முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஹாங்காங் மக்களுக்கு அடைக்கலம் வழங்க ஆஸ்திரேலியா பரிசீலனை : பிரதமர் ஸ்காட் மாரிசன் தகவல்

சனிக்கிழமை, 4 ஜூலை 2020      உலகம்
Image Unavailable

Source: provided

கான்பெர்ரா : சீனாவின் புதிய சட்டத்தால் பாதிக்கப்படும் ஹாங்காங் மக்களுக்கு அடைக்கலம் வழங்குவது குறித்து பரிசீலித்து வருவதாக ஆஸ்திரேலியா பிரதமர் ஸ்காட் மாரிசன் தெரிவித்துள்ளார்.

உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி, சீனா ஹாங்காங்குக்கு எதிரான தேசிய பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்தியுள்ளது. இந்த சட்டத்தின் கீழ், பிரிவினைக்கு குரல் கொடுப்போர், சீனாவுக்கு எதிராக பிரசாரம் செய்வோர் உள்ளிட்டோரை தேசத் துரோக குற்றச்சாட்டில் கைது செய்யலாம். அத்துடன், சீனாவுக்கு நாடு கடத்தவும் சட்டத்தில் இடமுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த சட்டத்தை எதிர்த்து, ஹாங்காங்கில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. முதன் முறையாக தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ், 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சீனாவில் இந்த சர்வாதிகார நடவடிக்கைக்கு உலக தலைவர்கள் தொடர்ந்து கண்டனம் தெரிவித்த வண்ணம் உள்ளனர்.  

இதனிடையே சீனாவின் இந்த புதிய சட்டத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஹாங்காங் மக்களுக்கு தஞ்சமளிப்பது உள்ளிட்ட உதவிகளை செய்ய பல நாடுகள் முன்வந்துள்ளன. 

ஹாங்காங்கில் இருந்து வரும் அகதிகளுக்கு என தனியாக அகதிகள் முகாமை தாய்லாந்து அமைத்துள்ளது. இதேபோல் இங்கிலாந்தில் 5 ஆண்டுகள் மட்டுமே செல்லுபடியாகும் விசாவுடன் இருக்கும் 30 லட்சத்துக்கும் மேற்பட்ட ஹாங்காங் மக்களுக்கான குடியுரிமையை நீட்டிப்பதாக அந்நாட்டின் பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார். 

அந்த வரிசையில் ஹாங்காங் மக்களுக்கு அடைக்கலம் தந்து குடியுரிமை அளிப்பது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதாக, ஆஸ்திரேலிய பிரதமர், ஸ்காட் மாரிசன் தெரிவித்துள்ளார். தலைநகர் கான்பெர்ராவில் நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது இது குறித்து ஸ்காட் மாரிசன் கூறியதாவது:-

இங்கிலாந்தை போலவே நாங்களும், சீனாவின் தேசிய பாதுகாப்பு சட்டத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஹாங்காங் மக்களுக்கு அடைக்கலம் தருவது குறித்து பரிசீலித்து வருகிறோம். விரைவில் இதுதொடர்பாக அமைச்சரவையை கூட்டி முடிவு எடுக்கப்படும். இறுதி முடிவு எடுத்த பிறகு முறையான அறிவிப்பை நான் வெளியிடுவேன். இவ்வாறு அவர் கூறினார்.

இதனிடையே ஹாங்காங் மக்களுக்கு அடைக்கலம் தருவது குறித்து ஆஸ்திரேலியா பரிசீலித்து வருவதற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஆஸ்திரேலிய அரசின் இந்த நடவடிக்கை சீனாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையிலான உறவை மேலும் சிக்கலாக்கும் என சீன வெளியுறவு அமைச்சகத்தின் துணை இயக்குனர் ஷாவோ லிஜியன் கூறியுள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து