முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருமங்கலம் பகுதியில் விளைந்திடும் ருசிமிகு எட்டுநாழி கத்திரிக்காய்! புவிசார் குறியீடு வழங்கிட விவசாயிகள் கோரிக்கை!!

செவ்வாய்க்கிழமை, 3 செப்டம்பர் 2019      மதுரை
Image Unavailable

திருமங்கலம்.- மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியில் விளைந்திடும் ருசிமிகு எட்டுநாழி கத்திரிக்காய்க்கு புவிசார் குறியீடு வழங்கிட வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருமங்கலம் தாலுகா எட்டுநாழி கிராமத்தில் விளைந்திடும் ருசிமிகு கத்திரிக்காய்க்கு தமிழகம் மட்டுமின்றி இந்திய அளவிலும் நல்ல  வரவேற்பு கிடைத்து வருகிறது.குறிப்பாக எட்டுநாழி,எட்டுநாழி புதூர்,விடத்தக்குளம்,விருசங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் நிலவிடும் மண்வளம்,நீர்வளம் காரணமாக இங்கு நூற்றுக்கணக்கான ஏக்கரில்இயற்கை முறையில் விளைந்திடும் எட்டுநாழி கத்திரிக்காய்க்கு சுவை மிகுதியாக இருப்பதால் அதனை பெயர் சொல்லி கேட்டு வாங்கிடும் ரசிகர்கள் கூட்டம் அதிகமாக உள்ளது.திருமங்கலம், மதுரை,பரவை,ஒட்டன்சத்திரம் மற்றும் சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டு களுக்கும் உழவர் சந்தைகளுக்கும் எட்டுநாழி கத்திரிக்காய்களை விவசாயிகள் நேரடியாகவும் லாரிகள் மூலமாகவும் கொண்டு சென்று விற்பனை செய்கின்றனர்.எட்டுநாழி கத்திரிக்காய் கொண்டு தயாரிக்கப்படும் உணவுப் பதார்த்தங்கள் அதிகசுவையுடன் மணம் மிகுதியாக இருப்பதால் குறிப்பிட்ட சில உணவங்கள் மற்றும் விழாக்கள் நடத்திடுவோரும்,சமையல் காண்டிராக்டர்களும் எட்டுநாழி கிராமத்திற்கு நேரில் வந்து மூடை,மூடையாக கத்திரிக்காய்களை வாங்கிச் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். எட்டுநாழி மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் மட்டுமே விளைவிக்கப்படும் இந்த கத்திரிக்காயை ஒரு முறை விதைப்பு செய்தால் பத்து மாதங்கள் வரை பலன் தந்திடும் என்பதால் ஆண்டு முழுவதும் விவசாயிகளின் பொருளாதாரத்திற்கு ஏற்றம் தந்து வருகிறது.
திருமங்கலம், உசிலம்பட்டி பகுதியைச் சேர்ந்த மக்கள் ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் அதிகம் வசித்து வருகிறனர்.இவர்கள் தங்களது இல்ல வைபவங்களுக்கு எட்டுநாழி கத்திரிக்காயை வாங்கிச் சென்று உணவு தயாரிப்பதால் அம்மாநிலங்களின் மக்களும் எட்டுநாழி கத்திரிக்காயின் ருசிக்கு அடிமையாகி உள்ளனர்.தற்போது ஒருகிலோ 50 ரூபாய் முதல் சீசன் சமயங்களில் 120 ரூபாய் வரை கிடைப்பதால் எட்டுநாழி கத்திரிக்காயை சாகுபடி செய்தள்ள விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.இந்நிலையில் எட்டுநாழி கத்திரிக்காய்க்கு முறையான புவிசார் குறியீடு வழங்கினால் இந்திய அளவில் அவைகள் புகழ்பெற்று திகழ்ந்திடும்.எனவே சிறந்த ருசியுடன் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படும் இந்த எட்டுநாழி கத்திரிக்காய்க்கு புவிசார் குறியீட்டினை மத்திய அரசு வழங்கிட வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மதுரை மல்லி,திண்டுக்கல் பூட்டு,பழனி பஞ்சாமிர்தம்,சேலம் மாம்பழம்,மதுரை சுங்குடி சேலை,கோவை கோரா காட்டன் சேலை,தஞ்சை தலையாட்டி பொம்மை,பத்தமடை பாய் இவற்றின் வரிசையில் எட்டுநாழி கத்திரிக்காயும் இணைந்திட வேண்டும் என்பது விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.புவி சார் சட்டத்தின் கீழ் இது பதிவு செய்யப்பட்டு விட்டால் அப்பெயரை வேறு யாரும் பயன்படுத்திட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து