மாசுபாடு பிரச்சினையை ஒரேநாளில் தீர்க்க முடியாது: பிரகாஷ் ஜவடேகர்

திங்கட்கிழமை, 19 அக்டோபர் 2020      இந்தியா
Prakash Javadekar 2020 10 19

Source: provided

புதுடெல்லி : மாசுபாடு பிரச்சினையை ஒரேநாளில் தீர்க்க முடியாது என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

மத்திய சுற்றுச்சூழல் மந்திரி பிரகாஷ் ஜவடேகர் பேஸ்புக் நேரலை மூலம் மக்களிடம் உரையாடினார். அப்போது சுற்றுச்சூழல் மாசுபாடு குறித்து பல்வேறு கருத்துகளை வெளியிட்டார்.

அவர் கூறுகையில், ‘வாகன நெரிசல், தொழிற்சாலைகள், கழிவுகள், தூசுகள், குப்பைகள் உள்ளிட்டவையே காற்று மாசுபாட்டுக்கு முக்கிய காரணிகள் ஆகும். வட இந்தியாவில் காற்று மாசுபாட்டுக்கு தூசுகள் முக்கிய பங்காற்றுகின்றன. வண்டல் மண் அதிகமான தூசுகளை உருவாக்குகிறது’ என்று தெரிவித்தார்.

மாசுபாடு பிரச்சினையை ஒரே நாளில் தீர்க்க முடியாது என்று கூறிய ஜவடேகர், மாசு காரணிகளை தடுப்பதற்கு தொடர் முயற்சிகள் அவசியம் என்றும் தெரிவித்தார். வாகன மாசுகளை கட்டுப்படுத்துவதற்காக மத்திய அரசு பி.எஸ்.6 ரக வாகனங்களை அறிமுகப்படுத்தி இருப்பதாக கூறிய அவர், எலக்ட்ரானிக் வாகனங்களுக்கு மக்கள் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

டெல்லியில் காற்று மாசுபாட்டை தடுக்க வேண்டிய பொறுப்பு நகராட்சிகளிடம் மட்டுமின்றி மாநில அரசுக்கும் இருப்பதாகவும், அங்கு மாசுபாட்டை குறைக்க குறைந்த, நடுத்தர மற்றும் நீண்ட கால திட்டங்களை அரசு தயாரித்து இருப்பதாகவும் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து