முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரம்மோற்சவ விழா: திருப்பதியில் இன்று கருட சேவை

வியாழக்கிழமை, 3 அக்டோபர் 2019      ஆன்மிகம்
Image Unavailable

திருமலை : திருப்பதி ஏழுமலையான் கோவிலின் பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வான கருட சேவை இன்று  வெள்ளிக்கிழமை இரவு நடக்கிறது. இதற்காக பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.  

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. 3-வது நாளான நேற்று முன்தினம் இரவு முத்துப்பந்தல் வாகனத்தில் ஏழுமலையான் மாட வீதிகளில் உலா வந்தார்.  நவரத்தினங்களில் ஒன்று முத்து. முத்து வெண்மையைக் குறிக்கிறது. முத்துக்கள் மாலையாகத் தொங்க விடப்பட்டும், பந்தலா அலங்கரிக்கப்பட்டும் இருந்தன. வெண் முத்துக்களால் ஆன முத்துப்பந்தல் வாகனத்தில் ஏழுமலையான் ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் எழுந்தருளினார்.

தன்னை சரணடையும் பக்தர்களின் தகுதிக்கேற்ப நற்பயன்களை அருளும் வேடங்கடவன். இன்பத்தை வாரி வழங்கும் வள்ளல். தனது அடிதொழுதோரை மோட்ச உலகுக்கு அன்போடு அழைத்துச் செல்லும் கருணாமூர்த்தி. வலது கையில் சுழலும் சக்கரத்தைக் கொண்டு, அதன் மூலம் தனது பக்தர்களை பகைக்கும் பகைவோர் யாராக இருப்பின் அவர்களுக்கு எமனாக விளங்குபவர்.

நீலமேனியால் நீலமேகமாகத் திகழ்பவர், தூய பக்தி என்னும் கடலில் மூழ்கி தன்னை வணங்கும் பக்தர்களுக்கு அருள் புரியும் முத்துக்குவியல். 6 மலைகளை கடந்து 7-வது மலை உச்சியில் எழுந்தருளியுள்ள ஏழுமலையான் உபய நாச்சியார்களுடன் முத்துப்பந்தல் வாகனத்தில் எழுந்தருளி புல்லாங்குழலில் வேணுகானம் இசைத்தப்படி வேணு கோபாலனாக நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

பிரம்மோற்சவ விழாவின் 4-வது நாளான நேற்று  காலை கல்பவிருட்ச வாகனத்தில் ஏழுமலையான் பவனி வந்தார். மாடவீதிகளில் குவிந்திருந்த பக்தர்கள் ஆரத்தி எடுத்து வழிபட்டனர். 

கேட்கும் வரங்களை வழங்கும் மரம் கற்பக விருட்சம். இந்த வாகனத்தில் எழுந்தருளும் பெருமாளை தரிசனம் செய்தால் கேட்கும் வரங்களை மட்டுமின்றி கேட்காத வரங்களையும் ஏழுமலையான் வழங்குவார் என்பது ஐதீகம்.  

பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வான கருட சேவை இன்று  வெள்ளிக்கிழமை இரவு நடக்கிறது. இதைக்கான 5 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பக்தர்கள் வசதிக்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

8 லட்சம் லட்டுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பக்தர்களின் கூட்ட நெரிசலை தவிர்க்க மாடவீதி கேலரிகளில் தடுப்புகள் கொண்டு வரிசை அமைக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து