முக்கிய செய்திகள்

மானாவாரி விவசாயத்தில் சிறு தானியங்கள், பயறு வகைகள் எண்ணை வித்துகள் பயிர் செய்து வருமானத்தை அதிகரிக்க விவசாய இயக்கம்

புதன்கிழமை, 31 மே 2017      வேளாண் பூமி
velon

Source: provided

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மானாவாரி விவசாயத்தில் சிறுதானியங்கள், பயறு வகைகள், எண்ணெய் வித்துக்கள் பயிர்களில் உற்பத்தியை அதிகரித்து மானாவாரி விவசாயிகளின் வருமானத்தை அதிகரித்திடும் நோக்கத்தில் நீடித்த மானாவாரி விவசாயத்திற்கான இயக்கம் என்ற சிறப்புத் திட்டம் 2016-17-ம் ஆண்டு முதல் ரூ.12.0435 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டம் 3 ஆண்டுகளுக்கு தொடர்ந்து செயல்படுத்தப்படும்.
 இத்திட்டத்தில் மானாவாரி நிலங்கள் தொகுப்பாக தேர்வு செய்யப்படுகிறது.

ஒரு தொகுப்பானது 1000 எக்டர் மானாவாரி சாகுபடி நிலப்பரப்பு உடையதாகும். இவற்றில் ஒன்று அல்லது இரண்டு கிராம பஞ்சாயத்துகள் தொகுப்பில் அடங்கும். முதலாண்டில் 15 தொகுப்புகளும், அடுத்த இரண்டு ஆண்டுகளில் தலா 30 தொகுப்புகளிலும், ஆக மொத்தம் 75 தொகுப்புகளில், நிலப்பரப்பு மொத்தம் 1.875 இலட்சம் ஏக்கர் நிலப்பரப்பில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

நடப்பாண்டில் 7 வட்டாரங்களில் 15 தொகுப்புகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அவற்றுள் தொகுப்பு மேம்பாட்டு குழுக்கள், வட்டார குழுக்கள் மற்றும் விவசாய குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது. குழுக்களில் உள்ள விவசாயிகளுக்கு தேவையான விவரங்கள் சேகரித்து, முடிவுகள் ஒருங்கிணைக்கப்பட்டு, இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தேவையான மழைநீர் சேமிப்பு கட்டமைப்புகள் ஏற்படுத்துதல், மானாவாரி தொகுப்பிற்கு உகந்த பயிர் மேலாண்மை பணிகளை தொகுப்பு மேம்பாட்டுக்குழு வழிநடத்திச் செல்லும்.

 வேளாண் பொறியியல் துறை கண்காணிப்பில் உழவு மானியம் நடப்பாண்டில் ஏக்கருக்கு ரூ.500 வீதம் 37500 ஏக்கருக்கு, உழவு மானியம் வழங்கப்படும். சிறுதானிய பயிர்கள் 26,390 ஏக்கரிலும், பயறு வகை 10855 ஏக்கரிலும், எண்ணெய்வித்துக்கள் 225 ஏக்கரிலும், சாகுபடி செய்யப்பட உள்ளது. விதைகள் மற்றும் உயிர் உரங்கள் 50 சதம் மானிய விலையில் விவசாயிகளுக்கு வினியோகம் செய்யப்படும். மானாவாரி தொகுப்பில் உற்பத்தி செய்யப்படும் விளை பொருட்களை மதிப்புக்கூட்டி விற்பனை செய்ய வேளாண் வணிகம் மற்றும் விற்பனை துறையின் வழகாட்டுதல்படி பயறு உடைக்கும் இயந்திரங்கள், செக்கு இயந்திரங்கள், சிறுதானியங்கள் சுத்திகரிப்பு இயந்திரங்கள் அரசு நிதி உதவியுடன் விவசாய குழுக்களுக்கு வழங்கப்படும். படித்து வேலைவாய்ப்பில்லாத கிராமப்புற இளைஞர்களை ஊக்குவிக்க இயந்திர வாடகை மையம் 80 சதம் மானியத்தில் அமைக்கலாம். கால்நடை பராமரிப்பிற்காக ஊட்டச்சத்து கலவை விநியோகம் மற்றும் பால் உற்பத்தி உயர்வு பணிகளுக்காக கால்நடை துறையின் வழிகாட்டுதல் மூலம் விவசாய குழு உறுப்பினர்களுக்கு அரசு நிதியில் இடுபொருட்கள் வழங்கப்படும்.

திறன் மேம்பாட்டு பயிற்சி  :   மானாவாரி வேளாண்மையில் தொழில்நுட்ப பயிற்சி முக்கியமானது. மாவட்ட அளவில் முதன்மை பயிற்சியாளர்கள் ஒவ்வொரு மானாவாரி தொகுப்பிலிருந்தும் ஐந்து அலுவலர்கள் வீதம் 75 அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். இதில் வேளாண்மை, வேளாண் பொறியியல், கால்நடை பராமரிப்பு, வேளாண் விற்பனை மற்றும் வணிகம், கூட்டுறவு மற்றும் வேளாண் பல்கலை கழக ஆராய்ச்சி நிலைய அறிஞர்கள் மூலம் அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.

 இதனைத் தொடர்ந்து இந்த பயிற்சி வட்டார அளவிலும், பின்னர், கிராம அளவிலும் திட்ட செயலாக்கக்குழு விவசாய உறுப்பினர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். இத்திட்டம் குறித்து மேலும் விபரங்களை அறிய வேளாண்மை இணை இயக்குநர் - 9597251659, வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்கள் வேப்பனப்பள்ளி-9443207504, மத்தூர்-9787508300, ஊத்தங்கரை-9486755252, சூளகிரி-9444685112, ஓசூர்-97508215656, கெலமங்கலம் மற்றும் தளி-9442630246, மேலும் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தையும் தொடர்பு கொள்ளலாம்.

இத்திட்டத்தில் ஏறத்தாழ 16000 சிறுவிவசாயிகள், குறு விவசாயிகள், மகளிர், ஆதிதிராவிட விவசாயிகள் மற்றும் பெரிய விவசாயிகள் பயன்பெற உள்ளனர். எனவே, கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் சி.கதிரவன்  மானாவாரி கிராம விவசாயிகள், மழைநீரை நன்கு பயன்படுத்தி, நவீன வேளாண் தொழில் நுட்பங்களை பின்பற்றி அதிக மகசூல், கூடுதல் வருமானம் பெற அனைத்து விவசாயிகளும் பங்குபெற்று பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து