தனக்கு சிலை செய்ய முன்பே ஆர்டர் கொடுத்த எஸ்.பி.பி.

ஞாயிற்றுக்கிழமை, 27 செப்டம்பர் 2020      சினிமா
SBB 2020 09 27

Source: provided

மதுரை : தனக்கு சிலை செய்வதற்கு ஜூன் மாதமே ஆர்டர் கொடுத்திருக்கிறார் மறைந்த பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம். இது அவரது ரசிகர்கள் மத்தியில் வியப்பை ஏற்படுத்தி உள்ளது. 

பாலு என திரையுலகத்தினராலும், பாடும் நிலா என அவரது ரசிகர்களாலும் போற்றப்பட்ட பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் கடந்த 25-ம் தேதி காலமானார்.

மறுநாள் அவரது தாமரைபாக்கம் பண்ணை இல்லத்தில் அவரது உடல் இறுதி சடங்கிற்கு பிறகு 72 குண்டுகள் முழங்க நல்லடக்கம் செய்யப்பட்டது. நேற்று அவர் மறைந்த மூன்றாவது நாளாகும். அதற்கான சடங்குகளும் நடைபெற்றது.

அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவரது மகன் எஸ்.பி.பி. சரண், தனது தந்தைக்கு நினைவாலயம் கட்ட விரும்புவதாக தெரிவித்தார். விரைவில் அது பற்றி முடிவெடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

பொதுமக்கள் தன் தந்தைக்கு அஞ்சலி செலுத்த விரும்புகிறார்கள். எனவே அரசிடம் அனுமதி பெற்று பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்கு ஏற்பாடு செய்யப்படும் என்றும் அவர் கூறினார். 

முன்பே ஆர்டர் கொடுத்த எஸ்.பி.பி.

இந்த நிலையில் தனக்கு சிலை செய்ய கடந்த ஜூன் மாதமே ஆந்திர மாநிலத்தை சேர்ந்த சிற்பி ஒருவரிடம் ஆர்டர் கொடுத்திருக்கிறார் மறைந்த பாடகர் எஸ்.பி.பி. கொரோனா காலமாக இருந்ததால் தான் நேரில் செல்ல முடியாத காரணத்தால் தனது புகைப்படத்தை அந்த சிற்பிக்கு அனுப்பி வைத்திருக்கிறார் எஸ்.பி.பி.

அந்த சிலை அமைக்கும் பணி கிட்டத்தட்ட முடிந்து விட்டது. ஆனால் அதற்குள்ளாகவே எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தை இயற்கை அரவணைத்து கொண்டு விட்டது. தனக்கு சிலை அமைக்க எஸ்.பி.பி. முன்பே ஆர்டர் கொடுத்தது பற்றி கேள்விப்பட்ட அவரது ரசிகர்கள் வியப்பில் மூழ்கியுள்ளனர். தன் மரணத்தை முன்கூட்டியே அறிந்து விட்டாரோ என்று ரசிகர்கள் தற்போது பரவலாக பேச தொடங்கி விட்டார்கள். 

இந்நிலையில் மறைந்த பாடகருக்கு நினைவு மண்டபம் அமைப்பது பற்றி முதலமைச்சர் முடிவெடுப்பார் என்று கோவில்பட்டியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.

மேலும் எஸ்.பி.பி.-க்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும். தாதாசாஹிப் பால்கே விருது வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை சில நடிகர்கள் முன்வைத்திருக்கிறார்கள்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து