ரூ.1000 பொங்கல் பரிசு: அடுத்த வாரம் ரேசன் கடைகளில் கிடைக்க ஏற்பாடு: அதிகாரிகள் தகவல்

ஞாயிற்றுக்கிழமை, 15 டிசம்பர் 2019      தமிழகம்
Pongal gift-cm 2019 11 29

ரூ. ஆயிரம் பொங்கல் பரிசு ரேஷன் கடைகளில் அடுத்த வாரம் கிடைக்கும்படி ஏற்பாடு செய்துள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டை தாரர்களுக்கு பச்சரிசி, சர்க்கரை, கரும்பு துண்டு மற்றும் ரொக்கம் 1000 ரூபாய் ஆகியவற்றை இந்த ஆண்டு முன்கூட்டியே வழங்க அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி முதல் வாரத்தில் பொங்கல் பரிசு பொருட்கள் பொதுமக்களுக்கு வழங்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டு உள்ளாட்சி தேர்தல் இந்த மாதம் 27, 30-ம் தேதிகளில் நடைபெற உள்ளதால் பொங்கல் தொகுப்பு பரிசு திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த மாதம் 29-ம் தேதி தலைமை செயலகத்தில் தொடங்கி வைத்தார்.

 இதைத் தொடர்ந்து  தமிழ்நாடு முழுவதும் 2 கோடி ரேஷன் கார்டு தாரர்களுக்கு தேவையான பொங்கல் பரிசு தொகுப்புகளை கொள்முதல் செய்ய அரசு தேவையான ஏற்பாடுகளை செய்து வந்தது. அதன்படி ரேஷன் கடைகளுக்கு தேவையான பச்சரிசி, சர்க்கரை, கரும்பு, முந்திரி, திராட்சை, ஏலக்காய் ஆகியவை அனைத்தும் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

இதில் 20 கிராம் முந்திரி, 20 கிராம் திராட்சை, 5 கிராம் ஏலக்காய் ஆகியவைகளை பாக்கெட் போடும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் அனைத்தும் வருகிற செவ்வாய்க் கிழமைக்குள் முடிந்து விடும். அதே போல் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரொக்கப்பணம் ரூ.1000-த்தை இரண்டு 500 ரூபாய் தாள்கள் வீதம் வழங்குவதற்கு ஏதுவாக மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளில் 500 ரூபாய் நோட்டு கட்டுகள் தயார் நிலையில் எடுத்து வைக்கப்பட்டுள்ளது. வருகிற புதன்கிழமையில் இருந்து ஒவ்வொரு ரேஷன் கடைகளுக்கும் இவை அனுப்பி வைக்கப்பட உள்ளது. அனேகமாக பொங்கல் தொகுப்பு பரிசுகளை வருகிற 20-ம் தேதி வழங்க அரசு உத்தரவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன்பே அனைத்து கார்டுகளுக்கும் கொடுத்து முடித்து விட ஏற்பாடு நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். குடும்ப அட்டைதாரர்கள் நெரிசல் இன்றி முறையாக பொங்கல் பரிசு தொகுப்பை பெற 500 குடும்ப அட்டைகளுக்கு மேல் உள்ள நியாய விலைக்கடைகளில் சுழற்சி முறையில், தெருக்கள் அல்லது பகுதி வாரியாக பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. எந்தெந்த தெருக்களுக்கு எப்போது பணம், பொருள் வழங்கப்படும் என்ற பட்டியலை ரேஷன் கடைகளில் எழுதி ஒட்டுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து