சென்னையில் போர்டிஸ் நிறுவனத்தின் புதிய மருத்துவமனையை திறந்து வைத்தார்: மருத்துவ துறையில் முன்னோடி மாநிலமாக தமிழகம் திகழ்கிறது: முதல்வர் எடப்பாடி பழனிசாமி பெருமிதம்

திங்கட்கிழமை, 26 அக்டோபர் 2020      தமிழகம்
EPS 2020 10 26

Source: provided

சென்னை : மருத்துவ துறையில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி பெருமிதத்துடன் கூறினார். 

சென்னை வடபழனியில் போர்டிஸ் ஹெல்த் கேர் நிறுவனத்தின் புதிய மருத்துவமனையை நேற்று முதல்வர்  எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.  இந்த விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது, 

நோயாளியின் உடலுக்கு ஏற்றவாறு மருத்துவம் செய்வதே சிறந்தது. மருத்துவப் பணி எப்படி இருக்க வேண்டும் என்ற இலக்கணத்தைத் தந்தவர் தெய்வப் புலவர் திருவள்ளுவர்.  போர்டிஸ் ஹெல்த் கேர் நிறுவனம், இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில் மருத்துவமனைகளை நிறுவி, மக்களுக்கு தரமான மருத்துவ சேவை வழங்கி வருவது பாராட்டுக்குரியது.

சென்னை அடையாறில் இந்த நிறுவனத்தின் மருத்துவனை ஏற்கனவே இயங்கி வருகிறது. இதனைத் தொடர்ந்து தற்போது வடபழனியில் அனைத்து நவீன வசதிகளும் கொண்ட ஒரு புதிய மருத்துவமனையைத் தொடங்கியிருப்பது, தமிழ்நாடு, இந்தியாவின் மருத்துவ தலைநகரம் என்று அழைக்கப்படுவதை மேலும் வலுவாக்குவதாக அமைந்துள்ளது.  

மக்கள் நம் பக்கம் இருக்கின்றார்களா என்பதை விட மக்களின் பக்கம் நாம் இருக்கிறோமா என்பதே எப்போதும் என்னுடைய சிந்தனையாக இருக்கிறது. என்னை நம்புகின்ற மக்களுக்கு என்னென்ன வழிகளில் எல்லாம் நன்மை செய்ய இயலுமோ அந்த வழிகளைப் பற்றியே நான் சதா சர்வகாலமும் சிந்தித்துக் கொண்டிருக்கிறேன்.

அதனால்தான் மக்களாகிய நீங்கள் எப்பொழுதுமே என் பக்கம் இருக்கிறீர்கள் என்றார் அம்மா.  அம்மாவின் வழியில் செயல்படும் அம்மாவின் அரசும், அனைவருக்கும் உயர்தர மருத்துவ சேவை கிடைக்கும் வகையில் மிகச் சிறந்த உட்கட்டமைப்பு வசதிகளைத் தொடர்ந்து ஏற்படுத்தி வருவதனால்தான், இந்தியாவிலேயே தமிழ்நாடு மருத்துவத் துறையில் ஒரு முன்னோடி மாநிலமாக  விளங்கி வருகிறது.

நலமான மாநிலமே, வளமான மாநிலம் என்ற கோட்பாட்டின் அடிப்படையில், ஏழை எளிய மக்களுக்கு உயர்தர மருத்துவ வசதிகள் கிடைக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில், மக்கள் வாழும் பகுதிகளுக்கு அருகிலேயே தரம் வாய்ந்த மருத்துவ வசதி கிடைக்க வழிவகை செய்தல், தொழில்நுட்ப வளர்ச்சியினை பயன்படுத்தி உயர்தர மருத்துவ வசதிகள் அளித்தல் போன்ற பல முன்னோடித் திட்டங்களை அம்மாவின் வழியில், தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது. 

அதன்படி முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம், வளர் இளம் பெண்களுக்கான சுகாதாரத் திட்டம், பிரசவ உடனாளர் திட்டம், அம்மா குழந்தை நல பரிசுப் பெட்டகம், அம்மா ஆரோக்கிய திட்டம், அம்மா மகப்பேறு சஞ்சீவித் திட்டம், அம்மா முழு உடல் பரிசோதனை திட்டம் உள்ளிட்ட பல்வேறு முன்னோடி திட்டங்களை அம்மாவின் அரசு செயல்படுத்தி வருகிறது.

11 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் செயல்படும் சிமாங்க் மையங்கள் வலுப்படுத்தப் பட்டுள்ளன.  தாய்சேய் நலப் பிரிவுகள் ஒப்புயர்வு மையங்களாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன.   டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவி திட்டத்தின் கீழ் தகுதி வாய்ந்த கர்ப்பிணித் தாய்மார்களுக்கு இரண்டு பேறுகாலம் வரை 18,000 ரூபாய் நிதி உதவியாக வழங்கப்படுகிறது.

இந்தியாவிலேயே அதிக அளவாக தமிழ்நாட்டில் மட்டுமே சுமார் 99.9 சதவீத பிரசவங்கள் மருத்துவமனைகளில் நடைபெறுவது இத்திட்டத்தின் வெற்றியை காட்டுகிறது. 

கடந்த ஆண்டில் தமிழ்நாட்டில் குழந்தை இறப்பு விகிதம் 16–ல் இருந்து 15 ஆகவும், பேறுகாலத்தில் தாய்மார்களின் இறப்பு விகிதத்தைப் பொறுத்தவரையில், 2030–-ல் அடைய வேண்டிய நீடித்த நிலையான இலக்குகளை இப்போதே அடைந்து விட்டோம் என்பது ஒரு சரித்திர சாதனையாகும். உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் தமிழ்நாடு 5 வருடங்களாக தொடர்ந்து தேசிய அளவில் மிகச் சிறந்த மாநில விருதைப் பெற்று வருகிறது. உடல் உறுப்பு தானத்தில் சிறந்த மருத்துவமனைக்கான விருது, சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு வழங்கப்பட்டுள்ளது. 

தேசிய தர உறுதி திட்டத்தின் கீழ், சிறந்த செயல்பாடுகளுக்காக தமிழ்நாட்டில் உள்ள 26 அரசு மருத்துவமனைகள் மற்றும் 47 ஆரம்ப சுகாதார நிலையங்களும் தேர்வு செய்யப்பட்டு, மத்திய அரசால் பாராட்டு சான்றிதழும் பரிசுத் தொகையும் வழங்கப்பட்டுள்ளன.   உயர்தர மருத்துவ சேவைகளை வழங்குவதில் மட்டுமல்லாது, மிகச் சிறந்த மனித வளம் மற்றும் கட்டமைப்பை ஏற்படுத்தித் தருவதிலும், தமிழ்நாடு இந்தியாவிலேயே ஒரு முன்மாதிரி மாநிலமாக திகழ்ந்து வருகின்ற காரணத்தினால், தமிழ்நாடு இந்தியாவின் மருத்துவ தலைநகரமாக விளங்குகின்றது.

மக்களுக்கு தரமான மருத்துவ சேவைகளை அளிப்பதில், அரசு மருத்துவமனைகளோடு, தனியார் மருத்துவமனைகளும் தமிழ்நாட்டில் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.

இன்றைக்கு தரமான மருத்துவ சிகிச்சை குறைந்த செலவில் பெறுவதற்காக, வெளி மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும், அதிக எண்ணிக்கையில் தமிழ்நாட்டிற்கு வருகின்றனர். இதன் மூலம், தமிழ்நாடு இந்தியாவின் மருத்துவ சுற்றுலாத் தலமாக விளங்கி வருகிறது. 

அது மட்டுமல்லாது, மிகச் சிறந்த மனித வளம் மற்றும் கட்டமைப்பை ஏற்படுத்துவதில் இந்தியாவிலேயே தமிழ்நாடு ஒரு முன்மாதிரி மாநிலமாக விளங்கி வருகிறது. 

மருத்துவம் நுண் கலையாகும். அது வணிகமன்று. ஒரு சேர இதயமும் மூளையும் ஒருமித்து பணியாற்றும் உன்னதமான பணியே மருத்துவமாகும். இதனை அடிப்படையாகக் கொண்டு, மருத்துவமனையை நாடி வரும் அனைத்து தரப்பு மக்களிடமும் அன்புடன் பழகி, அவர்களுக்கு உயரிய மருத்துவ சேவையை வழங்க வேண்டும் என்று  கேட்டுக் கொள்கின்றேன். 

இறைவன் எப்படி தன்னை நாடி வரும் மக்களிடம், வித்தியாசம் ஏதும் பாராமல், அவர்களின் குறையைத் தீர்க்கின்றானோ, அதேபோல் மருத்துவர்களும், தங்களை நாடி வரும் நோயாளிகளிடம் வித்தியாசம் ஏதும் பாராமல் அனைவருக்கும் தரமான மருத்துவ சேவையை வழங்கி, அவர்களது நோயைக் குணப்படுத்த வேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். 

சமீபத்தில் கொரோனா நோய்த் தொற்றின் பரவலை, மருத்துவத்துறையில் முன்னேறிய நாடுகள் என்று சொல்லப்பட்ட மேலைநாடுகளைவிட, குறுகிய காலத்தில் அதிகமாக கட்டுப்படுத்தி, மக்களைக் காப்பாற்றியது நமது நாட்டு மருத்துவர்கள்தான் என்பது நமக்கெல்லாம் பெருமை.  மாநிலத்தில் உள்ள மிகவும் ஏழையான ஒரு நோயாளிக்கு எத்தகைய மருத்துவ சிகிச்சை கிடைக்கின்றது என்பதைப் பொறுத்தே மாநிலத்தின் முழு சுகாதாரம் அளவிடப்படுகிறது.

எனவே, ஏழை, எளிய மக்களுக்கு உயரிய சிகிச்சைகள் தேவைப்பட்டு, அவர்கள் தனியார் மருத்துவமனைகளை அணுக வேண்டிய சூழ்நிலையில், அவர்களுக்கு தகுந்த சிகிச்சை அளித்து அவர்களை காப்பாற்ற, அம்மாவின் அரசு, முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறது.  இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார். 

இந்த விழாவில் அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர், மக்கள் நல்வாழ்வு துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், போர்டிஸ் ஹெல்த்கேர் நிறுவன மேலாண்மை இயக்குநர் டாக்டர் அஷூதோஷ் ரகுவன்ஷி, போர்டிஸ் ஹெல்த்கேர் குழும தலைமை இயக்க அதிகாரி அனில் வினாயக், போர்டிஸ் நிறுவனத்தின் சென்னை மண்டல இயக்குநர் சஞ்சய் பாண்டே ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து