பீகாரில் தே.ஜ. கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. முதல்வராக நிதிஷ்குமார் 7-வது முறையாக பதவி ஏற்க உள்ளார். இந்நிலையில் வாக்களித்த மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய பீகார் சட்டப் பேரவைத் தோதலில் பா.ஜ.க.-ஐக்கிய ஜனதா தளம் (ஜே.டி.யூ) உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. அங்கு மீண்டும் நிதீஷ் குமார் தலைமையில் ஆட்சி அமையவுள்ளது.
மொத்தமுள்ள 243 தொகுதிகளில் 122 தொகுதிகளில் வென்றால் ஆட்சி அமைக்கலாம் என்ற நிலையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 125 இடங்களில் வெற்றி பெற்றது. இதை எதிர்த்து போட்டியிட்ட மெகா கூட்டணி 113 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
பீகாரில் தேசிய ஜனநாயகக் கூட்டணி மீண்டும் வெற்றி பெற்ற நிலையில், பிரதமர் மோடி அம்மாநில வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
இது குறித்து பிரதமர் மோடி டுவிட்டரில் வெளியிட்ட பதிவு வருமாறு:-
ஜனநாயகத்தின் முதல் பாடத்தை பீகார் உலகிற்கு கற்றுத் தந்தது. ஜனநாயகம் எவ்வாறு வலுப்படுத்தப்படுகிறது என்பதை பீகார் மீண்டும் உலகிற்கு தெரிவித்துள்ளது. பா.ஜ.க கூட்டணி வெற்றிபெற வாக்களித்த பெண்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
வாக்காளர்கள் வளர்ச்சிக்கான தீர்க்கமான முடிவை வழங்கி உள்ளனர். பீகாரின் வளர்ச்சிக்கு இளைஞர்கள் வழிகாட்டியுள்ளனர். பீகார் இளைஞர்கள் தங்கள் பலத்தையும் தேசிய ஜனநாயக கூட்டணியின் தீர்மானத்தையும் நம்பியுள்ளனர். இளைஞர்களின் இந்த ஆற்றல் தேசிய ஜனநாயக கூட்டணியை முன்பை விட கடினமாக உழைப்பதற்கு ஊக்குவித்துள்ளது. பீகாரில் உள்ள ஒவ்வொரு வாக்காளரும் வளர்ச்சி மட்டுமே தங்களின் ஒரே முன்னுரிமை என்று தெளிவாகக் கூறியிருக்கிறார்கள். பீகாரின் கனவுகளையும் எதிர்பார்ப்புகளையும் இது காட்டுகிறது.
இவ்வாறு பிரதமர் கூறி உள்ளார்.