முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராமநாதபுரம் மாவட்டத்தில் குறைந்த தண்ணீரில் அதிக பயிர் சாகுபடி "தொழில்நுட்பம்"

புதன்கிழமை, 28 டிசம்பர் 2016      வேளாண் பூமி
Image Unavailable


ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டத்தில் தோட்டக்கலைத்துறையின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் குறைந்த தண்ணீர் மற்றும் குறைந்த பொருட்செலவில் அதிக பயிர் சாகுபடி செய்யும் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி விவசாயிகள் பயனடைய கலெக்டர் முனைவர் நடராஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம் மற்றும் கடலாடி ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள கிராமங்களில் தோட்டக்கலைத் துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் தோட்டக்கலை பயிர்களுக்கான மானிய உதவி வழங்கும் திட்டத்தினைப் பயன்படுத்தி பயனாளிகள் அமைத்துள்ள தோட்டக்கலைப் பயிர் தோட்டங்களை மாவட்ட கலெக்டர் முனைவர்.ச.நடராஜன் செய்தியாளர்களுடன் சுற்றுப்பயணம் மேற்கொண்டு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். ராமநாதபுரம் மாவட்டத்தில் பிரதான தோட்டக்கலைப் பயிர்களாக மிளகாய், கொத்தமல்லி, கத்தரி, வெண்டை போன்றவை சாகுபடி செய்யப்பட்டு வருகிறன.  வறட்சியான சூழ்நிலையிலும், குறைந்த அளவில் நீரைப் பயன்படுத்தி  தோட்டக்கலைப் பயிர்களை சாகுபடி செய்திடும் விதமாக தோட்டக்கலைத் துறையின் சார்பாக விவசாயிகளுக்கு பயிற்சி வழங்குவதோடு, விவசாயிகளுக்கு பசுமைக்குடில், பந்தல் தோட்டம், சொட்டுநீர் பாசனம் ஆகியவற்றிற்கு மானிய உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியம், தெற்குத்தரவை கிராமத்தில் சத்தியமூர்த்தி என்பவர் மாநில சமச்சீர் வளர்ச்சி நிதி திட்டத்தின் கீழ் தோட்டக்கலைத் துறையின் சார்பாக உயர்தொழில்நுட்பத்துடன் பசுமைக்குடில் அமைப்பதற்கு மானிய உதவி வழங்கும் திட்டத்தினைப் பயன்படுத்தி ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் பசுமைக் குடில் அமைத்துள்ளார்.  இந்த பசுமைக் குடிலானது அரசு மானியமாக ரூ.4.75 லட்சம் மற்றும் விவசாயியின் பங்களிப்பாக ரூ.4.75 லட்சம்  என மொத்தம் ரூ.9.50 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ளது. இதில் உயர் விளைச்சல் ரக வெள்ளரி சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இந்த பசுமைக் குடிலில் சொட்டு நீர் பாசன வசதியும்; இந்த சொட்டு நீர் பாசனத்தின் வழியாக நீர்உரமாக செடிகளுக்கு பாய்ச்சும்  வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பசுமைக்குடிலில் ஒவ்வொரு இலைக் கொத்திலும் சுமார் 6 முதல் 10 வரை வெள்ளரிக்காய் மகசூல் கிடைக்கிறது. மேலும் ஒவ்வொரு அறுவடைக்கும் சுமார் 500 முதல் 750 கிலோ வரை வெள்ளரி விளைச்சல் செய்து பயனடைந்து வருவதாக சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

அதேபோல  கடலாடி வட்டம் கடுகுசந்தை கிராமத்தை சார்ந்த நாகலிங்கம் மனைவி இந்துராணி  என்பவர் தேசிய வேளாண் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் தோட்டக்கலைத் துறையின் மூலம் வழங்கப்படும் மானிய உதவித்தொகையினைப் பயன்படுத்தி 4.00 எக்டர் பரப்பளவில் தரமான பந்தல் அமைத்து  பீர்க்கு, பாகல், புடல், சுரை மற்றும் வீரிய ஒட்டு தக்காளி போன்ற பயிர்கள் சாகுபடி செய்து வருகிறார். இப்பந்தல் தோட்டம் அமைப்பதற்கு அரசு மானியமாக ஏக்கருக்கு ரூ.80ஆயிரம் வழங்கப்பட்டு உள்ளது. இந்த பந்தல் சாகுபடிக்கு சொட்டு நீர் பாசன வசதியும்; அமைக்கப்பட்டு உள்ளது. இந்த சொட்டு நீர் பாசனத்தின் வழியாக நீர்உரமாக செடிகளுக்கு பாய்ச்சும்  வசதியும் உள்ளது. இப்பந்தல் தோட்டத்தின் மூலம் மாதந்தோறும் ரூ.30ஆயிரம் முதல் ரூ.40ஆயிரம் வரை வருமானம் பெற்று பயனடைந்து வருவதாக தெரிவித்தார்.

இவ்வாறு கலெக்டர்; முனைவர்.ச.நடராஜன் மேற்குறிப்பிட்டுள்ள பசுமைக்குடில் மற்றும் பந்தல் தோட்டம் ஆகிய இரண்டு இடங்களுக்கும் செய்தியாளர்களுடன் சுற்றுப்பயணம் மேற்கொண்டு நேரடியாகச் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். சம்பந்தப்பட்ட விவசாயிகள் பயிர்சாகுபடிக்காக தாங்கள் மேற்கொண்டு வரும் தொழில்நுட்ப முறைகள் குறித்து கலெக்டரிடம் விளக்கம் அளித்தனர்.  பயிர் சாகுபடியில் குறைந்த அளவு தண்ணீர் மற்றும் பொருட்செலவில் அதிக மகசூல் பெற்றிடும் வகையில் புதிய தொழில்நுட்பங்களைக் கையாள வேண்டும் என கலெக்டர் விவசாயிகளிடத்தில் தெரிவித்தார். மேலும் தோட்டக்கலைத் துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் இதுபோன்ற மானிய உதவி திட்டங்கள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வும் ஏற்படுத்திட வேண்டும் என அலுவலர்களிடத்தில் தெரிவித்தார். இந்த ஆய்வின் போது தோட்டக்கலை துணை இயக்குநர் ச.தமிழ் வேந்தன், வேளாண்மை அலுவலர் அம்பேத்குமார் உள்பட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!