முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

4 தொகுதி இடைத்தேர்தல்: 300 பேர் விருப்பமனு அ.தி.மு.க.வினரிடம் ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் நேர்காணல் - இன்று வேட்பாளர் பட்டியல் வெளியாகிறது

ஞாயிற்றுக்கிழமை, 21 ஏப்ரல் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி உள்ளிட்ட 4 தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் விருப்ப மனு வழங்கியவர்களிடம் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடிபழனிசாமி ஆகியோர் நேற்று நேர்காணல் நடத்தினர். இதைத் தொடர்ந்து 4 தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடவுள்ள அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில் திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், சூலூர் மற்றும் அரவக்குறிச்சி ஆகிய தொகுதிகளுக்கு வரும் 19-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்றும் இதற்கான வேட்புமனுத் தாக்கல் இன்று முதல் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தொகுதிகளில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட விரும்புவோர் விருப்ப மனுத்தாக்கல் செய்யலாம் என்று கட்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடிபழனிசாமி ஆகியோர் அறிவித்திருந்தனர்.

இதைத் தொடர்ந்து நேற்று காலை அ.தி.மு.க. தலைமைக் கழக அலுவலகத்தில் அ.தி.மு.க.வினர் பெருமளவில் திரண்டனர். திருப்பரங்குன்றம் தொகுதியில் மறைந்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ. மனைவி பாக்கியலட்சுமி மற்றும் மகன் ரவி உள்ளிட்டோரும் முன்னாள் எம்.எல்.ஏ. முத்துராமலி்ங்கம், எம்.ஜி.ஆர் மன்றத் துணைசெயலாளர் எம்.எஸ். பாண்டியன், பாக்கியராஜ் ஆகியோரும் மதுரை மாநகர முன்னாள் துணை மேயர் நவநீத கிருஷ்ணன், முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா போட்டியிட விருப்பமனு தாக்கல் செய்துள்ளனர். அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து முன்னாள் எம்.எல்.ஏ. வடிவேலு, அ.தி.மு.க. செய்தி தொடர்பாளர் நிர்மலா பெரியசாமி, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் உறவினர்களான தொழில் அதிபர் என்.கே.கே.ரவி, தனலட்சுமி ஆகியோரும் மல்லிகா சுப்ரமணியம், செந்தில்நாதன் உள்ளிட்டோரும் விருப்ப மனுக்களை தாக்கல் செய்தனர். இதே போல் சூலூர் தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து எம்.ஜி.ஆர் மன்ற துணை செயலாளர் தோப்பு அசோகன், ஜெயலலிதா பேரவை மாவட்ட துணைத் தலைவர் வி.கந்தசாமி, ஒன்றிய அ.தி.மு.க. முன்னாள் துணை செயலாளர் ஒ.வி.ஆர். ராமச்சந்திரன், வக்கீல் பிரபுராம், கே.ஆர்.எஸ். சக்திவேல், எஸ்.ஜி. சுப்ரமணியம், சண்முகசுந்தரம், கருப்பசாமி ஆகியோர் தாக்கல் செய்தனர்.

ஒட்டப்பிடாரம் தொகுதியில் போட்டியிடுவதற்காக தெற்கு வீரபாண்டியபுரம் ஊராட்சிக் கழக செயலாளர் பொன்ராம், செந்தூர், அண்ணா தொழிற்சங்க நிர்வாகி கே.ஏ. மதியழகன் ஆகியோர் விருப்ப மனுத்தாக்கல் செய்தனர். கட்சியினரின் விருப்ப மனுக்களை அ.தி.மு.க. ஆட்சிமன்றக் குழு உறுப்பினர் தமிழ்மகன் உசேன், அ.தி.மு.க. தலைமைக் கழக மேலாளர் மகாலிங்கம் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். நேற்று காலை முதல் மாலை 5 மணி வரை 300-க்கும் மேற்பட்டவர்கள் தங்களது மனுக்களை தாக்கல் செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளன. இவர்களுக்கான நேர்காணல் நேற்று மாலை தொடங்கியது.

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர்கள் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இந்த நேர்காணலை நடத்தினர். சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடந்த நேர்காணலில் அ.தி.மு.க. அவைத் தலைவர் மதுசூதனன், முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி, அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் வைத்திலிங்கம், துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி ஆட்சி்மன்றக் குழு உறுப்பினர் தமிழ்மகன் உசேன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

முதற்கட்டமாக திருப்பரங்குன்றம் தொகுதியை சேர்ந்தவர்கள் இந்த நேர்காணலில் பங்கேற்றனர். இந்த நேர்காணலில் குறிப்பிட்ட தொகுதியில் கட்சியின் வெற்றி வாய்ப்பு விருப்பமனு செய்தவர்களின் வெற்றி வாய்ப்பு நிலவரம் கட்சிக்காக ஆற்றிய பணி எவ்வளவு செலவு செய்ய முடியும் என்பது போன்ற கேள்விகள் எழுப்பப்பட்டன. குறிப்பிட்ட தொகுதிகளின் மாவட்ட செயலாளர்கள், அமைச்சர்கள், இந்த நேர்காணல்களில் பங்கேற்றனர். நேர்காணல்கள் முடிந்த பின்னர் இத்தொகுதிகளுக்கான அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து