முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

4 நாட்களுக்கு தடுப்பூசி திருவிழா : நடத்த பிரதமர் மோடி வலியுறுத்தல்

வெள்ளிக்கிழமை, 9 ஏப்ரல் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அடுத்த 2 முதல் 3 வாரங்களுக்கு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்குமாறு மாநில முதல்வர்களை பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டுள்ளார். 

கொரோனா நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவது குறித்து அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் மாலை காணொலி வழியில் ஆலோசனை நடத்தினார். அப்போது மாநிலங்களின் தொற்று நிலவரம், மேற்கொள்ளப்பட்டு வரும் தடுப்பு நடவடிக்கைகள், தடுப்பூசி பணிகள் போன்றவை குறித்து கேட்டறிந்த பிரதமர், தொற்றுக்கு எதிராக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைத்தார்.  பின்னர் அவர் பேசியதாவது:–

நாம் இப்போது மீண்டும் சவாலான சூழ்நிலையில் உள்ளோம். நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா 2-வது அலையை நாம் எதிர்த்து போராட வேண்டும். கொரோனா நோய்த் தொற்று தாக்கத்தை எதிர்கொள்ள முன்பைவிட அதிக வளங்களை நாடு பெற்றிருக்கிறது. ஆனால், கொரோனா பாதிப்பு முதல் அலையின் அதிகபட்ச பாதிப்பை இந்தியா இப்போது கடந்திருக்கிறது.

மகராஷ்டிரா, குஜராத், சத்தீஸ்கார், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா முதல் அலையில் ஏற்பட்ட பாதிப்பை விட 2-வது அலையில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது மிகவும் கவலையளிக்கும் நிலைமை. ஆனால் பொதுமக்களோ மிகவும் சகஜமாக உள்ளனர்.  அடுத்த 3 வாரங்களுக்கு நாம் கட்டுப்பாடு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும். மாநில அரசுகள் கட்டப்பாட்டு பகுதிகளை தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும். இரவு நேர ஊரடங்கைக் கடைபிடிக்கலாம்.

இரவு நேர ஊரடங்கு உலகளவில் ஏற்கப்பட்ட தடுப்பு நடவடிக்கையாகி விட்டது. இரவு ஊரடங்கால் தொழிலும் பெரிதும் பாதிக்காது.  கொரோனா பரவலை திறம்பட கட்டுப்படுத்துவதற்கு பரிசோதனை, பரவல் காரணத்தைக் கண்டறிதல், சிகிச்சை, கொரோனா பாதுகாப்பு நடைமுறை மற்றும் தடுப்பூசி செலுத்துதல் என்ற 5 அடுக்கு திட்டத்தை மாநிலங்கள் நடைமுறைப்படுத்த வேண்டும்.  இந்த சூழலை கையாளுவதற்கு பொதுமக்களின் பங்களிப்புடன், நமது தலைசிறந்த டாக்டர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் மிகப்பெரும் உதவியை செய்துள்ளனர். தற்போதும் செய்து வருகின்றனர். 

கொரோனாவுக்கு எதிரான ஆளுகை பல மாநிலங்களில் குறைந்துள்ளதால் தொற்று அதிகரித்து பிரச்சினைகள் பெருகியுள்ளன. எனவே வைரஸ் பரவலை தடுக்க போர்க்கால அடிப்படையிலான நடவடிக்கைகள் அவசியம்.  குறிப்பாக, கொரோனா பரிசோதனையை மாநிலங்கள் தீவிரப்படுத்த வேண்டும். ஒரு நபருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட உடன், அடுத்த 72 மணி நேரத்தில் அவருடன் தொடர்பில் இருந்த 30 நபர்களை அடையாளம் காண்பதை இலக்காக கொண்டு நாம் செயல்பட வேண்டும். கொரோனா பாதிப்பு விகிதத்தை 5 சதவீதத்துக்கும் கீழ் கொண்டுவர மாநிலங்கள் முயற்சிக்க வேண்டும்.

அதிகபட்ச பயனாளர்களுக்கு தடுப்பூசி சென்றடையும் வகையில் வருகிற 11-ம் தேதி முதல் 14-ம் தேதிக்கு இடையில் ஒரு தடுப்பூசி திருவிழாவை மாநிலங்கள் நடத்த வேண்டும்.  தடுப்பூசியைப் பொறுத்தவரை எந்தெந்த மாநிலங்களில் அதிக தேவை இருக்கிறதோ அதற்கேற்ப அவற்றை விநியோகிக்க வேண்டும். ஒரே மாநிலத்தில் தடுப்பூசிகளைத் தேக்கி வைத்துக் கொள்வதில் எந்தப் பயனும் இல்லை. மாநில அரசுகள் கொரோனா தடுப்பு விழிப்புணர்வுப் பிரச்சாரங்களை மீண்டும் பெரியளவில் முன்னெடுக்க வேண்டும்.  இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், தமிழக முதல்வருக்கு பதிலாக தலைமைச்செயலாளர் ராஜீவ் ரஞ்சன், சென்னை தலைமைச்செயலகத்தில் இருந்தபடி இந்த கூட்டத்தில் பங்கேற்றார். கொரோனா தடுப்பிற்காக தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளை பிரதமரிடம் ராஜீவ் ரஞ்சன் எடுத்துரைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் போலீஸ் டிஜி.பி. ஜே.கே.திரிபாதி, வருவாய் நிர்வாக ஆணையர் பணீந்திர ரெட்டி, சுகாதாரத்துறை முதன்மைச்செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு மருத்துவப்பணிகள் கழக மேலாண்மை இயக்குனர் டாக்டர் பி.உமாநாத், பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்புத் துறை இயக்குனர் டாக்டர் செல்வவிநாயகம், இணை இயக்குனர் டாக்டர் வினய் ஆகியோர் பங்கேற்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து