முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனா பாதிப்பு அதிகரிப்பு: உ.பி. பீகார் உள்ளிட்ட 5 மாநில அதிகாரிகளுடன் மத்திய அரசு ஆலோசனை

புதன்கிழமை, 27 மே 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : கொரோனா பாதிப்பு திடீரென அதிகரித்துள்ள 5 மாநிலங்களின் அதிகாரிகளுடன் மத்திய சுகாதார செயலாளர் ஆலோசனை நடத்தினார்.

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வருகை மற்றும் ஊரடங்கு தளர்வு காரணமாக, உத்தரபிரதேசம், பீகார், ஜார்கண்ட், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம் ஆகிய 5 மாநிலங்களில் கடந்த 3 வாரங்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. எனவே, அந்த 5 மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள், சுகாதார செயலாளர்கள், தேசிய சுகாதார திட்ட இயக்குனர்கள் ஆகியோருடன் மத்திய சுகாதார செயலாளர் பிரீத்தி சூடன் உயர்மட்ட ஆலோசனை நடத்தினார்.

காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடந்தது. இதில், ஒவ்வொரு மாநிலத்திலும் ஏற்பட்ட பாதிப்பு, இறப்பு, பரிசோதனை விவரம் உள்ளிட்ட தகவல்கள் எடுத்துரைக்கப்பட்டன. ஆரோக்ய சேது’ செயலியில் இருந்து கிடைத்துள்ள தரவுகளின் பயன்கள் குறித்து 5 மாநிலங்களுக்கும் சுட்டிக்காட்டப்பட்டது.

சிறப்பு கண்காணிப்பு குழுக்கள் மூலம் வீடு, வீடாக ஆய்வு செய்து நோயை கட்டுப்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் ஒவ்வொன்றிலும் நிலவரத்தை ஆய்வு செய்து, தவறுகளை சரிசெய்யுமாறும், மைக்ரோ திட்டங்களை அமல்படுத்துமாறும் 5 மாநிலங்களுக்கும் சுகாதார செயலாளர் வலியுறுத்தினார். தனிமைப்படுத்தும் மையங்கள், தீவிர சிகிச்சை பிரிவுடன் கூடிய ஆஸ்பத்திரிகள், வெண்டிலேட்டர்கள், ஆக்சிஜன் படுக்கைகள் போன்ற சுகாதார கட்டமைப்புகளை ஆய்வு செய்யுமாறும், அடுத்த 2 மாதங்களுக்கான தேவைக்கு ஏற்ப அவற்றை வலுப்படுத்துமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

தனிமை மையங்களில் நடமாடும் மருத்துவ குழுக்களை நிறுத்துமாறு வலியுறுத்தினார். நோய் எளிதில் தாக்க வாய்ப்புள்ள கர்ப்பிணிகள், 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், முதியோர், இதர நோய் இருப்பவர்கள் ஆகியோர் மீது சிறப்பு கவனம் செலுத்துமாறு மத்திய சுகாதார செயலாளர் அறிவுறுத்தினார்.

5 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களின் ஊட்டச்சத்து அளவை பரிசோதித்து, அவர்களை ஊட்டச்சத்து மறுவாழ்வு மையங்களுக்கு அனுப்ப வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். கொரோனா நோயாளிகளுடன் இதர நோயாளிகளின் சிகிச்சையிலும் கவனம் செலுத்த வேண்டும் என்றும் மத்திய சுகாதார செயலாளர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து