முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வறட்சியில் கைகொடுத்த தெளிப்புநீர் தொழில்நுட்பம் - மானாவாரிப் பகுதியில் விவசாயி சாதனை

புதன்கிழமை, 21 டிசம்பர் 2016      வேளாண் பூமி
Image Unavailable

கோபி டிசம்பர் 10, ஈரோடு மாவட்டத்தில் பெய்ய வேண்டிய ஆண்டு மழையளவான 700 மி.மீட்டரில் மூன்றில் ஒருபங்கு கூட பெய்யாததால், மாவட்ட விவசாயிகள் கடும் வறட்சியின் பிடியில் சிக்கியுள்ளனர். மொத்த சாகுபடிப் பரப்பில் சரிபாதி  மானாவாரிப் பகுதியாக இருப்பதால் , மழையை நம்பி சாகுபடி செய்யப்படும் விவசாயப் பயிர்கள் போதிய மழையின்மையால் காய்ந்து வரும் அவல நிலை உள்ளது. கீழ்பவானிப் பாசனப் பகுதியில் உள்ள ஆழ்துளைக் கிணறுகள் , பாசனத்திற்கு  நீர் திறந்துவிடப் படாததால் , ஆயிரம் அடிக்குக் கீழ் போய்விட்டன. கிணறுகளில் நீர் வற்றி வெகுகாலம் ஆகிவிட்டது. மானாவாரிப் பகுதிகளில் உள்ள ஆழ்துளைக் கிணறுகளிலும் தண்ணீர் அதல பாதாலத்திற்குச் சென்றுவிட்டது.

இந்த நிலையில் நவீன தொழில்நுட்ப வரவான சொட்டுநீர்ப் பாசனமும் , தெளிப்புநீர் பாசனமும் விவசாயிகளின் வாழ்வில் ஒளியேற்றியுள்ளது. சாதாரணமாக வாய்க்கால்கள் மூலம் ஒரு ஏக்கருக்கு நீர் பாய்ச்சினால் , அதே வயலில் சொட்டு நீர்ப்பாசனம் அமைந்தால் மூன்று ஏக்கர்கள்  வரை விவசாயம் செய்ய இயலும். அதே போல் ‘ஸ்பிரிங்லர்” எனப்படும் தெளிப்புநீர்ப்பாசனத்தால் வறட்சியில் கருகும் பயிர்களைக் காப்பாற்றி, மகசூல் குறைவு படாமல் பார்த்துக்கொள்ளலாம். மேலும் வேளாண்மைத்துறையின் சார்பில் சொட்டுநீர்ப் பாசனத்திற்கும் , தெளிப்பு நீர்ப்பாசனத்திற்கும் 100 சதவீதம் வரை மானியம் வழங்கப்படுவதால் விவசாயிகள் மத்தியில் இத்திட்டத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

நடப்பு மானாவாரிப் பருவத்தில் தெளிப்பு நீர்பாசனம் மூலம் பலனடைந்து நிலக்கடலையில் அமோக மகசூல் பெற்ற நம்பியூரை அடுத்த அஞ்சானூர் ஊராட்சி சின்னாக்கவுண்டன் பாளையம் வெளாங்காட்டுத்தோட்டத்தைச் சேர்ந்த விவசாயி பழனிச்சாமி தெரிவித்ததாவது.

‘எனக்கு சொந்தமாக 4 1ஃ2 ஏக்கர் நிலம் உள்ளது. மிகவும் வறட்சிப் பகுதியான  நம்பியூர் வட்டாரம் , அஞ்சானூரில் எனது பூமி இருக்கிறது. நான் ஒவ்வொரு ஆண்டும் நிலக்கடலை சாகுபடி செய்வேன் இந்த ஆண்டில் இரண்டரை ஏக்கரில் ஆடிப்பட்டத்தில் நிலக்கடலை பயிரிட்டிருந்தேன் மானாவாரியாக விதைத்திருந்ததால் போதிய மழை பெய்யாமல் கருகும் நிலை ஏற்பட்டது. இதற்கிடையில் வேளாண்மைத்துறை சார்பில் தெளிப்புநீர்ப் பாசனத்திற்கு மானியம் வழங்கப்படுவதாக அறிந்து அதற்கு விண்ணப்பித்து ஈ.பி.சி நிறுவனம் மூலம் ரூ19 ஆயிரத்து அறுநூறு ரூபாய் மானியத்தில் தெளிப்பு நீர்க்கருவிகளைப் பெற்றேன். கடுமையான வறட்சி நிலவியபோது எனது போர் கிணற்றில் இருந்த சிறிது தண்ணீரைப் பயன்படுத்தி தெளிப்பு நீர்க்கருவி மூலம் நன்றாக தண்ணீர் தெளித்தேன். மழைக்குப் பதிலாக இந்தக்கருவி எனக்கு நன்கு உதவியது. அறுவடையின் போது ஒரு செடிக்கு 58 காய்கள் வரை இருந்தது  ஏக்கருக்கு 820 கிலோ மகசூல் கிடைத்தது. அக்கம் பக்கத்தில் உள்ள வயல்கள் எல்லாம் காய்ந்து சருகாகிப் போன நிலையில், 100 சத மானியத்தில் வேளாண்மைத்துறை மூலம்; கிடைத்த இந்த தெளிப்புநீர்ப்பாசனம் என் பயிரைக் காப்பாற்ற உதவியது. ஒரு ஏக்கருக்கு சாகுபடிச் செலவு 15 ஆயிரம் ரூபாய் ஆனது. மொத்தம் நிலக்கடலை விற்பனை செய்ததில்; 40 ஆயிரம் வருமானம் கிடைத்ததில்  நிகர லாபமாக ஏக்கருக்கு 25 ஆயிரம் கிடைத்தது. இந்தப் பருவத்தில் மக்காச்சோளம் விதைத்துள்ளேன் இதற்கும் தெளிப்பு நீர்ப்பாசனக் கருவிகளைப் பயன்படுத்தி நல்ல மகசூல் பெறுவேன் “ என்றார்.

‘இது குறித்து நம்பியூர் வேளாண்மை உதவி இயக்குநர் அ.நே.ஆசைத்தம்பி தெரிவிக்கும் போது , நம்பியூர் வட்டாரத்தில் கடந்த ஆண்டு நுண்ணீர் பாசனத் திட்டத்தின்கீழ் அறுபது விவசாயிகளுக்கு சொட்டு நீர்ப்பாசனம் மற்றும் தெளிப்பு நீர்ப்பாசனம் அமைக்கப்பட்டு 37 லட்சம் ரூபாய் மானியம் வழங்கப்பட்டுள்ளது. சிறு ஃ குறு விவசாயிக்கு  5 ஏக்கர் வரையில் அதிக பட்சம் ஒரு லட்சம் ரூபாய் மானியமும் ,  5 ஏக்கருக்கு அதிகமான நிலம் உள்ள விவசாயிகளுக்கு அதிகபட்சம் 5 எக்டர் வரையில் 75 சத மானியமும் வழங்கப்படுகிறது. நம்பியூர் வட்டாரத்தில் நடப்பு ஆண்டில் சொட்டுநீர்ப் பாசனத்திற்கும் , தெளிப்பு நீர்ப் பாசனம் வேண்டியும் வேளாண்மைத்துறைப் பதிவேட்டில் முன்பதிவு செய்துள்ள விவசாயிகள் உடனடியாக வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகி விவரங்களை அறிந்து கொள்ளலாம்” என்றார்

மொத்தத்தில் கடும் வறட்சி நிலவும் இந்தத் தருணத்தில் குறைந்த நீர்த்தேவையில் நல்ல மகசூல் கொடுக்கவும் , வாடுகின்ற நிலையில் உள்ள பயிர்களைக் காப்பாற்றவும் விவசாயிகள் சொட்டு நீர்ப் பாசனத்திற்கும் , தெளிப்பு நீர்ப் பாசனத்திற்கும் மாறவேண்டும் என்பது காலத்தின் கட்டாயமாக உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!