முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சீன தயாரிப்பு தடுப்பூசி போட்ட நிலையில் இம்ரான்கான் மனைவிக்கும் கொரோனா: தனிமைப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 21 மார்ச் 2021      உலகம்
Image Unavailable

Source: provided

இஸ்லாமாபாத் : சீன தயாரிப்பு தடுப்பூசி போட்ட நிலையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் மற்றும் அவரது மனைவிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் உள்ளனர். 

கடந்த சில நாட்களுக்கு முன் சீனா தயாரித்த சினோஃபார்ம் என்ற கொரோனா தடுப்பூசியை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் போட்டுக் கொண்ட நிலையில், அடுத்த 2 நாட்களில் அவருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

68 வயதாகும் இம்ரான்கான் அடிக்கடி கூட்டங்கள், அலுவலக ரீதியான சந்திப்புகளில் அதிகாரிகளுடன் பங்கேற்று வந்தார். சமீபத்தில் இஸ்லாமாபாத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற இம்ரான்கான் முகக்கவசம் இன்றி புதிய வீட்டுவசதித் திட்டத்தையும் தொடங்கி வைத்தார்.

தற்போது அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதால் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் உள்ளார். பாகிஸ்தானில் கொரோனா வைரஸ் பரவல் வேகமெடுத்து வரும் நிலையில் இதுவரை 6.15 லட்சம் பேர் வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். 13,700 பேர் உயிரிழந்துள்ளனர். பிரிட்டனில் கண்டறியப்பட்ட உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் பாகிஸ்தானில் வேகமாகப் பரவி வருகிறது. இம்ரான்கானின் அரசியல் தொடர்பு உதவியாளர் ஷாபாஸ் கில் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், பிரதமருக்கு கொரோனா அறிகுறிகள் தீவிரமாக இல்லை. 

தற்போது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். லேசான இருமல், காய்ச்சல் மட்டுமே இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், இம்ரான் கானுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட சில மணி நேரங்களில் அவரது மனைவியும் நாட்டின் முதல் பெண்மணியுமான புஷ்ரா பீபிக்கும் கொரோனா பாசிடிவ் உறுதிசெய்யப்பட்டுள்ளது.

அவரும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டு தீவிர மருத்துவ கண்காணிப்பில் உள்ளார். இதற்கிடையில், இந்திய பிரதமர் மோடி கொரோனா தொற்றில் இருந்து இம்ரான் கான் விரைவில் குணமடைய வேண்டும் என்று டுவிட் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து