முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலக தடகள போட்டியில் இறுதி சுற்றுக்கு முன்னேறுவேன் - இந்திய வீராங்கனை டுட்டீ சந்த் நம்பிக்கை

திங்கட்கிழமை, 23 செப்டம்பர் 2019      விளையாட்டு
Image Unavailable

புதுடெல்லி : உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இறுதி சுற்றுக்கு முன்னேறுவேன்’ என்று இந்திய ஓட்டப்பந்தய வீராங்கனை டுட்டீ சந்த் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி கத்தார் நாட்டில் உள்ள தோகாவில் வருகிற 27-ந் தேதி தொடங்குகிறது. இந்த போட்டிக்கான இந்திய அணியில் 100 மீட்டர் ஓட்டப்பந்தய வீராங்கனை டுட்டீ சந்த் இடம் பிடித்துள்ளார். 11.26 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து தேசிய சாதனை படைத்துள்ள டுட்டீ சந்த் தகுதி இலக்கான 11.24 வினாடியை எட்டாவிட்டாலும், போதிய போட்டியாளர்கள் இல்லாத காரணத்தால் இந்த போட்டிக்கு தேர்வாகி இருக்கிறார்.

இது குறித்து டுட்டீ சந்த் அளித்த  பேட்டியில் கூறியதாவது:-

உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் எனது சிறந்த நேரத்துக்குள் ஓட முடியும் என்று நம்புகிறேன். அது தான் என்னுடைய இலக்காகும். 2017-ம் ஆண்டில் லண்டனில் நடந்த உலக தடகள போட்டியில் நான் அரைஇறுதிக்கு தகுதி பெறவில்லை. ஆனால் இந்த முறை இறுதிப்போட்டிக்கு முன்னேற முடியும் என்று நம்புகிறேன். இறுதிப்போட்டிக்கு தகுதி பெறுவது என்பது எளிதான காரியம் அல்ல. ஆனால் அதனை செய்து விட்டால் நான் உண்மையிலேயே மகிழ்ச்சி அடைவேன்.

தற்போது நான் இரவு 7 மணி முதல் 8 மணி வரை பயிற்சி எடுத்து வருகிறேன். இந்த நேரம் தோகாவில் எனது பந்தயம் நடைபெறும் நேரத்தில் நிலவக்கூடிய சீதோஷ்ண நிலைக்கு உகந்ததாகும். பயிற்சி நல்லபடியாக சென்று கொண்டு இருக்கிறது. தோகாவில் என்ன நடக்கிறது என்பதை பொறுத்து இருந்து பார்ப்போம். இந்த சீசனின் முடிவு காலம் இதுவாகும். இந்த வருடத்தில் நான் நிறைய போட்டிகளில் ஓடி இருக்கிறேன். இதனால் வேகமாக ஓடுவதற்கு தீவிரம் காட்டுவேன்.

ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி இலக்காக நிர்ணயிக்கப்பட்டு இருக்கும் 11.15 வினாடிக்குள் பந்தய தூரத்தை கடப்பது என்பது கடினமானதாகும். இந்த நேரம் எனக்கு மட்டுமின்றி மற்ற வீராங்கனைகளுக்கும் கடினமாகவே இருக்கும். இந்த சீசனில் 15 போட்டிகளில் ஓடி விட்டேன். இதற்கு மேல் போட்டியில் ஓட விரும்பவில்லை. அடுத்த ஆண்டு நடைபெறும் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற முயற்சிப்பேன். உலக போட்டிக்கு என்னுடன் எனது தனிப்பட்ட பயிற்சியாளரை அழைத்து செல்கிறேன். அவரது பயணம் மற்றும் தங்குமிடம் உள்ளிட்ட எல்லா செலவுகளையும் நான் ஏற்றுக்கொள்வேன். அவர் போட்டியை நேரில் பார்க்க ‘பாஸ்’ வாங்கி தருமாறு இந்திய தடகள சம்மேளனத்திடம் கேட்டு இருக்கிறேன். அதனை செய்து தருவதாக தெரிவித்துள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து