எஸ்.பி. பாலசுப்பிரமணியம் மறைவு: துணை முதல்வர் ஓ.பி.எஸ். இரங்கல்

வெள்ளிக்கிழமை, 25 செப்டம்பர் 2020      தமிழகம்
ops 2020 09 25

Source: provided

சென்னை : பிரபல பாடகர் எஸ்.பி.  பாலசுப்ரமணியம் மறைவிற்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இரங்கல் தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, 

தேமதுரக் குரல் கொண்டு இவ்வையகத்தை மகிழ்வித்த பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம், நம்மை விட்டு மறைந்தார் என்ற செய்தி அறிந்து மிகவும் துயர் அடைந்தேன். 

வைரஸ் கொடுநோய்த் தொற்றால் பாதிப்புக்கு உள்ளாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த எஸ்.பி. பாலசுப்ரமணியம், அபாய கட்டங்களைத் தாண்டி முன்னேற்றம் பெற்று வருகிறார் என்ற தகவலை கேட்டு, அவர் நலம் பெற்று மீண்டு வருவார் என நம்பிக்கையுடன் இருந்த நேரத்தில் அவர் காலமானார் என்ற செய்தியைக் கேட்டு உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் பரிதவிக்கின்றனர். 

எஸ்.பி. பாலசுப்பிரமணியம் திரையிசை உலகில் ஒரு சகாப்தமாக விளங்கினார். தனது இன்னிசைத் தேன் குரலால் லட்சக்கணக்கான இசை ரசிகர்களை மட்டுமல்ல அவரது பாடலைக் கேட்கும் அனைவரையும் ஈர்த்து தன் வசமாக்கிக் கொள்ளும் ஆற்றல் பெற்றவராகத் திகழ்ந்தார்.

பாடலுக்கு என்றே பிறந்தவர்  எஸ்.பி.பி. என்று சொல்லுமளவிற்கு, 40,000-க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி, அதிக எண்ணிக்கையிலான பாடலை பாடியதற்காக கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறும் வகையில் சாதனை படைத்தவர் ஆவார். 

தமிழ் மொழியில் மட்டுமன்றி மொத்தம் நான்கு மொழிகளில் பாடல்கள் பாடி தேசிய விருது பெற்ற ஒரே பாடகர் என்ற பெருமைக்கு உரியவர் எஸ்.பி. பாலசுப்ரமணியம். ஒரே நாளில் 15-க்கும் மேற்பட்ட பாடல்களை பல்வேறு மொழிகளில் பாடி ஒளிப்பதிவு செய்து சாதனை சின்னமாக திகழ்ந்தார். 

பத்மஸ்ரீ, பத்மபூஷன் உட்பட பல்வேறு புகழ்மிகு விருதுகளை பெற்ற எஸ்.பி பாலசுப்பிரமணியம், பாடல் பாடுவது மட்டுமன்றி நடிப்பிலும் தனி முத்திரை பதித்தவர். 72-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தவர். எஸ்.பி பாலசுப்ரமணியம் 50 ஆண்டுகளுக்கு மேலாக திரையிசையுலகில் கோலோச்சியவர்.

எம்.ஜி.ஆர், அம்மா ஆகியோரது அன்பை பெற்று, அவர்கள் நடித்த படங்களில் சிறப்பான பாடல்களை பாடியவர். தனது அற்புத குரல் வளத்தால் சிறியோர் முதல் பெரியோர் வரை அனைவரையும் ஈர்த்து இந்திய அளவில் எண்ணிலடங்கா இசை ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டவர்.  அன்னாரது மறைவு நமக்கெல்லாம் சொல்லொணாத் துயரத்தை அளித்திருக்கிறது.

எஸ்.பி பாலசுப்பிரமணியம்  மறைந்தாலும், கானக்குரல் கொண்டு அவர் பாடிய பாடல்கள் என்றுமே மறையாது ஒலித்துக்கொண்டே இருக்கும். அவரது பெருமையை நமக்கு நினைவுபடுத்திக் கொண்டே இருக்கும். 

சீரும் சிறப்பும் பேரும் புகழும் கொண்டு திரையிசை உலகில் தனக்கென ஒரு தனி இடம் கொண்டிருந்த எஸ்.பி. பாலசுப்ரமணியம் மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

அவரை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறி இத்துயரைத் தாங்கிக் கொள்ளும் மனவலிமை பெற இறைவனை வேண்டுகிறேன்.   

எஸ்.பி பாலசுப்ரமணியத்தின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற இறைவனை இறைஞ்சி பிரார்த்திக்கின்றேன். இவ்வாறு அந்த அறிக்கையில் துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து