லக்னோ - இந்து அமைப்புகளை திருப்திப்படுத்துவதில் இருந்து விலகி நிற்குமாறு பாஜகவுக்கு உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வரும் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவருமான மாயாவதி வேண்டுகோள் விடுத்துள்ளார். சஹரான்பூரில் வெடித்த வன்முறைச் சம்பவத்தை சுட்டிக்காட்டி அவர் இக்கருத்தைத் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில், "கொலைகள், வன்முறைச் சம்பவங்கள், சட்டவிரோத போக்கு ஆகியன மலிந்துவிட்டன. இதற்குக் காரணம் பாஜக காவிகளை ஆதரிப்பதே. பாஜக ஆட்சியின் கீழ் மத ஊர்வலம் என்ற போர்வையில் வன்முறையைக் கட்டவிழ்த்துவிடுவது சகஜமாகிவிட்டது. வாக்குறுதி அளித்ததுபோல் அனைத்து மக்களுக்கும் பாஜகவினர் நியாயமானவர்களாக நடந்து கொள்ள வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
கலவரப் பின்னணி:
உத்தரப் பிரதேச மாநிலம் சகரன்பூரில் மன்னர் மகாராணா பிரதாப்பின் பிறந்தநாளை கொண்டாடுவதற்காக தாக்கூர் சமுதாயத்தினர் இசைப்பேரணி நடத்தினர். பல்வேறு கிராமங்கள் வழியாகச் சென்ற இப்பேரணி சஹரான்பூரைச் சென்றடைந்தது. அப்போது அப்பகுதி மக்கள் பேரணிக்கு ஆட்சேபம் தெரிவித்தனர். அப்போது தகராறு முற்றியதில் இரு தரப்பினரும் கற்கள், கிரிக்கெட் மட்டைகளைக் கொண்டு தாக்கிக்கொண்டனர். இதில் தாக்கூர் இனத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். இதையடுத்து அப்பகுதியில் உள்ள 25-க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டது. தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவுகிறது.