வர்த்தகவாரத்தின் துவக்கத்தின் முதல் நாளே முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக பங்குச்சந்தைகள் நல்ல ஏற்றத்துடன் துவங்கியதோடு இந்திய பங்குச்சந்தைகள் புதிய உச்சத்தை தொட்டன.
நேற்றைய வர்த்தகநேர துவக்கத்தில் மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 477.70 புள்ளிகள் உயர்ந்து, புதிய உச்சமாக 49,260.21ஆகவும், தேசிய பங்குச்சந்தையின் நிப்டி 126.80 புள்ளிகள் உயர்ந்து 14,474.05ஆகவும் வர்த்தகமானது.
அமெரிக்காவின் புதிய நிதி ஊக்கத் திட்டங்கள் இந்தவாரம் வெளியாக உள்ளன. இது உலகளாவிய பணவீக்க வர்த்தகத்திற்கு உத்வேகமாக அமைந்துள்ளதன் காரணமாக ஆசிய பங்குச்சந்தைகள் கடந்த 10 மாதங்களில் இல்லாத அளவுக்கு அதன் சந்தை மதிப்பு ஏற்றம் கண்டன. இதன் தாக்கம் இந்திய பங்குச்சந்தைகளிலும் எதிரொலித்ததால் நேற்றைய வர்த்தகம் புதிய உச்சத்தை தொட ஒரு காரணமாக அமைந்தது. மேலும் இன்போசிஸ், ஹெச்சிஎல்., டெக்னாலஜி, பார்தி ஏர்டெல், ஐடிசி, எச்டிஎப்சி, உள்ளிட்ட முன்னணி நிறுவன பங்குகள் அதிக ஏற்றம் கண்டதாலும் நேற்றைய வர்த்தகம் ஏற்றம் கண்டன.