முக்கிய செய்திகள்

வெள்ளாடு வளர்ப்பின் நன்மைகளும் இனப்பெருக்க பராமரிப்பும்

சனிக்கிழமை, 17 ஜூன் 2017      வேளாண் பூமி
white goat-

Source: provided

வெள்ளாடு வளர்ப்பு மற்ற கால்நடைகள் வளர்ப்பதைக் காட்டிலும் அதிக இலாபம் தரும் தொழிலாகும்.  மேலும், ஊரக வேலைவாய்ப்பை உருவாக்கி வறுமை ஒழிப்பிற்கு உறுதுணையாக விளங்குவதில் வெள்ளாடு சிறந்து விளங்குகிறது.

இந்தியாவில் வெள்ளாடு “ஏழைகளின் பசு” என்று அழைக்கப்படுகிறது.  சிறு, குறு விவசாயிகள் மற்றும் நிலமற்ற கூலித் தொழிலாளர்களுக்கு வாழ்வாதாரமாக ஆடு வளர்ப்புத் தொழில் விளங்குகிறது.  ஐரோப்பிய நாடுகளில் கைக்குழந்தைகளுக்கு பால் தரும் “செவிலித் தாய்” என்று அழைக்கப்படுகிறது.  வெள்ளாடு வளர்ப்பதற்கு மிகக் குறைந்த செலவே ஆகும்.  பசு, எருமைகள் வளர்க்க முடியாதவர்கள் கூட வெள்ளாடுகள் வளர்த்து வேலைவாய்ப்பு மற்றும் வருமானத்தை அதிகப்படுத்தலாம்.  ஆடுகளைச் சாலை ஓரங்களிலும், தரிசு நிலங்களிலும், மலைச்சரிவுகளிலும் மேயவிட்டு வளர்க்கலாம். 

இதற்காக அதிக இடமோ, அதிக செலவோ தேவையில்லை.  எல்லா வகையான புல், பூண்டுகளையும், இலைதழைகளையும், முலிகை கலந்த செடிகொடிகளையும் மற்ற கால்நடைகள் உண்ணாத பொருட்களைக் கூட உண்டு உயிர் வாழ கூடியவை. வெள்ளாடுகள் நம் நாட்டில் நிலமற்ற வேளாண் தொழிலாளர்களுக்கும் வறுமைக் கோட்டிற்குக் கீழ் இருக்கும் மக்களுக்கும் வெள்ளாடு வளர்ப்பு ஒரு நிரந்தர வருவாய் மற்றும் வேலைவாய்ப்பு வழங்கும் தொழிலாக விளங்குவதால் வெள்ளாடுகள் ஏழைகளின் நடமாடும் வங்கியாகக் கருதப்படுகிறன.

வெள்ளாட்டின் நன்மைகள்

• குறைவான முதலீடு, குறைந்த செலவில் தீவனம் கொடுத்து வளர்க்கவல்லது

• அதிக உற்பத்தி மற்றும் ஈனும் திறன், அதிக தீவன மாற்றுத்திறன் கொண்டவை.

• இறைச்சி அனைத்து தரப்பினராலும் உண்ணக்கூடியது

• கறிக்காகவும், பாலுக்காகவும், தோலுக்காகவும், உரத்திற்காகவும் வளர்க்கலாம்.

• அதிகமான அளவில் குட்டிகளை ஈனும் திறன் கொண்டவை. ஒரு ஈற்றில் 2 முதல் 4 குட்டிகள் வரை ஈனும்

• இரண்டு வருடத்தில் மூன்று முறை குட்டிகளை ஈனும்

• வெள்ளாட்டு பால் சளி மற்றும் சுவாச கோளாறுகளை குணப்படுத்தும் மருத்துவ தன்மை கொண்டது. 

வெள்ளாட்டு இனங்களைத் தேர்வு செய்தல்

இனங்களைத் தேர்வு செய்யும் போது எந்த முறையில் வெள்ளாடு வளர்ப்பு செய்கிறோம் என்பதனை கருத்தில் கொண்டு பண்ணை ஆரம்பிக்கப்படுகிறதோ அதன் அடிப்படையில் இனங்களைத் தேர்வு செய்து கொள்ள வேண்டும்.

அதிக பால் கொடுக்கும் இனங்கள்; : ஜமுனாபாரி, பார்பாரி, பீட்டல், தலைச்சேரி

அதிக இறைச்சி தரக்கூடியவை : ஜமுனாபாரி, போயர், சிரோகி

அதிக குட்டிகள் ஈனக்கூடியவை : தலைச்சேரி, பார்பாரி

தமிழ்நாட்டில் கொட்டில் முறை வளர்ப்பில் இறைச்சி உற்பத்தியை இலக்காகக் கொண்டு ஆரம்பிக்கப்படும் பண்ணைக்கு போயர், ஜமுனாபாரி, தலைச்சேரி, சிரோகி ஆகிய இனங்கள் ஏற்றவை.

இனப்பெருக்க பராமரிப்பு

வெள்ளாடு வளர்ப்பில் இனப்பெருக்க பராமரிப்பு என்பது மிகவும் முக்கியமானதாகும்.  கொட்டில் முறையில் வெள்ளாடு வளர்க்க விரும்புவோர் நல்லதோர் இனச் சேர்க்கைக் கொள்கையைக் கடைப்பிடித்தல் அவசியம்.  ஏனெனில் அப்போதுதான் தரமான குட்டிகளை உற்பத்தி செய்து வருவாய் ஈட்ட முடியும்.

வெள்ளாடுகளின் பெட்டை ஆடுகள் 6-8 மாதத்திலும், கிடாக்கள் 8-10 மாதத்திலும் பருவம் அடையும்.  ஆனால் இனப்பெருக்கத்திற்கு ஏற்ற தகுதியைப் பெட்டையாடுகள் 12-15 மாதத்திலும், கிடாக்கள் 18 மாதத்திலும் அடைகின்றன.  பொதுவாக வெள்ளாடுகள் மே, ஜனவரி மாதங்களில் சினை தருணத்திற்கு வரும்.  எனினும் ஆண்டின் எத்தருணத்திலும் இனவிருத்தியாவதுண்டு.  பெட்டையாடுகள் 19-21 நாட்களுக்கு ஒரு முறை சினைப்பருவத்திற்கு வருகின்றன. 

சினைப்பருவம் 24-28 மணி நேரம் நீடித்திருக்கும்.  பெட்டைகளைச் சினைப்பருவ அறிகுறிகள் ஆரம்பித்த பிறகு 12 முதல் 24 மணி நேரத்திற்குள் நல்ல தரமான கிடாவுடன் இனச்சேர்க்கை செய்ய வேண்டும். இனப்பெருக்கத்திற்காக சுமார் 20 முதல் 30 ஆடுகளுக்கு ஒரு பொலிகிடா போதுமானது.  பெரிய மந்தையாக இருப்பின் இதே விகிதத்தில் அதிக கிடாக்கள் தேவைப்படும்.  இனச்சேர்க்கை செய்த 21 நாட்களுக்கு பிறகு பெட்டைகளில் சினைப்பருவ அறிகுறிகள் தென்படுகிறதா என்று கவனிக்க வேண்டும்.  இவ்வாறு பருவத்திற்கு வரும் சினைப்பிடிக்காத ஆடுகளை மீண்டும் கிடாவுடன் சேர்த்து இனச்சேர்க்கை செய்ய வேண்டும்.

சினைப்பருவ அறிகுறிகள்

• சினைப்பருத்திலுள்ள ஆடுகள் அடிக்கடி கத்திக் கொண்டு நிதானமின்றியும், வாலை ஆட்டிக் கொண்டும், தீவனத்தில் விருப்பம் இல்லாமலும் காணப்படும்.

• மற்ற ஆடுகள் மேல் தாவும், பிற ஆடுகளைத் தம் மேல் தாவ அனுமதிக்கும்.

• பால் உற்பத்தி அளவு குறையும்

• இனப்பெருக்க பிறப்புறுப்புத் தடித்துக் காணப்படும்.  அதிலிருந்து வழவழப்பான திரவம் வெளிப்படும்.

• வெள்ளாடுகள் சினைத் தருணத்தை மிகுந்த வெளிப்படையாகக் காட்டாது.  எனவே, பொலி கிடாவைக் காலை, மாலை அருகில் விட்டு சினைத் தருணத்தை அறிந்து, தக்கபடி இனச்சேர்க்கை செய்ய வேண்டும்.

ஆடுகளின் சினைக்காலம் 145 முதல் 150 நாட்களாகும்.  சினையுற்ற ஆடுகள் கருவூட்டல் செய்த இரண்டு மாதத்தில் வயிறு பெரிதாக காணப்படும்.  காலை நேரங்களில் சினை ஆடுகளை பரிசோதனைக்கு உட்படுத்துவது அவசியம்.  ஏனெனில் காலை நேரத்தில் வெறும் வயிராக இருக்கும் பொழுது சினையில்லா ஆடுகள் வயிறு ஒட்டியும், சினையான ஆடுகளின் வயிறு பெரிதாகவும் காணப்படும்.  அதோடு வயிற்றின் கீழ்ப்பகுதியின் ஒரு புறத்தில் ஒரு கையை வைத்துக் கொண்டு மறுபுறம் இருந்து மறு கையின் உதவியால் மென்மையாக அழுத்திப் பார்ப்பதன் மூலம் குட்டியின் இருப்புத் தன்மையை அறிந்து கொள்ளலாம்.

குட்டி ஈனுதல்

குட்டி ஈனும் தருணத்தில் ஆடு அமைதியுற்று கத்திக் கொண்டிருப்பதுடன் வயிறு சுருங்கி விரிதல், அடிக்கடி உட்கார்ந்து எழுதல், மூச்சுத் திணறல், தரையை காலால் பிராண்டுதல் போன்ற அறிகுறிகளையும் வெளிப்படுத்தும்.  இத்தகைய அறிகுறிகள் தென்பட்ட ஒரு மணி நேரத்தில் குட்டியை ஈன்றுவிடும்.  ஈனும் குட்டியானது முன்னங்கால்கள் இரண்டையும் நீட்டி, தலையை காலின் மேல் வைத்த வண்ணம் வெளியில் வரும்.  இரண்டு குட்டிகளை ஈனும் நேரமானது சற்றே வேறுபடும்.  அதாவது முதலாவது குட்டிக்கும், இரண்டாவது குட்டிக்கும் இடையே உள்ள ஈனும் நேரமானது சில நிமிடங்களில் இருந்து ஒரு மணி நேரத்திற்கு மேலாகவும் ஆகலாம்.  மேலும், தாமதம் ஏற்பட்டால் உடனடியாக கால்நடை மருத்துவரை அணுகி தகுந்த சிகிச்சை செய்து கொள்வது அவசியம்.

குட்டி ஈன்றபின் நஞ்சுக் கொடியானது 30 நிமிடம் முதல் 8 மணி நேரத்திற்குள்ளாக வெளித்தள்ளப்பட்டுவிடும். குட்டி ஈன்ற ஆடுகளுக்கு சரியான முறையில் அடர் தீவனமும், பசுந்தீவனமும் கொடுப்பதன் மூலம் அதன் கருப்பை சுருங்கி 45 நாட்களில் மீண்டும் பருவ சுழற்சி ஏற்படும்.  இல்லையெனில் 7 முதல் 9 மாதங்களுக்கு பின்பே பருவச் சுழற்சி ஏற்படும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து