பசும்பொன்னில் தேவர் குருபூஜை விழா: முதல்வர் - துணை முதல்வர் மலர்வளையம் வைத்து அஞ்சலி

வெள்ளிக்கிழமை, 30 அக்டோபர் 2020      தமிழகம்
CM 2020 10 30

Source: provided

ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் நடந்த தேவர் குருபூஜை விழாவில் அரசு சார்பில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

 ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவர் 113-வது ஜெயந்திவிழா மற்றும் 58-வது குருபூஜை விழா நேற்று நடைபெற்றது. விழாவையொட்டி அரசு சார்பில் முதல்வர்  எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் காலை 8.45 மணிக்கு பசும்பொன்னிற்கு நேரில் வந்து தேவர் நினைவிடத்தில்  மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

அவர்களுடன்  தமிழக அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் கே. ராஜு, காமராஜ், ஓ.எஸ். மணியன், விஜயபாஸ்கர், ஆர்.பி. உதயகுமார், பாஸ்கரன், தேனி பாராளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத், சட்டமன்ற உறுப்பினர்கள் ராமநாதபுரம் டாக்டர் மணிகண்டன், பரமக்குடி சதன்பிரபாகரன், திருவாடானை கருணாஸ், மாவட்ட செயலாளர் முனியசாமி, மாநில மகளிரணி இணை செயலாளர் கீர்த்திகா முனியசாமி, முன்னாள் எம்.பி.அன்வர்ராஜா ஆகியோர் தேவர் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். 

முன்னதாக ராமநாதபுரம் வந்த முதல்வர் துணை முதல்வர் ஆகியோரை மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் மலர்க்கொத்து கொடுத்து வரவேற்றார். மாவட்ட செயலாளர் முனியசாமி, மாநில மகளிரணி இணை செயலாளர் கீர்த்திகா முனியசாமி ஆகியோர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு வெள்ளிகுத்துவிளக்கு மற்றும் வீரவாள் கொடுத்து சிறப்பான வரவேற்பு அளித்தனர்.  

விழாவில் கலந்து கொண்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நிருபர்களிடம் கூறுகையில், பசும்பொன் முத்துரமலிங்கதேவர் குருபூஜை விழாவில் கலந்து கொள்வதில் பெருமை அடைகிறேன்.

ராமநாதபுரம் மாவட்டம் பாசும்பொன்னில் கடந்த 1908-ம் ஆண்டு தேவர்பெருமகனார் பிறந்தார். இந்திய சுதந்திர போராட்டத்தில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் தலைமையிலான இந்திய தேசிய ராணுவ படையில் சேர்ந்து பணியாற்றிய தியாகசெம்மல் அவர். கடந்த 1920-ம் ஆண்டு மதராஸ் மாகாண தேர்தலில் போட்டியிற்று வெற்றி பெற்றவர். திருநெல்வேலி, மதுரை போன்ற பல மாவட்டங்களில் உள்ள குற்றபரம்பரை சட்டத்தை எதிர்த்து சிறைக்கு சென்றவர்.

1932-ம் ஆண்டு நடைபெற்ற பராளமன்ற தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ராமநாதபுரம் மன்னரையே எதிர்த்து பேட்டியிட்டு வெற்றி பெற்றவர். 1946 நடைபெற்ற சென்னை மாகாணத்திலும் வெற்றிபெற்றார். கடந்த 1948-ல் இருந்து 1962 ஆண்டு வரை நடைபெற்ற அனைத்து தேர்தலில்களிலும் வெற்றி பெற்றார்.

ஆன்மிகத்தில் மிக சிறந்தது விளங்கிய முருக பக்தர் தேவர்திருமகனார் ஆவார். தேவர் ஜெயந்தினை அரசு விழாவாக அறிவித்தவர் முன்னாள் முதல்வர் டாக்டர். எம்.ஜி.ஆர். ஆவார். 1994-ம் ஆண்டு சென்னை நந்தனத்தில் வெண்கலசிலையினை அமைத்து தேவரின் புகழுக்கு மேலும் புகழ் சேர்த்து மரியாதை செய்தவர் ஜெயலலிதா ஆவார்.

தேவர் நினைவாலயம் புதுப்பொலிவுடன் திகழ நடவடிக்கை எடுத்த ஜெயலலிதா கடந்த 2014-ம் ஆண்டு தேவர் திருமாகனாருக்கு 13 கிலோ எடையுள்ள தங்ககவசத்தை அம்மா அணிவித்து மகிழ்ச்சி அடைந்தார். அன்று முதல் ஒவ்வொரு ஆண்டும் இந்த தங்க கவசம் தேவர் திருமகனாருக்கு அணிவிக்கப்பட்டு வருகிறது என்று கூறினார். 

விழாவில், கமுதி ஒன்றிய செயலாளர் காளிமுத்து, கடலாடி யூனியன் தலைவர் முத்துலட்சுமி முனியசாமி பாண்டியன், முதுகுளத்தூர் யூனியன் தலைவர் தர்மர் மற்றும் மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அஞ்சலி செலுத்த நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்ட அரசியல் கட்சியினர், சமுதாய அமைப்பினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.

கொரோனா பரவலையொட்டி 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்ததால் சமூக இடைவெளியுடன் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டனர். தேவர் குருபூஜை விழாவையொட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் தலைமையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் 8 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். பசும்பொன் கிராமத்தை சுற்றிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு தீவிர கண்காணிப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து