9, 10, 11-ம் வகுப்பு மாணவர்களுக்குப் பொதுத்தேர்வு கிடையாது எனவும், தேர்வுகள் இன்றி அனைவருக்கும் தேர்ச்சி வழங்கப்படும் எனவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு முதல் முறையாக அமல்படுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் காலவரையறையின்றி மூடப்பட்டன. தொடர்ந்து கொரோனா வைரஸ் வேகமாகப் பரவியதால் 2020- 21ஆம் கல்வி ஆண்டுக்காகக் கடந்த ஜூன் மாதத்தில் பள்ளிகள் திறக்கப்படவில்லை. எதிர்பாராத தொடர் விடுமுறை காரணமாக மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காகப் பள்ளி மாணவர்களுக்கு, கல்வித் தொலைக்காட்சி மற்றும் இணையவழியில் பாடங்கள் நடத்தப்பட்டன.
இந்த நிலையில் கொரோனா பாதிப்புகள் படிப்படியாகக் குறைந்து வந்த நிலையில், ஊரடங்கில் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து, 10, 12-ம் வகுப்புகளுக்கு மட்டும் ஜனவரி 19-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டன. கடந்த 8-ம் தேதி முதல் 9, 11-ம் வகுப்பு மாணவர்களுக்குப் பள்ளிகள் திறக்கப்பட்டு இயங்கி வருகின்றன.
இதற்கிடையே மே மாதம் 3-ம் தேதி 12-ம் வகுப்புப் பொதுத்தேர்வு தொடங்கும் என்று அண்மையில் அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து கற்றல் இழப்பால் பிற வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வு இன்றித் தேர்ச்சி வழங்க வேண்டும், குறைந்தபட்சம் தேர்வுகளைத் தள்ளி வைக்க வேண்டும் என்று கல்வியாளர்களும் பெற்றோர்களும் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில் 9, 10, 11-ம் வகுப்பு மாணவர்களுக்குப் பொதுத்தேர்வு கிடையாது எனவும் தேர்வுகள் இன்றி அனைவருக்கும் தேர்ச்சி வழங்கப்படும் எனவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இது தொடர்பாக நேற்று சட்டசபை கூட்டத் தொடரில் விதி எண் 110-ன் கீழ் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
2020-21ஆம் கல்வியாண்டில் கொரோனா நோய்த் தொற்றுப் பரவலைத் தடுப்பதற்காகப் பள்ளிகள் மூடப்பட்டு, கொரோனா நோய்த் தொற்று ஓரளவிற்கு கட்டுப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, கடந்த ஜனவரி 19-ம் தேதி முதல், 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டன. அனைத்து மாணவர்களுக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஏதுவாக சத்து மாத்திரைகள் வழங்கப்பட்டன. இந்த கல்வியாண்டு முழுவதும் மாணாக்கர்கள் கல்வித் தொலைக்காட்சி மூலமாக மட்டுமே கல்வி பயின்று வந்தனர். மாணாக்கர்கள் தொலைக்காட்சி மூலமாகவும், இணையதளம் மூலமாகவும் கல்வி பயின்று வருவதில் ஏற்படும் சிரமங்களைக் கருத்தில் கொண்டு, பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டன.
மேலும், இந்த கல்வியாண்டில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் எதிர்கொண்ட அசாதாரண சூழ்நிலையைக் கருத்தில் கொண்டும், பெற்றோர்களின் கோரிக்கையைக் கருத்தில் கொண்டும், கல்வியாளர்களின் கருத்துகளைப் பரிசீலித்தும், 2020-21ஆம் கல்வியாண்டில் 9, 10 மற்றும் 11-ம் வகுப்பு மாணாக்கர்கள் அனைவரும், முழு ஆண்டுத் தேர்வுகள் மற்றும் பொதுத் தேர்வுகள் ஏதுமின்றித் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுகிறது. மாணவர்களுக்கான மதிப்பெண் மதிப்பீட்டு நெறிமுறைகள் அரசினால் விரிவாக வெளியிடப்படும். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். தமிழகத்தில் 9, 10, 11-ம் வகுப்பு மாணவர்கள் ஆல் பாஸ் என்ற அறிவிப்பு வெளியான நிலையில் இன்று முதல் 9 முதல் 11ம் வகுப்பு மாணவர்கள் பள்ளிகளுக்கு வர வேண்டாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது. மேலும் முதல்வரின் இந்த அறிவிப்பு சி.பி.எஸ்.இ. மாணவர்களுக்கு பொருந்தாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.