ஆஸி. ஓபன் டென்னிஸ்: பிரதான சுற்றில் விளையாட குணேஸ்வரனுக்கு வாய்ப்பு

ஞாயிற்றுக்கிழமை, 19 ஜனவரி 2020      விளையாட்டு
Guneswaran 2020 01 19

மெல்போர்ன் : ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின், பிரதான சுற்றில் விளையாடும் வாய்ப்பை குணேஸ்வரன் பெற்றுள்ளார்.

ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி இன்று (திங்கட்கிழமை) மெல்போர்னில் தொடங்குகிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் தகுதி சுற்றில் முதல் 2 ஆட்டங்களில் வெற்றி பெற்ற இந்திய வீரர் பிரஜ்னேஷ் குணேஸ்வரன் கடைசி ஆட்டத்தில் 6-7(2-7), 2-6 என்ற நேர்செட்டில் லாத்வியா வீரர் எர்னெஸ்ட்ஸ் குல்பிஸ்சிடம் தோல்வி அடைந்து வெளியேறினார். இருப்பினும் பிரஜ்னேஷ் குணேஸ்வரனுக்கு பிரதான சுற்றில் விளையாட வாய்ப்பு கிடைத்துள்ளது. போட்டியில் நேரடியாக வாய்ப்பு பெற்ற வீரர் யாராவது ஒருவர் விலக நேரிட்டால், தகுதி சுற்றில் சிறப்பாக செயல்பட்டு தோல்வி அடைந்த வீரருக்கு வாய்ப்பு அளிக்கப்படும். அந்த வகையில் தகுதி சுற்றில் தோல்வி கண்டாலும், சிறப்பாக செயல்பட்டதன் அடிப்படையில் அவருக்கு பிரதான சுற்றில் விளையாடும் அதிர்ஷ்டம் அடித்து இருக்கிறது. பிரஜ்னேஷ் குணேஸ்வரன் கிராண்ட்ஸ்லாம் போட்டியில் தொடர்ச்சியாக 5-வது முறையாக பிரதான சுற்றில் விளையாடும் வாய்ப்பை பெற்று இருக்கிறார். ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்று ஆட்டத்தில் சென்னையை சேர்ந்த 30 வயதான பிரஜ்னேஷ் குணேஸ்வரன், தரவரிசையில் 144-வது இடத்தில் இருக்கும் ஜப்பான் வீரர் தட்சுமாவை சந்திக்கிறார். தரவரிசையில் 122-வது இடத்தில் உள்ள அவர் தனது முதல் தடையை கடந்தால் 2-வது சுற்றில் உலக தரவரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் செர்பியா வீரர் நோவக் ஜோகோவிச்சை சந்திக்க நேரிடலாம். ஆஸ்திரேலிய ஓபன் போட்டியில் 2-வது முறையாக பிரதான சுற்றில் விளையாட இருக்கும் பிரஜ்னேஷ் குணேஸ்வரன் அளித்த பேட்டியில், தோல்வி அடைந்தாலும் பிரதான சுற்றில் விளையாட வாய்ப்பு கிடைத்து இருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. தற்போது நான் முதல் சுற்று ஆட்டம் பற்றி மட்டுமே சிந்திக்கிறேன். தட்சுமா மிகச்சிறந்த வீரர். அவரை வீழ்த்த வேண்டும் என்றால் சிறப்பாக செயல்பட வேண்டியது அவசியமானதாகும் என்று தெரிவித்தார்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து