கர்நாடக சட்டசபை இடைத்தேர்தல்: இன்று மனுத்தாக்கல் தொடக்கம்- காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிப்பு

வியாழக்கிழமை, 8 அக்டோபர் 2020      அரசியல்
Ravi-Jayachandra-2020 10 08

கர்நாடக சட்டசபை இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். ஆர்.ஆர்.நகரில் குசுமா ரவியும், சிராவில் டி.பி.ஜெயச்சந்திராவும் போட்டியிடுகிறார்கள். 

கர்நாடக சட்டசபையில் ராஜராஜேஸ்வரிநகர் (ஆர்.ஆர்.நகர்), சிரா ஆகிய தொகுதிகள் காலியாக உள்ளன. சிரா தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த சத்யநாராயணா கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மரணம் அடைந்தார். ராஜராஜேஸ்வரிநகர் தொகுதி எம்.எல்.ஏ. பதவியை முனிரத்னா ராஜினாமா செய்தார். இதனால் இந்த 2 தொகுதிகள் சட்டசபையில் காலியாக இருக்கின்றன. இந்த 2 தொகுதிகளுக்கு வருகிற நவம்பர் 3-ம்  தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று(வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. 

அரசியல் கட்சிகள் இன்னும் தங்களின் வேட்பாளர்களை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. சிரா தொகுதியில் ஜனதாதளம் (எஸ்) கட்சி சார்பில் மறைந்த எம்.எல்.ஏ. சத்யநாராயணாவின் மனைவி அம்மஜம்மா நிறுத்தப்பட உள்ளதாக அக்கட்சி கூறியுள்ளது. இந்த நிலையில் கர்நாடக காங்கிரஸ் கட்சி, 2 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவித்துள்ளது. அதன்படி ராஜராஜேஸ்வரிநகர் தொகுதியில், குசுமா ரவியும், சிராவில் முன்னாள் அமைச்சர் டி.பி.ஜெயச்சந்திராவும் போட்டியிடுகிறார்கள். ஜெயச்சந்திரா, சித்தராமையா ஆட்சியில் சட்டம் மற்றும் சட்டசபை விவகாரத்துறை அமைச்சராக பணியாற்றினார்.

குசுமா ரவி, 5 ஆண்டுகளுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்ட ஐ.ஏ.எஸ். அதிகாரி டி.கே.ரவியின் மனைவி ஆவார். அவர் தனது கணவர் இறந்த பிறகு அமெரிக்காவிற்கு சென்று 2 ஆண்டுகள் மேல் படிப்பை முடித்து விட்டு திரும்பியுள்ளார். அவரது தந்தை ஹனுமந்தராயப்பா, காங்கிரசில் இருந்து ஜனதா தளம்(எஸ்) கட்சிக்கு சென்றார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் தனது மகளுடன் காங்கிரசில் சேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து