ராமநாதபுரம் மாவட்டத்தில் மீனவர் பாதுகாப்பு மண்டலம் அமைக்கப்படுமா? - முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதில்

வெள்ளிக்கிழமை, 30 அக்டோபர் 2020      தமிழகம்
Edappadi 2020 10 30

Source: provided

ராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டத்தில் மீனவர் பாதுகாப்பு மண்டம் அமைவதற்கு வாய்ப்பு உள்ளதா என்பது குறித்து முதல்வர் எடப்பாடி பதிலளித்துள்ளார். 

இராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் கிராமத்திலுள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி  மலர் வளையம் வைத்து, மலர் தூவி மரியாதை செலுத்திய பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, 

எம்.ஜி.ஆர் தேவர் திருமகனாருடைய  பிறந்த தினமான அக்டோபர் 30-ம் தேதியை அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று அறிவித்து, 1979-ம் ஆண்டு முதல் இன்றுவரை ஆண்டுதோறும், பசும்பொன் கிராமத்தில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் தமிழ்நாடு அரசு சார்பாக அஞ்சலி செலுத்தப்பட்டு அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.

அம்மா 1994-ம் ஆண்டு சென்னை, நந்தனத்தில் தேவர் திருமகனாருக்கு முழு திருவுருவ வெண்கலச் சிலையை அமைத்து திறந்து வைத்ததோடு, பசும்பொன் கிராமத்தில் அமைந்துள்ள தேவர் திருமகனாரின் நினைவிடத்தை புனரமைத்திட ஆணையிட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டதால், இந்நினைவகம் புதுப்பொலிவுடன் இன்றைக்கு திகழ்கின்றது.

அ.தி.மு.க. சார்பாக தேவர் திருமகனார் திருவுருவச் சிலைக்கு தங்கக் கவசம் அணிவிக்கப்படும் என்று அம்மா 2010-ம் ஆண்டு அறிவித்து அதன்படி 9.2.2014 அன்று அம்மா பசும்பொன் கிராமத்திற்கு நேரடியாக வருகை தந்து, 13 கிலோ எடை கொண்ட தங்கக் கவசத்தினை தேவர் திருமகனார் திருவுருவச் சிலைக்கு அணிவித்து மரியாதை செலுத்தினார். 

தேவர் திருமகனாருக்கு அரசு விழா, சென்னை, நந்தனத்தில் முழு உருவ வெண்கலச் சிலை, பசும்பொன் நினைவிடத்திலுள்ள திருவுருவச் சிலைக்கு தங்கக் கவசம் என தேவர் திருமகனாருக்கு மென்மேலும் பெருமை சேர்க்கும் பணிகளை அ.தி.மு.க. தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

மேலும், அம்மாவின் அரசால், பசும்பொன் தேவர் திருமகனார் நினைவிடத்தில் அணையா விளக்கு, பால்குட மண்டபம், முளைப்பாரி மண்டபம், முடி காணிக்கை செலுத்த கட்டடம், குடிநீர் வசதி, பேவர் பிளாக் சாலை வசதி மற்றும் பொதுக் கழிப்பிட வசதி மற்றும் தேவர் திருமகனார் நினைவிடத்திற்கான அணுகுசாலை புதிதாக பேவர் பிளாக் சாலையாக மாற்றப்பட்டது என பல்வேறு பணிகளை தேவர் திருமகனாருடைய நினைவிடத்திற்கு அமைத்துத் தந்த அரசு அம்மாவின் அரசு.  முழுமையாக தேவர் அய்யாவுக்கு செய்தது அ.தி.மு.க. அரசுதான் என்று தெரிவித்தார். 

அதை தொடர்ந்து செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு முதல்வர்  எடப்பாடி பழனிசாமி பதிலளித்தார். அதன் விபரம் வருமாறு:-

கேள்வி:- தேவருடைய குருநாதரான நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பிறந்த நாளை தேச பக்த தினமாக அறிவிக்க வேண்டுமென்ற கோரிக்கை நீண்ட காலமாக இருந்து வருகிறது, அது பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படுமா?  

பதில்:- சுபாஷ் சந்திர போஸை  பற்றி சொன்னார்கள், அவரது பிறந்த நாளான ஜனவரி 23-ம் தேதி அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. 

கேள்வி:- இம்மாவட்டத்தில் எந்த விதமான தொழில் வளர்ச்சியும் இல்லை, தொழில் வளம் பெருகுவதற்கு வாய்ப்பு உள்ளதா?

பதில்:- அம்மா இருக்கின்றபொழுதே 2015-ம் ஆண்டு உலக முதலீட்டாளர் மாநாட்டை நடத்தி, அதுவும் தென் மாவட்டங்களில் குறிப்பாக பின்தங்கிய பகுதியில் இந்தத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டுமென்று அம்மா  அறிவித்து பல தொழிற்சாலைகள் வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அதே வழியில் வந்த அம்மாவின் அரசு, 2019-ம் உலக முதலீட்டாளர் மாநாட்டை நடத்தி பெரும்பாலான தொழில்கள், இதுபோன்ற பின்தங்கிய மாவட்டங்களில் துவங்குவதற்குண்டான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அதுமட்டுமல்ல, நான் ஏற்கனவே கொரோனா தடுப்பு பணி குறித்தும் மாவட்ட வளர்ச்சிப் பணி குறித்தும் இம்மாவட்டத்திற்கு வருகை தந்த போது தெரிவித்தேன். இந்த மாவட்டம், வளமாக, செழிப்பாக இருப்பதற்கு காவேரி-குண்டாறு என்ற மிகப் பெரிய திட்டம் நிறைவேற்றப்படும் என்று தெரிவித்தேன். 

இராமநாதபுரத்தில் மாவட்டத்தில் தான் அதிக ஏரிகள் இருக்கிறது.  இந்த அற்புதமான திட்டத்தையெல்லாம் இந்த மக்களுக்கு  வழங்குகின்ற அரசு அம்மாவினுடைய அரசு.  

கேள்வி:- இராமநாதபுரம் மாவட்டத்தில் விவசாயப் பணிகள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் போன்று, மீனவர் பாதுகாப்பு மண்டலமாக அமைப்பதற்கு வாய்ப்பு இருக்கிறதா?

பதில்:- இது வேறு, அது வேறு இரண்டையும் பிரித்துப் பார்க்க வேண்டும். வேளாண் மண்டலப் பகுதிகளில் தான் மீத்தேன், ஈத்தேன் போன்றவை எடுத்தார்கள் அதனால் விவசாயிகள் பாதிக்கப்படுவதாக, அங்குள்ள விவசாயிகள் தொடர்ந்து குரல் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். அதனால், அந்தப் பகுதிகளெல்லாம் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டது.

மீன்பிடி துறைமுகம் அமைக்கப்பட்டுள்ளது. கடல் சீற்றத்தைக் குறைப்பதற்கு ஆங்காங்கே தூண்டில் வளைவுகள் அமைக்கப்பட்டுள்ளன, தடுப்புச் சுவர் அமைக்கப்பட்டுள்ளது. அதற்காக அதிகமான நிதி ஒதுக்கீடு செய்தது அ.தி.மு.க. அரசுதான்,

அவற்றை நடைமுறைப்படுத்துகின்ற அரசும் அம்மாவின் அரசுதான். ஆழ்கடலில் மீன் பிடிப்பதற்கு கூட மீனவர்களுக்கு மத்திய அரசு, மாநில அரசு மானியம் வழங்கப்பட்டு, படகுகள் கொடுத்துக் கொண்டிருக்கிறோம். இப்படி பல வகைகளிலும் மீனவ சமுதாய மக்களுக்கு அம்மாவின் அரசு உதவி செய்து கொண்டிருக்கிறது.   இவ்வாறு அவர் தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து