன்னதாக நேற்று (14.03.2026) தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சம்பந்தப்பட்ட அரசு துறையின் உயர் அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முடிவு செய்யப்பட்டு, முதல்வரால் பின்வருமாறு ஆணையிடப்பட்டுள்ளது. உணவகங்கள், டீக்கடைகள், கிளவுட் கிச்சன் உள்ளிட்ட உணவு உற்பத்தி தொழிற்கூடங்கள் எரிவாயுவிற்கு  பதிலாக மின்அடுப்புகளை பயன்படுத்தும் போது ஏற்படும் கூடுதல் மின்சார நுகர்விற்கு, யூனிட் ஒன்றுக்கு ரூ.2 மானியம் வழங்கப்படும். மத்திய அரசு அறிவித்துள்ள வணிக எரிவாயு பயன்பாட்டுக் கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் காலம் வரை இந்த மானியம் வழங்கப்படும்.

ரூ.10 லட்சம் வரை கடன்....

எரிவாயு பயன்படுத்தும் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் நெருக்கடியை சமாளிக்கும் வகையில் மின் அடுப்புகள் மின் சூடேற்றிகள் உள்ளிட்ட மின் உபகரணங்கள் கொள்முதல் செய்வதற்கு இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ், 25 சதவிகிதம் / அதிகபட்சமாக 3.75 லட்சம் ரூபாய் மானியத்துடன் கடன் வழங்கவும், தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 25 சதவிகிதம் / 2 லட்சம் ரூபாய் மானியத்துடன் 10 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கவும் மற்றும் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின் கீழ் 35 சதவிகிதம் / அதிகபட்சமாக 1 கோடி ரூபாய் வரை மானியத்துடனும் கடன் வழங்கவும் ஆணையிடப்பட்டுள்ளது.

மாற்று எரிபொருளாக...

தமிழ்நாட்டில் 60,698 தொழிற்சாலைகள் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் இசைவாணையினை பெற்று, எல்.பி.ஜி., சி.என்.ஜி., டீசல், பர்னஸ் ஆயில், விறகு போன்றவற்றை எரிப்பொருளாக பயன்படுத்தி இயங்கி வருகின்றது. இந்நிறுவனங்கள் எல்.பி.ஜி., சி.என்.ஜி. போன்ற எரிபொருட்களுக்கு மாற்றாக மண்ணென்ணை, ஆர்.டி.எப்., எச்.எஸ்.டி, பயோமாஸ் போன்றவற்றை எரிபொருளாக பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும், இதற்கு தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் இசைவாணை பெற தேவையில்லை, தகவல் தெரிவித்தால் மட்டும் போதுமானது எனவும், மத்திய அரசு அறிவித்துள்ள எல்.பி.ஜி., சி.என்.ஜி. பயன்பாட்டுக் கட்டுப்பாடுகள் கால அவகாசம் வரை இந்த விலக்கு அமலில் இருக்கும் எனவும் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கட்டுப்பாடுகள் ஏதுமின்றி... 

தமிழ்நாடு முழுவதும் 9,300 தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் வாயிலாக நாள் ஒன்றுக்கு 55 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்து கையாளும் திறன் உள்ளது. இந்த இடர்பாட்டினால் மீதமாகும் தேவைக்கு அதிகமான பாலினை பால் உற்பத்தியாளர்களிடமிருந்து ஆவின் பால் கூட்டுறவு சங்கங்களில் கட்டுப்பாடுகள் ஏதுமின்றி பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்க ஆணையிடப்பட்டுள்ளது.

காய்கறி விற்பனைக்கு...

எரிவாயு (எல்.பி.ஜி.) பற்றாக்குறையால் உணவகங்கள் மூடப்படும் வேளையில் விவசாயிகளால் உற்பத்தி செய்யப்படும் காய்கறி விற்பனை பாதிக்கப்படலாம். விவசாயிகளின் வாழ்வாதாரத்தினை கருத்தில் கொண்டு விவசாயிகளை தாங்கள் விளைவித்த காய்கறிகள் மற்றும் பழங்களை இடர்பாடின்றியும், 194 உழவர் சந்தைகளில் எவ்வித கட்டுப்பாடு இல்லாமல் விற்பனை செய்ய அனுமதி வழங்கி ஆணையிடப்பட்டுள்ளது.

அரசு அலுவலர்கள் குழு..

 

மேலும், மாநில அளவில் வணிக நிறுவனங்களுக்கு முறையாக எல்.பி.ஜி. சிலிண்டர் அளவீட்டினை ஒதுக்கீடு செய்து கண்காணிக்க தலைமைச் செயலாளர் அவர்கள் கண்காணிப்பில் அரசு உயர் அலுவலர்கள் கொண்ட குழு செயல்படவும், இதேபோன்று மாவட்ட அளவில் எண்ணெய் விநியோக நிறுவனங்களின் பொறுப்பு அலுவலர்களை உள்ளடக்கிய மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையிலான குழு கண்காணிக்கவும் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இத்துடன், இந்த மாதம் பொது விநியோக திட்டத்திற்கு கூடுதலாக 3228 கிலோ லிட்டர் மண்ணெண்ணெய் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்க ஆணையிடப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து