சாலை விபத்து மற்றும் நீரில் மூழ்கி உயிரிழந்த 24 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ. ஒரு லட்சம் : முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

சனிக்கிழமை, 24 அக்டோபர் 2020      தமிழகம்
Edappadi 2020 10 24-1

Source: provided

சென்னை : சாலை விபத்து மற்றும் நீரில் மூழ்கி உயிரிழந்த 24 நபர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. ஒரு லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். 

இது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, 

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை வட்டம், ஆவூர் கிராமத்தைச் சேர்ந்த ஜீவன்ராஜ் என்பவரின் மகன்கள் செல்வன் செக்சன், செல்வன் ஜான்சன் மற்றும் சவரி என்பவரின் மகன் செல்வன் சந்தோஷ் ஆகிய மூன்று சிறுவர்கள் சின்ன குளத்தில் குளிக்க சென்ற போது, எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தனர்  என்ற செய்தியையும், கள்ளக்குறிச்சி மாவட்டம் மற்றும் வட்டம், தச்சூர் கிராமத்தைச் சேர்ந்த ஆனையப்பன் மற்றும் அவரது மனைவி அம்பிகா ஆகிய இருவரும் சேலம் - கள்ளக்குறிச்சி சாலையில் ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்தனர் என்ற செய்தியையும், 

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வட்டம், மாக்கினங்கோம்பை கிராமத்தைச் சேர்ந்த சந்திரசேகரன் என்பவரின் மகன் தமிழரசன் சாலை விபத்தில் உயிரிழந்தார் என்ற செய்தியையும்,  திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை வட்டம், கண்ணநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த சின்னத்தாய் என்பவரின் மகன்  பூசைதுரை எதிர்பாராத விதமாக கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தார் என்ற செய்தியையும், 

திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி வட்டம், மல்லகுண்டா கிராமத்தைச் சேர்ந்த சண்முகம் என்பவரின் மகள் சிறுமி ரேகா மற்றும் திருப்பதி என்பவரின் மகள் சிறுமி ஜனனி ஆகிய இருவரும் கரடிகுட்டை ஏரியில் தவறி விழுந்து உயிரிழந்தனர் என்ற செய்தியையும்,  கன்னியாகுமரி மாவட்டம், கிள்ளியூர் வட்டம், பைங்குளம் கிராமத்தைச் சேர்ந்த ஒருமாவுநின்றவிளையைச் சேர்ந்த சுவாமிநாதன் என்பவரின் மகன் ஜான் கென்னடி மேலகுளத்தில் நிலை தடுமாறி விழுந்து, நீரில் மூழ்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும்,  விளவங்கோடு வட்டம், குழித்துறை கிராமத்தைச் சேர்ந்த இளங்கோ நல்லூர்குளத்தில் குளித்துக் கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும்,  கிள்ளியூர் வட்டம், முள்ளங்கினாவிளை கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ்குமார் என்பவர்  தென்னை மரம் வெட்டும் போது, அவர் மீது மரம் விழுந்து உயிரிழந்தார் என்ற செய்தியையும்,  கிள்ளியூர் வட்டம், பைங்குளம் கிராமத்தைச் சேர்ந்த யானோஸ் என்பவரின் மனைவி மார்த்தாள் என்பவர் சாலை விபத்தில் உயிரிழந்தார் என்ற செய்தியையும், சேலம் மாவட்டம், சேலம் தெற்கு வட்டம், ஆட்டையாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த செல்வம் என்பவரின் மகன் நவீன்குமார்  சாலை விபத்தில் உயிரிழந்தார் என்ற செய்தியையும், 

திண்டுக்கல் மாவட்டம், திண்டுக்கல் கிழக்கு வட்டம், தோட்டனூத்து கிராமத்தைச் சேர்ந்த பாஸ்கர் அருளானந்தம் என்பவரின் மகன் செல்வன் சதீஸ் அருளானந்தம், ஆரோக்கிய சகாயராஜ் என்பவரின் மகன் செல்வன் ஷஜூத் புருனோ மற்றும்  அன்பழகன் என்பவரின் மகன் செல்வன் ராகுல் கிருஷ்ணன் ஆகிய மூன்று பேரும் கொண்டாபிள்ளை என்ற குளத்தில் குளிக்கும் போது நீரில் மூழ்கி உயிரிழந்தனர்  என்ற செய்தியையும்,   வேலூர் மாவட்டம், பேர்ணாம்பட்டு வட்டம், எருக்கம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ஜானகிராமன் என்பவரின் மகள் செல்வி. கீர்த்தி மற்றும் முரளி என்பவரின் மகள் செல்வி பாவனா ஆகிய இருவரும் கொட்டாற்றில் குளித்துக் கொண்டிருந்த போது நீரில் மூழ்கி உயிரிழந்தனர் என்ற செய்தியையும்,  மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வட்டம், சோலைக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த முத்துப்பாண்டி என்பவர் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, மரம் விழுந்ததில் உயிரிழந்தார் என்ற செய்தியையும்,  

சென்னை மாவட்டம், திருவொற்றியூர் வட்டம், எர்ணாவூர் கிராமத்தைச் சேர்ந்த சேகர் என்பவரின் மகன் தமிழரசன் என்பவர் கடலில் குளிக்கும் போது, கடல் அலையில் சிக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும்,  கோயம்புத்தூர் மாவட்டம், அன்னூர் வட்டம், அன்னூர் வருவாய் கிராமத்தைச் சேர்ந்த மாதேஷ் என்பவரின் மகன் கதிரேசன், துரைசாமி என்பவரின் மகன் ரகுராம் மற்றும் முகுந்தராஜ் என்பவரின் மகன் பிரேனஷ் ஆகிய மூன்று பேரும் பவானி ஆற்றின் நீர்த்தேக்கப் பகுதியில் குளித்துக் கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தனர் என்ற செய்தியையும் அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன். 

சாலை விபத்து மற்றும் நீரில் மூழ்கி உயிரிழந்த 24 நபர்களின் குடும்பங்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.  மேற்கண்ட துயரச் சம்பவங்களில் உயிரிழந்த 24 நபர்களின் குடும்பங்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அந்த அறிக்கையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து