முக்கிய செய்திகள்

பைக் ஓட்டும் பெண்களுக்கான பாதுகாப்பு டிப்ஸ்...

வெள்ளிக்கிழமை, 27 ஜனவரி 2017      மோட்டார் பூமி
Motor Bike

Source: provided

சீறிச் செல்லும் வேகத்தில் பைக்கில் பறக்கிறார்கள் இளம் பெண்கள். அவர்களின் வேகம் சில நேரங்களில் திகைக்க வைக்கிறது. எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களும், கைகளால் கியர் மாற்றும் `பைக்’களும் வந்தபிறகு பைக் ஓட்டும் பெண்களின் எண்ணிக்கை பல மடங்கு பெருகிப் போனது.

பெற்றோர், காதலர் போன்ற உறவுகளுடனும், பணி நிமித்தமாக தனியாக, தோழிகளுடன் என பைக்கில் பயணிக்கும் பெண்கள் ஏராளம். வாகனம் ஓட்டுவதில் ஆண்களைவிட பெண்களுக்கு சிரமம் கொஞ்சம் அதிகம் தான். வேகம் மட்டும் பிரச்சினை அல்ல, பெண்கள் உடை அணியும் முறை கூட அவர்களை விபத்தில் சிக்க வைத்து விடும்.எனவே அடிக்கடி இரு சக்கர வாகனத்தில் பயணிக்கும் பெண்கள் இதை ஒரு முறை படித்துவிட்டு பயணத்துக்கு கிளம்புங்க…

சேலை உடுத்தும் பெண்கள்.. சேலை உடுத்தி செல்லும் பெண்கள், அதிக இறுக்கமாகவோ அல்லது தளர்வாகவோ சேலை கட்டக் கூடாது. இறுக்கமாக அணிந்தால் பயணத்தின்போது சுமூகமாக இருக்காது. தளர்வாக இருந்தால் காற்றினால் மேலும் தளரும். முந்தானையைச் சரியாக தோள்பட்டையில் `ஊக்கு’ கொண்டு பின் செய்து இருக்க வேண்டும். முந்தானை காற்றில் பறப்பதுபோல இருக்கக் கூடாது. இடுப்பில் சொருகப்பட்டு இருக்க வேண்டும். சேலை காற்றில் பறந்தவாறு இருந்தால் `ரியர் வியூ’ கண்ணாடியை மறைக்கும். எனவே கவனம் தேவை.

வழவழப்பு தன்மை கொண்ட சேலையை உடுத்தி பயணிப்பது ஆபத்தானது. ஏனெனில் திடீர் `பிரேக்` போடும்போது அமர்ந்திருக்கும் நிலையில் இருந்து நழுவி வாகனம் கட்டுப்பாட்டை இழக்கும் ஆபத்து இருக்கிறது. இரவு நேரங்களில் பயணிக்க வேண்டிய நிலை இருந்தால் பளிச்சிடும் வண்ணம் கொண்ட சேலையை தேர்ந்தெடுங்கள். அது இரவில் ஒளியைப் பிரதிபலிப்பதால் பாதுகாப்பாக பயணிக்கலாம்.

பின்னால் (பில்லியனில்) அமரும் பெண்களுக்கு…! துணிமணிகள் சக்கரத்திற்குள் செல்லாமல் தடுக்கும் `சாரி கார்டு’ இல்லாத பைக்கில் அமர்ந்து செல்வது பாதுகாப்பானது அல்ல. சேலை அணிந்திருந்தால் இரு பக்கமும் கால் வைத்து பின் சீட்டில் அமர முடியாது. ஒரு பக்கமாகத்தான் அமர முடியும். வண்டியை ஓட்டுகிறவர், பின் சீட்டில் அமர்ந்து செல்பவர் என இருவருக்குமே இதனால் பேலன்ஸ் கிடைக்காது. எனவே கூடுமானவரை சேலை அணிவதை தவிர்க்கலாம்.

முந்தானை தொங்கியவாறு இருந்தால் பின் சக்கரத்தில் சிக்கிக் கொள்ளும் அபாயம் உண்டு. எனவே முந்தானையை இடுப்பில் சொருகிக் கொண்டு கவனமாக அமர வேண்டும். ஓட்டுனரின் இடுப்பைப் பிடித்தவாறு பயணிப்பதுதான் பாதுகாப்பானது. தோள்பட்டையைப் பிடித்தால் ஓட்டுனருக்கு சமநிலை (பேலன்ஸ்) கிடைக்காது. திடீர் பிரேக் போடும் சூழ்நிலை ஏற்படும்போது ஓட்டுநரைப் பிடித்துக் கொள்ளாமல் இருந்தால் கீழே விழும் அபாயம் இருக்கிறது என்பதால் கவனமாக இருங்கள்.

பயணத்தின்போது செல்போனில் பேசினால் பைக் பேலன்ஸ் செய்வது சிரமமாக இருக்கும். கவனமும் சிதறும். விபத்து ஏற்படும். ஒரு பக்கமாக அமரும்போது கால்மீது கால்போட்டு அமருவது ஆபத்தானது. சவுகரியமாகவும் இருக்காது. வெயிலுக்காகத் தலைமீது சேலையைச் சுற்றியிருந்தால் அதைச் சரியாக பின் செய்து இருப்பது நல்லது.

சுடிதார் அணிந்து பைக் ஓட்டும் பெண்களுக்கு… அதிக இறுக்கமாகவோ, அதிக தளர்வாகவோ சுடிதார் அணிவதைத் தவிருங்கள். இறுக்கமாக அணிந்தால் பயணம் சவுகரியமாக இருக்காது. துப்பட்டா இரு தோள்பட்டையிலும் பின் செய்யப்பட்டு, முன்பக்கமாக முடிச்சு போட வேண்டும். பின்பக்கம் முடிச்சு போட்டுக் கொள்வது தவறு. முடிச்சு அவிழ்ந்து விட்டால் வாகனத்தை ஓட்டிக் கொண்டு சரி செய்ய முயற்சிப்பது தவறு.

துப்பட்டாவைக் குறுக்காக அணிபவர்கள் தோள்பட்டையில் பின் செய்து முடிச்சை பக்கவாட்டில் இல்லாமல் முன்பக்கம் இருக்குமாறு அணிவது நல்லது. முகத்தை மறைத்தோ அல்லது தலையை மூடியோ கழுத்தைச் சுற்றியவாறு துப்பட்டாவை போட்டிருந்தால் அதன் முனை எதிலாவது சிக்கினால் கழுத்து முறிந்து போகும் ஆபத்து இருக்கிறது.

சுடிதார் அணிந்தபடி பில்லியனில் இருப்பவர்கள்… இரு பக்கமும் கால்போட்டு அமருங்கள். இது ஓட்டுநருக்கு சவுகரியமானது மட்டுமல்ல, உங்களுக்கும் பாதுகாப்பானது. ஒரு பக்கமாக அமர்ந்தால் சேலை அணிந்து பயணிக்கும்போது உண்டாகும் ஆபத்துகள் அனைத்தும் இதிலும் உண்டு. சில சமயம் பின் பக்க விளக்குகள், `நம்பர் பிளேட்` போன்றவற்றை சுடிதாரின் பின்பகுதி மறைக்கும். அப்போது இண்டிகேட்டர், பிரேக் லைட் தெரியாததால் பின்னால் வரும் வாகனம் மோதிவிடும் ஆபத்து உண்டு.இரு கால்களையும் உங்களுக்கு உரிய `புட் ரெஸ்ட்`டில் வைத்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் ஓட்டுனருக்கு பாலன்ஸ் கிடைக்காது.

பொதுவான கவனிக்க வேண்டியவை: பின்னால் அமர்ந்திருப்பவர்களும் ஓட்டுநரைப் போலவே ஹெல்மட் அணிவது பாதுகாப்பானது. தலைமுடியை காற்றில் பறக்க விடக்கூடாது. நீண்ட கூந்தல் உள்ளவர்கள் கவனமாக வாகனம் ஓட்ட வேண்டும். கைக்குழந்தைகளை மடியிலோ, தோளிலோ தூக்கிச் செல்வதை தவிருங்கள். ஹேண்ட் பேக்கை தோளில் மாட்டிச் செல்வதை தவிர்த்திடுங்கள்.

 

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்: