நம் உடல் நலத்தை காக்கும் செடிகள்: வீட்டு தோட்டத்தில் வளர்க்கலாமே?

வெள்ளிக்கிழமை, 3 நவம்பர் 2017      மருத்துவ பூமி
katraazhai

Source: provided

இன்றைய அவசர காலத்தில் நாம் செய்யும் கடுமையான பணிகள் மூலம் நமது உடல் நலத்தை நம்மால் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள முடியவில்லை. எனவே நமது வீட்டில் மூலிகை செடிகளை வளர்த்து வருவதன் மூலம் நம் உடம்பின் ஆரோக்கியத்திற்கு பயன் தரக்கூடியதாக இந்த மூலிகைச் செடிகள் இருக்கும். நமது உடல் நலத்தைக் பாதுகாக்கும் மூலிகைகள் என்னெவென்று தெரிந்துக் கொண்டு அந்த செடிகளை நம் வீட்டில் வளர்த்து சிறந்த முறையில் பயன் பெறலாம்.

துளசி  :  சளியை போக்கி சிறந்த நிவாரணியாகப் பயன்படும் துளசி செடியை நமது வீட்டில்  வளர்ப்பதன் மூலம் ஏராளமான நன்மைகளை நாம் பெறலாம். கிருமி நாசினியாக  விளங்கும் இந்த துளசிச் செடியானது, ஆக்ஸிஜனை அதிக அளவு வெளிவிடுவதால், நாம்  சுவாசிப்பதற்கு தூய்மையான காற்று கிடைக்கிறது. நமது வீட்டை சுற்றி இருக்கும்  கிருமிகள் நம்மை தாக்காமல் தடுத்து சருமப் பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது. தினமும்  இரவில் செம்புப் பாத்திரத்தில் துளசி இலைகளை ஊறவைத்து மறுநாள் காலையில் அந்த  நீரையும் இலையையும் சாப்பிட்டு வந்தால், நல்ல ஆரோக்கியம் கிடைக்கும்.

கற்றாழை  :  கற்றாழை செடியானது மிகவும் மருத்துவ குணம் வாய்ந்தது. இந்த சோற்றுக் கற்றாழையின் வழவழப்பான சதைப் பகுதியை சாப்பிட்டு வருவதால், நமது உடலின் சூடு குறைந்து, சரும பிரச்சனைகள் மற்றும் பெண்களின் மாதவிடாய் பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது. மேலும் அடிபட்ட இடங்களில் இந்த கற்றாழையை வைத்துக் கட்டினால் ரத்தம் அதிகமாக வெளியேறுவதை தடுக்கிறது.

கற்பூரவல்லி  :  கற்பூரவல்லி மூலிகையானது ஜலதோஷத்தை போக்கும் சிறந்த மூலிகை மருந்தாக பயன்படுகிறது. எனவே இந்த கற்பூரவல்லி மூலிகையின் சாற்றை தாய்பாலுடன் கலந்து ஜலதோஷம் உள்ள குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால், உடனடியாக நல்ல தீர்வுகள் கிடைக்கும்.

நிலவேம்பு  :  மூலிகைச் செடியைச் சேர்ந்த நிலவேம்பானது, நமது வீட்டில் இருக்கும் கிருமிகளின் தொற்றுகள் நம்மை தாக்காமல் தடுக்கும். நிலவேம்பின் இலையை கஷாயம் வைத்து குடித்து வந்தால், நமது உடம்பின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து, ஜலதொஷம், வயிற்றுப் புண் மற்றும் காய்ச்சல் வராமல் தடுத்து, சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது.

தூதுவளை  :  தூவளையின் இலையை பொடியாகச் செய்து சாப்பிடுவதை விட துவையல் செய்து சாப்பிட்டு வந்தால், ஏராளமான நன்மைகள் நமக்கு கிடைக்கும். நெஞ்சு சளி, மூச்சிரைத்தல், இருமல் உள்ளவர்கள் இந்த தூதுவளையை துவையல் அரைத்து தினமும் சாப்பிட்டு வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.

பிரண்டை :  காரத்தன்மை நிறைந்த பிரண்டைச் செடியானது, அதிக மருத்துவ குணம் நிறைந்தது. பிரண்டையின் நரம்பு பகுதியை நீக்கி, மோரில் சிறிது நேரம் ஊறவைத்து துவையல் அரைத்து தினமும் சாப்பிட்டு வந்தால், மூட்டுவலி, எலும்புத் தேய்மானம், இடுப்புவலி, வயிற்றுபுண் போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபடச் செய்கிறது. மேலும் இந்த பிரண்டை மூலிகையானது, அதிக பசியை தூண்டும் தன்மை உடையதால், சாப்பிடாத குழந்தைகளுக்கு கொடுத்து வரலாம்.